WPL எலிமினேட்டர் | மும்பையை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது ஆர்சிபி!

புதுடெல்லி: நடப்பு மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்தப் போட்டியில் 5 ரன்களில் வெற்றி பெற்றது ஆர்சிபி.

டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு செய்தாகது. 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது அந்த அணி. எல்லிஸ் பெர்ரி, 50 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 8 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் இதில் அடங்கும். இருந்தும் ஆர்சிபி அணியின் மற்ற வீராங்கனைகள் ரன் சேர்க்க தவறினர். 10 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து வேர்ஹேம் ஆறுதல் தந்தார்.

136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி விரட்டியது. ஹெய்லி மேத்யூஸ் 15, யாஸ்திகா 19, நாட் ஸ்கிவர் 23, கேப்டன் ஹர்மன்ப்ரீத் 33, சஜனா 1, பூஜா 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்தப் போட்டியில் சரியான தருணத்தில் விக்கெட்களை வீழ்த்தி மும்பைக்கு நெருக்கடி தந்தது ஆர்சிபி. அதன் காரணமாக 5 ரன்களில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது ஆர்சிபி.

வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் டெல்லி அணியுடன் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளது ஆர்சிபி. அணியின் கூட்டு முயற்சி காரணமாக இந்த வெற்றியை சாத்தியமாக்கி உள்ளது ஆர்சிபி.