Last Updated : 14 Mar, 2024 06:20 AM
Published : 14 Mar 2024 06:20 AM
Last Updated : 14 Mar 2024 06:20 AM
நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மீண்டும் ஒரு முறை பட்டம் வெல்லும் முனைப்பில் எம்.எஸ்.தோனி தலைமையிலேயே களமிறங்குகிறது. ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணியாக வலம் வரும் சிஎஸ்கே 5 முறை பட்டம் வென்றுள்ளது. இதுவரை அந்த அணி பங்கேற்ற 14 சீசன்களில் 12 முறை நாக் அவுட் சுற்றில் நுழைந்துள்ளது. முழங்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள தோனி புத்துணர்ச்சியுடன் திரும்பி உள்ளார்.
இந்த சீசனுக்காக சிஎஸ்கே 6 வீரர்களை புதிதாக ஏலம் எடுத்திருந்தது. இதில் அதிகபட்சமாக நியூஸிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல்லை ரூ.14 கோடிக்கு வாங்கியது. நடுவரிசையில் அம்பதி ராயுடு இடத்தை டேரில் மிட்செல் பூர்த்தி செய்யக்கூடும். நியூஸிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான ரச்சின் ரவீந்திராவை ரூ.1.8 கோடிக்கு வாங்கி உள்ளது சிஎஸ்கே. டேவன் கான்வே காயம் காரணமாக விளையாட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளதால் அவரது இடத்தை ரச்சின் ரவீந்திரா நிரப்பக்கூடும்.
இவர்களுடன் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இளம் பேட்ஸ்மேன் சமீர் ரிஸ்வி ரூ.8.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். யுபி டி20 லீக், சையது முஸ்டாக் அலி தொடரில் தனது அதிரடி பேட்டிங்கால் அனைவரது கவனத்தையும் ஈர்த்த சமீர் ரிஸ்வி இம்முறை ஐபிஎல் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
2018, 2021-ம் ஆண்டு சீசனில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய மிதவேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஷர்துல் தாக்குர் மீண்டும் திரும்பி உள்ளார். சமீபத்தில் இவர், ரஞ்சி கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் மும்பை அணிக்காக சதம் விளாசியிருந்தார். விதர்பா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இறுதிப் போட்டியிலும் 75 ரன்கள் விளாசி அணியை சரிவில் இருந்து மீட்டு இருந்தார்.
42 வயதாகும் தோனிக்கு ஐபிஎல் தொடர் இதுவே கடைசி சீசனாக இருக்கக்கூடும் என்ற பேச்சு வழக்கம் போன்று உலாவுகிறது. இது ஒருபுறம் இருக்க இந்த சீசனில் புதிய ரோலை ஏற்கப் போவதாகவும் தோனி சமூக வலைதளத்தில் பூடகமாக கூறியிருந்தார். இது ஒட்டுமொத்தமாக ரசிகர்கள் மத்தியில் வழக்கத்தை விட அதிக எதிர்பார்ப்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
FOLLOW US
தவறவிடாதீர்!
நன்றி
Publisher: www.hindutamil.in