தமிழகம் முழுவதும் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. தற்போது வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தைக் கணக்கீடு செய்ய ‘ஸ்டேட்டிக்’ மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இவற்றை ஸ்மார்ட் மீட்டராக மாற்றுவதற்கு ஒரு முன்னோடித் திட்டமாக சென்னை தி.நகரிலும், கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்திலும் 1.25 லட்சம் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து இப்போது மத்திய அரசு Revamped Distribution Sector Scheme என்ற திட்டத்தின்கீழ் இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்துக்கு மூன்று கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்குவதற்கான அனுமதி மற்றும் பங்களிப்பை வழங்கியது. இதன்படி தமிழக அரசு வாங்கும் ஸ்மார்ட் மீட்டர்களுக்கான செலவில் குறிப்பிட்ட பங்கை மத்திய அரசு வழங்கும் என்று ஏற்கெனவே கூறியிருந்தது.
அப்படியிருக்க கடந்த ஜூன் மாதம் தமிழக அரசு இதற்கான டெண்டர் கோரியது. அதில் பங்கெடுத்த 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 265 சந்தேகங்களை எழுப்பியது. அதனால் அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று புதிதாக டெண்டர் கேட்கப்பட்டுள்ளது . அதன்படி ஒரே கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள 3 கோடியே 30 லட்சம் இணைப்புகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க மின்சார வாரியம் டெண்டர் கோரியுள்ளது. இது ஏற்கெனவே ஸ்மார்ட் மீட்டர் குறித்து “நேரத்துக்கு ஒரு ரேட்” கட்டுரையில் நாம் எழுப்பிய சந்தேகங்களை வலுக்கச் செய்கிறது. அந்தக் கட்டுரையைப் படிக்க நேரத்துக்கு ஒரு ரேட்… ஸ்மார்ட் மீட்டர் அறிமுகம் – ஷாக் தரும் மின் கட்டணம்!
முதலில் ஸ்மார்ட் மீட்டர் என்றால் என்ன?
இப்போது இருக்கும் மீட்டரை விட ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பயனாளர் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துகிறார் என்பதைக் கணக்கிடுவதோடு, அதை அவரே சரிபார்த்துக் கட்டுப்படுத்திக்கொள்ள உதவும் கருவி. மேலும், எந்த இடத்தில் எந்த நேரத்தில் அதிகமாக மின்சாரம் தேவைப்படுகிறது என்பதை மின்சார வாரியம் அறியச் செய்கிறது. ஸ்மார்ட் மீட்டர் மிகத்துல்லியமாக மின் பயன்பாட்டு அளவைக் கணக்கிடுவதோடு, அதற்கான கட்டண விவரத்தை நேரடியாக நுகர்வோரின் தொலைபேசி எண்ணுக்கு அனுப்பிவிடும்.
ஆனால், ஸ்மார்ட் மீட்டரால் கட்டணம் உயரும் என்ற அச்சம் பலருக்கும் இருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் ஸ்மார்ட் மீட்டரைப் பொருத்தக்கூடாது எனப் போராட்டங்கள் நடக்கின்றன. ஏற்கெனவே நிறுவப்பட்ட மீட்டர்களினால் சாதாரண மின் கட்டணத் தொகை சீராக அதிகரித்திருக்கிறது என்பது மக்களின் புகார். பீகாரிலும் இதற்கான திட்டங்கள் ஆரம்பித்து 23 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப் பட்டுள்ளன. அங்கும் மின் கட்டணம் அதிகரித்திருப்பதாக மக்கள் கூறுகின்றனர். இந்தச் சிக்கல்களைத் தீர்க்க பீகார் அரசு புதிதாக 2 சாப்ட்வேர்களை அறிமுகம் செய்து, சரி செய்துவருகிறது.
தற்போது டெண்டரில் தேர்வாகும் நிறுவனம் ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்துவது, தகவல் தொடர்பு ஏற்படுத்துவது, ஒருங்கிணைப்பது, பராமரிப்பது என அனைத்துப் பணிகளையும் 10 ஆண்டுகளுக்கு செய்ய வேண்டும் என நிபந்தனை விதித்திருக்கிறது தமிழக அரசு. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி தொடங்கப்படும் என்றும் மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து திருச்சியில் நடந்த மின்சார ஊழியர் சங்க மாநாட்டிற்கு பிறகு பத்திரிகையாளரிடம் பேசிய தமிழ்நாடு எலெக்ட்ரிசிட்டி போர்டு எம்பிளாய் பெடெரேஷன் பொதுச் செயலாளர் சேக்கிழார், “தற்போது ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட தி நகர் போன்ற இடங்களில் அதைப் பொருத்த தனியார் ஏஜென்சியில் இருந்தே ஆட்கள் வந்துள்ளார்கள். வீடுகளில் அவர்கள் மீட்டர் பொருத்தும் போது மின்சார வாரியத்தில் இருந்து ஆட்கள் யாரும் வரத் தேவையில்லை என்கிறார்கள். அதை சீல் செய்யும் வேலையையும் அவர்களே செய்கிறார்கள். இதனால் 5 பேர் வேலை செய்யும் இடத்தில் ஒருவர் அந்த வேலையை செய்யும் நிலைமையாக மாறியுள்ளது. அதாவது 2 நபர்கள் கணக்கெடுப்பதற்கும், ஒருவர் பணம் வசூல் செய்வதற்கும், ஒருவர் மேற்பார்வையிடுவதற்கும், ஒருவர் கணக்கீடு செய்வதற்கும் என்று இருந்த இடத்தில் இனி ஒருவர் வேலை செய்தால் போதும் என்கிற நிலை” என்றவர்
இந்த சோதனை முயற்சியிலே சுமார் 7000 நபர்களின் வேலை பறிபோகும் வாய்ப்பு இருக்கிறது. இது அனைத்து இணைப்புகளுக்கும் ஏற்படுத்தும் நிலையில் வேலை இழப்பு இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. கேரளா போன்ற மாநிலங்கள் இதற்கு மத்திய அரசிடம் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் தமிழக அரசும் சட்டசபையில் ஸ்மார்ட் மீட்டருக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தங்களது சங்கத்தின் கோரிக்கையாக முன்வைத்துள்ளார். வேலை வாய்ப்புக்கான பணியிடங்களை அதிகரிக்க வேண்டிய அரசாங்கம் மத்திய அரசின் திட்டத்தோடு இணைந்து வேலை வாய்ப்பை குறைக்கும் வேலையையும், அதை தனியாரிடம் கொடுக்கும் முனைப்பையும் இது காட்டுகிறது” என்றார். அரசுத் தரப்பில் வேலை பறிபோகாது முன்னர் சொல்லப்பட்டது. ஆனால், ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் எடுக்கும் ஏஜென்ட்டுகளின் ஊழியர்களே ஸ்மார்ட் மீட்டரை கவனித்துக் கொள்வர் என்கிற தகவல்கள் மின் ஊழியர்களுக்கு அச்சத்தையே ஏற்படுத்துகிறது என்கின்றனர். இதுகுறித்த முறையான விளக்கத்தை அரசிடமிருந்து ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நன்றி
Publisher: www.vikatan.com