அ.தி.மு.கவுடன் மோதல் & எம்.எல்.ஏக்கள்- ஜெ சந்திப்பு!
தேர்தல் முடிந்து சில மாதங்கள்தான் அ.தி.மு.கவுக்கும் தே.மு.தி.கவுக்கும் இடையே முட்டத் தொடங்கியது. பால்விலை உயர்வு, பேருந்துக்கட்டண உயர்வு குறித்த விவாதத்தில், சட்டமன்றத்தில் அ.தி.மு.க உறுப்பினர்களுக்கும் தே.மு.தி.க உறுப்பினர்களுக்கும் இடையே கடுமையான மோதல் வெடிக்க, ஜெயலலிதாவின் முன்னிலையிலேயே, விஜயகாந்த் நாக்கைத் துருத்தி `ஏய்ய்…’ என அ.தி.மு.கவினரை எச்சரிக்கை செய்தார். விஜயகாந்தின் இந்தச் செயலுக்கு, வெளியில் மட்டுமல்லாது. கட்சிக்குள்ளேயே பல எதிர்ப்புகள் வெடிக்கத் தொடங்கின. கட்சியின் பொருளாளரும் மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏவுமான சுந்தர்ராஜன், தே.மு.தி.க திட்டக்குடி தொகுதி எம்.எல்.ஏ, தமிழழகன் ஆகிய இருவரும், விஜயகாந்தின் அனுமதி இல்லாமலேயே ஜெயலலிதாவைச் சந்தித்தனர். விஜயகாந்த் அதைக் கண்டிக்க, தொகுதி வளர்ச்சிக்காகச் சந்தித்ததாகவும், அதற்கு யாரிடமும் அனுமதி கேட்கத் தேவை இல்லை எனவும் சொல்ல அதிர்ச்சியில் உறைந்து போனார் விஜயகாந்த். தொடர்ச்சியாக தே.மு.தி.க எம்.எல் ஏ-க்கள் `தொகுதி வளர்ச்சிக்காக’ முதல் அமைச்சர் ஜெயலலிதாவைச் சந்திக்கத் தொடங்கினர்.
மாபா.பாண்டியராஜன், நடிகர் அருண் பாண்டியன் உள்ளிட்ட எட்டு எம்.எல்.ஏக்கள் அப்படிச் செல்ல, தே.மு.தி.க கூடாரம் கொஞ்சம் கொஞ்சமாகக் காலியாகத் தொடங்கியது. மற்றவர்கள் போனதுகூட பரவாயில்லை, ஆனால், தன் நீண்ட கால நண்பர் சுந்தர்ராஜன் மற்றும் சினிமாத்துறை நண்பர் அருண் பாண்டியன் சென்றதை விஜயகாந்தால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. மறுபுறம், ஆளும்கட்சியினரின் கிண்டலையும் கேலியையும் சமாளிக்க முடியாத விஜயகாந்த் சட்டமன்றமா அது எங்க இருக்கு எனும் கேட்குமளவுக்கு மட்டம் போடத் தொடங்கினார். ஆளும் கட்சிக்கு எதிராக ஆக்கப்பூர்வமாக எந்தவித நடவடிக்கைகளும் தே,மு.தி.க மேற்கொள்ளவில்லை. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்படுவதிலிருந்து நழுவினார் நடிகர் விஜயகாந்த். தொடர்ந்து, கட்சியில் இருந்து விலகாமல் அதிருப்தி எம்.எல்.ஏக்களாக செயல்பட்டு வந்த எட்டு எம்.எல் ஏக்களும், 2016 பிப்ரவரியில் தங்களின் எம்.ஏல்.ஏ வை பதவியை ராஜினாமா செய்ய, எதிர்க்கட்சித் தலைவர் என்கிற என்கிற அந்தஸ்தையும், தன்னால் பதவிக்கு வந்தவர்களாலேயே இழந்தார் விஜயகாந்த். ஒருபுறம் விஜயகாந்தின் அரசியல் இமேஜ் மெல்ல மெல்லச் சரிந்து வர, மறுபுறம் அவரின் உடல்நிலையும் மோசமானது. வெளிநாட்டுக்குச் சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பவும், 2014 நாடாளுமன்றத் தேர்தல் வரவும் சரியாக இருந்தது.
