திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவந்த பிரணவ் ஜுவல்லர்ஸ் நிறுவனம், தங்க நகைத் திட்டங்கள் மூலம் மோசடி செய்ததாக வாடிக்கையாளர்கள் புகாரளிக்க, நிறுவன உரிமையாளர்கள் மதன், கிருத்திகா ஆகியோரிடம் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸ், கடந்த மாதம் விசாரணை நடத்தியது. பின்னர், பிரணவ் ஜுவல்லர்ஸில் சட்டவிரோதமான பணப் புழக்கம் இருப்பதாக விசாரணையில் கூறப்பட, இந்த விவகாரத்தை அமலாக்கத்துறை கையிலெடுத்தது.

அதைத் தொடர்ந்து, நவம்பர் 20-ம் தேதி பிரணவ் ஜுவல்லர்ஸ் கிளைகளில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, கணக்கில் வராத சுமார் ரூ.23.7 லட்சம் பணம் மற்றும் 11.6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக அறிவித்தது. குறிப்பாக, இதில் ரூ.100 கோடி அளவுக்குப் பணத்தை ஏமாற்றியிருப்பது, விசாரணையில் தெரியவந்திருப்பதாகவும் அமலாக்கத்துறை கூறியது.
அதன் தொடர்ச்சியாக, பிரணவ் ஜுவல்லர்ஸ் விளம்பரத்தில் நடித்த நடிகர் பிரகாஷ் ராஜுக்கும், இந்த மோசடியில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியது. இந்த நிலையில், பிரணவ் ஜுவல்லர்ஸ் மோசடியில் பிரகாஷ் ராஜுக்குத் தொடர்பில்லை எனப் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் தகவல் வெளியாகியிருக்கிறது.
For those who don’t understand Tamil
BREAKING NEWS:-Official announcement of the Investigation team.
Actor prakash raj is not involved in any ponzi scam of tamilnadu s Pranav jewellers..
I thank everyone who trusted me and stood by me .. #SathyamevaJayathe #justasking pic.twitter.com/AZ6hLM8wjI— Prakash Raj (@prakashraaj) December 15, 2023
குறிப்பாக, பிரணவ் ஜுவல்லர்ஸ் உரிமையாளர் மதன், பிரகாஷ் ராஜுக்கு இதில் தொடர்பில்லை என்று தனது வாக்குமூலத்தில் கூறியதாகவும், இனி பிரகாஷ் ராஜிடம் இது தொடர்பாகவிசாரணை நடத்தப்போவதில்லை எனவும் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
அதையடுத்து, பிரகாஷ் ராஜ் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “புலனாய்வுக் குழுவின் அதிகாரபூர்வ அறிவிப்பு; நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழ்நாட்டின் பிரணவ் நகைக்கடை மோசடியில் ஈடுபடவில்லை. என்னை நம்பி எனக்கு ஆதரவாக நின்ற அனைவருக்கும் நன்றி” என ட்வீட் செய்திருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com