பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் நிவாரணம் என்றால், பாதிக்கப்பட்ட பகுதிகளையும், பாதிக்கப்பட்டவர்களையும் உண்மையாகக் கணக்கெடுத்து வழங்கலாமே?
இதைத்தவிர, வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் சென்னை மற்றும் புறநகர்களில் வசிக்கின்றனர். இவர்களில், பலருக்கும் குடும்ப அட்டை சொந்த ஊர்களில்தான் இருக்கும். அதேபோல புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, அது கிடைத்திருக்காது. இந்நிலையில், வெளிமாவட்ட/வெளிமாநிலத்திலிருந்து சென்னையில் வசிக்கும் பாதிக்கப்பட்ட, வாழ்வாதாரங்களை இழந்தவர்களுக்கு நிவாரணம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இது, அந்த மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விஷயம் கேள்வியாக எழவே, ‘சென்னையில் குடும்ப அட்டை இல்லையென்றாலும் விண்ணப்பிக்கலாம். வீட்டை ஆய்வு செய்து நிவாரணம் வழங்க பரிந்துரைக்கப்படும். ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு கட்டாயம் வழங்கப்படும். ரேஷன் அட்டை விண்ணப்பித்திருப்பவர்களுக்கும் கிடைக்கும். ரேஷன் அட்டை இல்லாதவர்கள் காஸ் பில், வாடகை ஒப்பந்தம் ஆகியவற்றை கொண்டு விண்ணப்பித்தாலும் நிவாரணத் தொகை கிடைக்க வாய்ப்புள்ளது’ என வாய்மொழி விளக்கம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராம் வெங்கடேசனிடம் பேசியபோது, “வங்கி கணக்குக்கு பணம் போடாமல் கையில் கொடுக்கும் முறையில் ஊழல் இருப்பது எல்லாருக்கும் தெரியும். நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. நிவாரணத் தொகை முழுமையாக மக்களிடம் போய்ச் சேராது. அந்தந்தப் பகுதி அரசியல்வாதிகளின் பிடியில்தான் மக்கள் உள்ளனர். காரணம் வட்டிக்கு பணம் வாங்குவது, கடை வாடகை, இன்னபிற என்ற ஏதோவொரு வகையில் அரசியல்வாதிகளின் பிடியில் மக்கள் இருக்கிறார்கள். அதனால் அந்த நிவாரணத் தொகையை அரசியல்வாதிகளே எடுத்துக் கொள்வார்கள். நிவாரணம் கொடுக்கும் முறையை சரிவர திட்டமிடவில்லை. ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பணம் போய்ச் சேர்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்றார்.
மழை, வெள்ள பாதிப்புகளைத் தடுக்க ஒரு திட்டம்… அதிலும் லஞ்சம் மற்றும் ஊழல்! மழை, வெள்ள பாதிப்புக்காக நிவாரணம்… அதிலும் லஞ்சம் மற்றும் ஊழல்.
வௌங்கிடும் தமிழ்நாடு!
நன்றி
Publisher: www.vikatan.com