தேர்தலை முன்னிட்டு, உளுந்தூர் பேட்டையில் ஊழல் எதிர்ப்பு மாநாடு நடத்தினார் விஜயகாந்த். அங்கே கட்சித் தொண்டர்களிடம், “கடந்த காலத்தில் கூட்டணிக்குச் சென்று பட்ட துன்பங்கள் அதிகம். இனி கூட்டணியே வேண்டாம், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்’’ என தொண்டர்களைப் பார்த்துக்கேட்க அவர்களும், `வேண்டாம் வேண்டாம்’ என்றே குரல் எழுப்பினர். தே.மு.தி.கவில், தி.மு.கவும் இருக்கிறதே என கருணாநிதி அழைப்பு விட்டுப் பார்த்தும், அந்தத் தேர்தலில், யாரைத் தன் அரசியல் எதிரியாகக் கருதினாரோ, அதே ராமதாஸ் அங்கம் வகித்த தேசிய ஜனநாயக் கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்தித்தார் விஜயகாந்த். அவருக்கு அந்தக் கூட்டணியில் 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தேர்தல் முடிவுகளும் வந்தன. ஒரு இடத்தில்கூட தே.மு.தி.கவால் வெற்றிபெற முடியவில்லை. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டபோது பெற்ற வாக்குகள் சரிபாதியாகக் குறைந்து போனது. 2011-14 வரையில் தே.மு.தி.கவின் விஜயகாந்தின் இமேஜ் சரிய, 2014 தேர்தலில் அந்தக் கட்சிக்கு இருந்த வாக்கு வங்கியும் சரிவைக் கண்டது.
தே.மு.தி.க இனி அவ்வளவுதான் என நினைத்த நேரத்தில், அது இல்லை என நிரூபித்தது 2016 தேர்தலில் தே.மு.திகவுக்கு கட்சிகள் மத்தியில் எழுந்த டிமாண்ட். பி.ஜே.பி, மக்கள் நலக்கூட்டணி, தி.மு.க பல கட்சிகள் தே.மு.தி.கவை நோக்கிப் படையெடுத்தன. பழம் நழுவிப் பாலில் விழும் எனக் கடைசிவரை தங்களின் கூட்டணிக்குள் வந்துவிடுவார் என நம்பிக்கையோடு இருந்தார் தி.மு.க தலைவர் கருணாநிதி. ஆனால், அவரின் நம்பிக்கையை மட்டுமல்லாமல், தன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் நம்பிக்கையையும் உடைத்த விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியில் இணைய முடிவெடுத்தார். அதுவரை விஜயகாந்தின் வலதுகரமாக, கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராகச் செயல்பட்டு வந்த சந்திரக்குமார், சேலம் பார்த்திபன் போன்ற கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இணைந்து, “இது மக்களின், தே.மு.தி.க தொண்டர்களின் மனநிலைக்கு எதிராக எடுத்த முடிவு. எனவே இதை மாற்றிக்கொள்ளவேண்டும் ” என கால அவகாசம் கொடுத்தனர். ஆனால், அதையெல்லாம் கொஞ்சம் கூட பொருட்படுத்தாத விஜயகாந்த் அவர்கள் அனைவரையும் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார். விஜயகாந்த் சொந்தக் செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சம்பவம் இது.
தே.மு.தி.கவுக்குள் நிலவி வந்த குடும்ப ஆதிக்கம் வெளிப்படத் தொடங்கியது. எந்த குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து கட்சி தொடங்குவதாக அறிவித்தாரோ, அதே ஆதிக்கம் தன் மனைவி, மைத்துனர் மூலம் தன் கட்சியில் உண்டான போது கண்டுகொள்ளாமல் போனார் விஜயகாந்த். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள், மக்கள் தே.மு.தி.க எனச் செயல்படத் தொடங்கி பின்னர் தி.மு.கவில் ஐக்கியமானார்கள். மறுபுறம், ம.தி.மு.க, இரண்டு கம்யூனிஸ்ட்கள், வி.சி.க ஆகியோர் அடங்கிய மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த், முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், யார் எந்தத்துறைக்கு அமைச்சர் என்றெல்லாம் பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார் விஜயகாந்த் மைத்துனரும் இளைஞரணிச் செயலாளருமான சுதீஷ்.
நன்றி
Publisher: www.vikatan.com