அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்த் ‘2012-2013 காலக்கட்டத்தில் முறையாக வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாமல், நோட்டீஸ் அனுப்பிய பிறகும் மிகத் தாமதப்படுத்தி 2016-ல்தான் வரி செலுத்தினார்’ எனக் குற்றஞ்சாட்டி, அவர்மீது வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், வருமான வரித்துறையின் உதவி ஆணையர் வழக்கு தொடர்ந்தார். ‘வருமான வரிச் சட்டம்-1961ன் படி 276 சிசி, 276சி (2)’ ஆகிய இரண்டுப் பிரிவுகளில், தனக்கெதிராக தொடரப்பட்ட இந்த வழக்கை ரத்துசெய்யக் கோரி கதிர் ஆனந்த் தரப்பிலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
உயர் நீதிமன்றம் வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டதால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் எம்.பி கதிர் ஆனந்த். இந்த மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க வருமான வரித்துறைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. ஆனால், வருமான வரித்துறை தரப்பிலிருந்து இப்போது வரை பதில் அறிக்கை தாக்கல் செய்யப்படாத காரணத்தால், வேலூர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் இந்த வழக்கின் விசாரணையும் அடுத்தடுத்த தேதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுக்கொண்டே வருகிறது.
‘இன்றைய தினத்தில் பதில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்’ என கடந்த 14-ம் தேதியன்றே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இன்றும் வருமான வரித்துறை தரப்பில் பதில் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதே நேரத்தில், வேறொரு வழக்கின் விசாரணைக்காக வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் எம்.பி கதிர் ஆனந்த் இன்று ஆஜரானார். முதலில், காலத்தாமதமாக வருமான வரிச் செலுத்திய வழக்குகாக கதிர் ஆனந்த் ஆஜராக வந்திருப்பதாகத் தகவல் பரவியது. பிறகே, அந்த வழக்குக் குறித்த தகவலும் வெளியானது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில், வருமான வரித்துறையினர் பண்டல், பண்டல்களாக ரூ.10.57 கோடியைக் கைப்பற்றியது தொடர்பாக எம்.பி கதிர் ஆனந்த் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் என்று சொல்லப்படும் பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகிய மூன்று பேர்மீதும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்-1951 பிரிவு 125(ஏ) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 171(இ), 171 பி(2) உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் காட்பாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
இந்த வழக்கில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த செப்டம்பர் மாதம்தான் போலீஸார் குற்றப்பத்திரிகையையே தாக்கல் செய்திருக்கின்றனர். கடந்த செப்டம்பர் 8-ம்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கு, ஏழாவது கட்டமாக இன்றும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்குக்காகத்தான் எம்.பி கதிர் ஆனந்த் நேரில் ஆஜரானார். இதையடுத்து, டிசம்பர் 14-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டதால், எம்.பி கதிர் ஆனந்த் படைசூழ புறப்பட்டுச் சென்றார்.
நன்றி
Publisher: www.vikatan.com