நரை தாடியுடன் புதிய லுக்: இந்தியா திரும்பினார் விராட் கோலி

பெங்களூரு: லண்டனில் இருந்து இந்தியா திரும்பினார் இந்திய வீரர் விராட் கோலி. ஐபிஎல் தொடருக்காக விரைவில் பெங்களூரு அணியுடன் இணைகிறார்.

நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி விலகியிருந்தார். தொடர்ந்து விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதிக்கு கடந்த பிப்ரவரி 15-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்துக்காக விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதி லண்டன் சென்றிருந்த நிலையில், ஒரு சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் இந்தியா திரும்பியுள்ளார் கோலி.

லண்டனில் இருந்து இன்று காலை மும்பை விமான நிலையம் வந்திறங்கினார். நரை தாடியுடன் புதிய ஸ்டைலில் கோலி வந்திறங்கிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஐபிஎல் 2024 சீசன் மார்ச் 22-ம் தேதி தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாட உள்ளனர். சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும்நிலையில், லண்டனில் இருந்து இந்தியா திரும்பியுள்ள விராட் கோலி விரைவில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பயிற்சி முகாமில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.