ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த லுங்கி நிகிடி முதுகு வலி காரணமாக இந்த சீசனில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளம் அதிரடி பேட்ஸ்மேனான ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க்கை அணியில் சேர்த்துள்ளது டெல்லி கேபிடல்ஸ். ஜேக் ஃப்ரேசர் அவரது அடிப்படை விலையான ரூ.50 லட்சத்துக்கே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
21 வயதான ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டியில் தெற்கு ஆஸ்திரேலியா அணிக்காக களமிறங்கி டாஸ்மேனியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 29 பந்துகளில் சதம் விளாசி மிரட்டியிருந்தார். இதன் மூலம் லிஸ்ட் ஏ போட்டியில் டி வில்லியர்ஸ் 31 பந்துகளில் சதம் விளாசிய சாதனையை தகர்த்திருந்தார்.
கடந்த மாதம் மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக களமிறங்கிய ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் 18 பந்துகளில் 41 ரன்கள் விளாசி அசத்தியிருந்தார்.