ஷுபம் துபே – ராஜஸ்தான் அணி மிடில் ஆர்டர் பேட்டிங் நம்பிக்கை | ஐபிஎல் 2024 வல்லவர்கள்

அடுத்த சில நாட்களில் தொடங்க உள்ள ஐபிஎல் 2024 சீசனுக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் வாங்கியுள்ள வீரர்தான் ஷுபம் துபே. உள்ளூர் கிரிக்கெட்டில் விதர்பா அணிக்காக மிடில் ஆர்டரில் விளையாடி வரும் இடது கை பேட்ஸ்மேன். அவரை ரூ.5.8 கோடிக்கு வாங்கியுள்ளது ராஜஸ்தான். கடந்த ஆண்டு நடைபெற்ற சையத் முஷ்தாக் அலி கோப்பை தொடரில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 187 என்பது குறிப்பிடத்தக்கது.

IPL 2024: Players to Watch out | ராஜஸ்தான் ராயல்ஸின் மிடில் ஆர்டர் பேட்டிங் நம்பிக்கை - ஷுபம் துபே

ராஜஸ்தான் ராயல்ஸ்: முதலாவது ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது ராஜஸ்தான். அதன்பிறகு இதுவரை நடந்து முடிந்த சீசன்களில் மூன்று முறை பிளே ஆஃப் சுற்றுக்கும், கடந்த 2022-ல் இரண்டாம் இடமும் பிடித்தது. இந்தச் சூழலில் புதுப்பொலிவுடன் நடப்பு சீசனை எதிர்கொள்கிறது சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி. டிசம்பரில் நடைபெற்ற ஏலத்தில் 5 வீரர்களை வாங்கி இருந்தது.

பேட்டிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர், கேப்டன் சஞ்சு சாம்சன், ஹெட்மயர், ரோவ்மேன் பவெல், துருவ் ஜுரல், ரியான் பராக் உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர். தேவ்தத் படிக்கலை லக்னோ வசம் டிரேட் செய்து பந்து வீச்சாளர் ஆவேஷ் கானை வாங்கியுள்ளது. பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணா, அஸ்வின், போல்ட், சஹல், ஆடம் சாம்பா, குல்தீப் சென், சைனி, சந்தீப் சர்மா, பெர்கர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அந்த அணியின் பேட்டிங் ஆர்டரில் டாப் ஆர்டர் மற்றும் பின்வரிசையில் (ஃபினிஷர்) பலம் வாய்ந்த பவர் ஹிட்டர்கள் உள்ளனர். ஆனால், கடந்த சில சீசன்களாக நடுவரிசையில் நிலைத்து ஆடி, ரன் குவிக்கும் பேட்ஸ்மேன்கள் இல்லாத குறை இருந்தது. அதனால் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விரைந்து விக்கெட்டை இழந்தால் அணிக்கு அது சங்கடம் தரும் வகையில் அமைந்து விடுகிறது. அதை போக்கும் வகையில் ஷுபம் துபே வாங்கப்பட்டு உள்ளார்.

ஷுபம் துபே: நாக்பூரை சேர்ந்த வீரர். எளிய குடும்ப பின்புலம் கொண்டவர். கடந்த ஆண்டு நடைபெற்ற சையத் முஷ்தாக் அலி தொடர் மூலமாக லைம்லைட்டுக்குள் வந்தார். அந்த தொடரில் 7 இன்னிங்ஸ் ஆடி 221 ரன்கள் எடுத்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் கிட்டத்தட்ட 190-னை அந்த தொடரில் நெருங்கி இருந்தது. வங்காள அணிக்கு எதிரான போட்டியில் இம்பேக்ட் வீரராக பேட்டிங் வரிசையில் 5-வது வீரராக களம் கண்டு 20 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். அதன் மூலம் விதர்பா அணி 213 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக விரட்டி இருந்தது.

அந்த தொடரில் 118 பந்துகளை எதிர்கொண்ட அவர் 10 பவுண்டரி மற்றும் 18 சிக்ஸர்களை விளாசி இருந்தார். இதில் 4 முறை நாட்-அவுட் பேட்ஸ்மேனாக இருந்துள்ளார். கேம் சேஞ்சிங் கேமியோ இன்னிங்ஸ் ஆடும் திறன் கொண்டவர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளூர் அளவில் நடைபெறும் பாபுனா கோப்பை தொடரில் அபாரமாக செயல்பட்டவர். அந்த தொடரில் அவரது சிக்ஸர் விளாசும் திறனுக்காக டேலண்ட் ஹன்டிங் ஸ்க்வாட்களின் கவனத்தை பெற்றார். அந்த தகவல் ராஜஸ்தான் அணிக்கு பறக்க டிரையல் வைத்து அவரது திறனை சோதித்து, ஏலத்திலும் வாங்கி உள்ளது. படிக்கல் இல்லாத நிலையில் அணியின் இந்திய பேட்ஸ்மேனாக துபே இருப்பார் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

“சையத் முஷ்தாக் அலி தொடரில் சிறப்பாக விளையாடி இருந்தேன். அதனால் ஏலத்தில் நான் வாங்கப்படுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், இவ்வளவு பெரிய தொகைக்கு நான் வாங்கப்படுவேன் என எதிர்பார்க்கவில்லை. இதன் மூலம் எனக்கான பொறுப்பு கூடியுள்ளது. அணி நிர்வாகம் என்னிடமிருந்து எதிர்பார்க்கும் ஆட்டத்தை நிச்சயம் வெளிப்படுத்துவேன்” என ஷுபம் துபே தெரிவித்துள்ளார்.

முந்தையப் பகுதி: ரச்சின் ரவீந்திரா – மஞ்சள் படையின் ரட்சகன் I ஐபிஎல் 2024 வல்லவர்கள்

'+divToPrint.innerHTML+'