முதல் மலையாள பட சாதனை: தமிழகத்தில் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ ரூ.50 கோடி வசூல்!

சென்னை: மலையாளத்தில் வெளியான ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ திரைப்படம் தமிழகத்தில் ரூ.50 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் ரூ.50 கோடியை வசூலித்த முதல் மலையாளப்படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது.

கடந்த பிப்ரவரி 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தை சிதம்பரம் எஸ் பொடுவால் இயக்கியுள்ளார். சவுபின் ஷாயிர், ஸ்ரீநாத் பாஷி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். சிறிய பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் 12 நாட்களில் ரூ.100 கோடியை வசூலித்தது.

21 நாட்களில் படம் உலகம் முழுவதும் ரூ.176 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது. மலையாள திரையுலகில் அதிகபட்சமாக வசூலித்த திரைப்படம் என்ற பெருமையை பெற்று ரூ.176 கோடி வசூலுடன் முதலிடத்தில் உள்ளது ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’.

இந்நிலையில் இப்படம் தமிழகத்தில் மட்டும் இதுவரை ரூ.50 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ரூ.50 கோடி வசூலித்த முதல் மலையாளப்படம் என்ற சாதனையை இப்படம் பெற்றுள்ளது.

மேலும் இப்படம் டப்பிங் இல்லாமல் நேரடியாக மலையாளத்தில் வெளியிடப்பட்டு இவ்வளவு வசூல் குவித்திருப்பதும் கவனிக்கத்தக்கது. படம் உலக அளவில் ரூ.200 கோடி வசூலை நோக்கி முன்னேறி வருவது குறிப்பிடத்தக்கது.