ஒரு நாள், டி20 சர்வதேசப் போட்டிகளில் புதிய முறை: ஐசிசியின் கெடுபிடி அறிமுகம்!

சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஸ்டாப் கிளாக் முறையை ஐசிசி அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஓவர்கள் வீசப்படும் நேரம், ஆட்ட நேரங்களைத் துல்லியமாகக் கணக்கிட முடியும். இந்த ஸ்டாப் கிளாக் முறையை ஐசிசி கட்டாயமாக்கியுள்ளது.

இந்தப் புதிய விதிமுறைப்படி ஒரு ஓவருக்கும் இன்னொரு ஓவருக்கும் இடையேயான இடைவெளி 60 விநாடிகளுக்கு மிகக் கூடாது, அதாவது ஒரு ஓவர் முடிந்து அடுத்த ஓவரை 60 விநாடிகளுக்குள் வீசத் தொடங்கி விட வேண்டும். 60 முதல் பூஜ்ஜியம் வரை எண்ணும் எலக்ட்ரானிக் கடிகாரம் ஸ்கீரினில் காட்டப்படும். இந்த நேரக்கட்டுப்பாட்டை 2 முறை மீறினால் பந்துவீச்சு அணிக்கு 5 ரன்கள் அபராதமாக விதிக்கப்படும் அதாவது பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் கொடுக்கப்படும்.

இந்த விதி நடப்பாண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருடன் அமலுக்கு வர உள்ளது. அதன்பின் நடைபெற உள்ள அனைத்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்த விதி கட்டாயமாகவுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இந்த புதிய விதிமுறை சோதனை ஓட்டமாக நடைபெற்று வந்தது. இந்தப் புதிய விதிமுறைகளின் சோதனை ஓட்ட முடிவில் வந்தடைந்த முடிவு என்னவெனில் ஒருநாள் போட்டிகளில் சுமார் 20 நிமிடங்கள் மிச்சப்படுத்தப்படுகிறது. ஸ்டாப் கிளாக்குடன் கூடுதலாக, ஒருநாள் மற்றும் டி20 ஆகிய குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் ஓவர் வீசப்படும் வேகத்தைக் கண்காணிக்க இரண்டு அபராதங்கள் விதிமுறைகளில் உள்ளன . அவை: பீல்டிங் பெனால்டி மற்றும் பண அபராதம்.

தவிர்க்க முடியாத தாமதங்கள் குறித்த நடுவர்களின் கருத்துக்களையும் கணக்கில் எடுத்துக் கொண்ட பிறகு, ஒவ்வொரு ஓவருக்கும் அணியின் போட்டிக் கட்டணத்தில் 5% குறைப்பு என்பது பண அபராதத்தில் அடங்கும். கேப்டனுக்கான அபராதம் அவரது அணி வீரர்களை விட இரட்டிப்பாகும், மேலும் அபராதம் போட்டி கட்டணத்தில் 50% வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடக்கும் 2024 டி20 உலகக் கோப்பைப் போட்டிகளில் தாமதங்கள் மற்றும் குறுக்கீடுகளோ மழையால் ஆட்டம் முழுதும் நடைபெற முடியாமல் போனாலோ அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு ரிசர்வ் நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த நாக் அவுட் கேம்கள் ஒவ்வொன்றும் ஒரு இன்னிங்ஸிற்கு குறைந்தபட்சம் 10 ஓவர்கள் ஆடப்பட்டிருந்தால் அது நிறைவடைந்த போட்டியாக எடுத்துக் கொள்ளப்படும்.

குரூப் ஸ்டேஜ் போட்டிகளில் குறைந்தது 5 ஓவர்கள் நடைபெறும் ஆட்டமே ஒரு முழு ஆட்டமாகக் கருதப்படும். இந்த மாற்றங்களில் ஸ்டாப் கிளாக் திட்டம் போட்டிகளில் தேவையற்ற தாமதங்களைக் குறைக்கும். பீல்டிங் செட் அப் செய்கிறேன் என்று கேப்டன்கள் அதிக நேரம் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும் மேலும் அனாவசியமான காலதாமதங்களையும் தவிர்க்கவே இந்தப் புதிய விதிமுறை.