இலங்கை கிரிக்கெட் வீரர் தில்ஷன் மதுஷங்கா காயம்

மும்பை: இலங்கை கிரிக்கெட் அணி வீரரும் மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணி வீரருமான தில்ஷன் மதுஷங்கா காயமடைந்துள்ளார். இதனால் அவர் ஐபிஎல் போட்டியின் தொடக்க ஆட்டங்களில் விளையாடுவது சந்தேகம் எனத் தெரியவந்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் 1-1 என தொடர் சமனில் உள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது.

இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியின் போது இடது தொடையில் தில்ஷன் மதுஷங்கா காயமடைந்தார். இதனால் ஆட்டத்தின்பாதியிலேயே மைதானத்திலிருந்து அவர் வெளியேறினார். இதைத் தொடர்ந்து வங்கதேசத்துக்கு எதிரான எஞ்சிய தொடர்களில் இருந்து அவர் விலகி உள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதனால் நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் பாதி ஆட்டங்களில் தில்ஷன் மதுஷங்கா விளையாட முடியாத சுழல் ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் முக்கியப் பந்துவீச்சாளராக அவர் இடம் பிடித்துள்ளார். அவர் தொடக்க ஆட்டங்களில் விளையாட முடியாத சூழல் மும்பை அணிக்கு பின்னடைவாக அமையும் என்று தெரிகிறது.