சென்னையில் சமீப காலமாக ரவுடிகளின் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கி விட்டது. அதோடு, ரவுடிகள் அவர்களுக்குள் ஒருவரை ஒருவர் கொலை செய்வதும், பழிக்கு, பழியாக, ஒருவர் இன்னொருவரை, கொலை செய்வது போன்ற சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அந்த வகையில், சென்னையில், பிரபல ரவுடி சத்யா என்பவர் பழிக்கு, பழியாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த சென்னையையும் ஆடிப் போக வைத்திருக்கிறது.
இந்த கொலை சம்பவம் குறித்து, காவல்துறை தரப்பில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அந்த விசாரணையில், பல்வேறு உண்மைகள் தெரிய வந்துள்ளனர். அதாவது, கடந்த 2016 ஆம் ஆண்டு ஃபேஷன் ஃப்ரிட்ஜ் பகுதியில் சிவராஜ் என்ற பிரபல ரவுடி படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலைக்கு பழி வாங்குவதற்காக அவருடைய நண்பர்கள் காத்திருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், அந்த கொலைக்கும் தற்போது கொலை செய்யப்பட்ட சத்யாவுக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. அவரை எப்படியாவது கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்ட எதிராளிகள், ஒரு திட்டத்தை தீட்டி உள்ளனர். அதன்படி, ஜூலி என்ற பெண் சத்யாவுடன் இன்ஸ்டாகிராம் மூலமாக நட்பாக பழகி வந்துள்ளார். அதோடு, சத்யாவை அந்த பெண் காதலிப்பதை போல நடித்துள்ளார். இது தெரியாத சத்யா, அவரை உயிருக்கு உயிராக காதலித்து உள்ளார்.
இந்த நிலையில் தான், ஜூலி கடந்த எட்டாம் தேதி இரவு சத்யாவிற்கு ஃபோன் செய்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு அவரை அழைத்துள்ளார். அதாவது கடந்த எட்டாம் தேதி இதற்கு முன்பு கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடியான சிவராஜின் நினைவு தினம் என்று கூறப்படுகிறது. ஆகவே, அவருடைய நினைவு தினத்திலேயே இவரையும் கொலை செய்ய எதிராளிகள் திட்டமிட்டனர். ஆனால், இது தெரியாத சத்யா தன்னுடைய காதலி வர சொல்கிறார் என்பதற்காக, அவர் வர சொன்ன இடத்திற்கு சென்று விட்டார்.
ஆனால் அங்கே மறைந்து இருந்த சிவராஜின் நண்பர்கள் சத்யாவை சரமாரியாக, வெட்டி படுகொலை செய்தனர். இது குறித்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த கொலைக்கு உறுதுணையாக இருந்த ஜூலியும் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தனிப்படை அமைத்து, விசாரனை நடத்தப்பட்டதில், இந்த வழக்கில் தொடர்புள்ளவர்கள் என்று நான்கு பேர் கைது செய்யபப்பட்டனர். மேலும், ஐந்து பேர் நேற்று கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
நன்றி
Publisher: 1newsnation.com