தோனியை ஈர்த்து சிஎஸ்கே-வில் நெட் பவுலர் ஆன 17 வயது இலங்கை வீரர்!

சென்னை: யார்க்கர் பந்துவீச்சால் தோனியை ஈர்த்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நெட் பவுலராக இடம் பிடித்துள்ளார் இலங்கை வீரர் குகதாஸ் மதுலன்.

17வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் ஆறு நாட்களில் தொடங்கவுள்ளது. மார்ச் 22ம் தேதி நடக்கும் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்த்து களமிறங்கவுள்ளது. இதற்காக இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

தொடருக்கு முன்னதாக ஒவ்வொரு வீரருக்கும் இந்த பயிற்சி முகாம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சென்னை அணியின் பயிற்சி முகாமில் 17 வயதே ஆன இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் இணைந்துள்ளார். அவர் பெயர் குகதாஸ் மதுலன்.

ஜாஃப்னா மலிங்கா என அழைக்கப்படும் இவர், இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவை போல் பவுலிங் ஆக்சனில் பந்துவீசுவதால் இந்தப் பெயரில் அழைக்கப்படுகிறார். சமீபத்தில் நடைபெற்ற புனித ஜோன்ஸ் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் இடையிலான போட்டியின் போது குகதாஸ் மதுலனின் பந்துவீச்சு வைரலானது.

இந்தப் போட்டியின் தனது துல்லிய யார்க்கர் பந்துவீச்சால் பேட்ஸ்மேனை போல்டக்கி இருப்பார். இந்த வீடியோவை பார்த்த சென்னை அணி கேப்டன் தோனிக்கு குகதாஸ் மதுலனின் இந்த யார்க்கர் பந்துவீச்சு பிடித்து போக அவரை நெட் பவுலராக சென்னை அணியில் இணைந்துள்ளார்.

சிஎஸ்கே அணி நிர்வாகம் உடனடியாக இவரை அணுகி, சென்னைக்கு அழைத்து வந்துள்ள நிலையில் தற்போது சென்னை அணி வீரர்களுடன் இணைந்து குகதாஸ் மதுலன் நெட் பவுலராக பந்துவீசி வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு இதே பாணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மதீசா பதிரானாவை அணிக்குள் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை அணியின் இளம் வீரர் மதீசா பதிரானா வங்கதேச தொடரின் போது இடது காலில் காயமடைந்தார். இதனால், அவர் ஐபிஎல் தொடரின் முதல் 2 வாரங்களுக்கான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.