மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருப்பதால், மாநிலக் கட்சிகள் முதல் தேசிய கட்சிகள் வரை அனைத்து கட்சிகளும் தங்களது கூட்டணிக்குள் சீட் பகிர்வு பேச்சுவார்த்தைகளைத் தொடங்கிவிட்டன. பெரும்பாலான கட்சிகள் பா.ஜ.க-வின் என்.டி.ஏ கூட்டணியிலும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியிலும் ஒன்றிவிட்டன. அந்த வரிசையில் தமிழ்நாட்டில், அ.தி.மு.க இந்த இரண்டு கூட்டணியிலும் சேராமல், தனித்துப் போட்டியிடுவதாகக் கூறிவருகிறது.
ஆனால், அ.தி.மு.க இந்தத் தேர்தலில் பா.ஜ.க-வை நேரடியாக எதிர்த்து மத்திய அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டுமா… அல்லது மாநில தி.மு.க அரசின் குறைகளை மட்டும் சுட்டிக்காட்டுமா என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. மேலும், அ.தி.மு.க இன்னும் பா.ஜ.க-வுடன் கூட்டணியில்தான் இருக்கிறது என தி.மு.க தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இந்த நிலையில், `கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க தமிழ்நாட்டைப் புறக்கணித்ததை அம்பலப்படுத்துவோம்’ என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய ஜெயக்குமார், “தூக்கத்திலிருந்து எழுப்பிக் கேட்டாலும்… பா.ஜ.க-வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. அந்தப் பெட்டியைக் கழற்றிவிட்டாச்சு. மீண்டும் இன்ஜினுடன் சேர்ப்பதற்கான எண்ணமே கிடையாது. அண்ணாமலை எப்போதும் தன்னை முன்னிலைப்படுத்துகிறார், பா.ஜ.க-வை முன்னிலைப்படுத்தவில்லை. `அண்ணே அண்ணே…’ என அண்ணாமலை மாதிரி ஊளைக் கும்பிடு போடுகிறவர்கள் நாங்கள் இல்லை. ஊளைக் கும்பிடு போட்டு தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி இங்கு காலூன்ற நினைத்தால், விழலுக்கு இறைத்த நீர்போல, அது வீணாய்தான் முடியும்.
கத்துகிறவர்கள் கத்தட்டும், எங்களுக்குக் கவலையில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுடைய நிலைப்பாடு என்ன என்பதைத் தேர்தல் நேரத்தில் அறிவிப்போம். யார் தவறு செய்திருந்தாலும் தேர்தலில் சுட்டிக்காட்டுவோம். மாநிலத்தின் நலனைப் புறக்கணிக்கிறவர்களை அடையாளம் காட்டுவோம். அதேபோல், மத்தியிலிருந்துகொண்டு மாநில நலனில் துரோகம் செய்தவர்களையும் அடையாளம் காட்டுவோம்.
பா.ஜ.க தனது 10 ஆண்டுக்கால ஆட்சியில், மாநிலத்துக்கான என்னென்ன நலன்கள் புறக்கணித்தது என்பதை அம்பலப்படுத்துவோம். மேலும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றவேண்டும், ஆளுநர் பதவியே தேவையில்லை என்று இப்போது கூறுபவர்கள் (தி.மு.க), 17 ஆண்டுகள் மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோதே அதைச் செய்திருக்கலாம். மத்தியில் ஆட்சிப் பொறுப்பிலிருந்தபோது, தமிழ்நாட்டில் யார் ஆட்சி செய்தாலும், கட்சி பேதம் பார்க்காமல் தமிழ்நாட்டுக்கு நிதியைப் பெற்றுத்தந்தோம் என ஸ்டாலினால் கூறமுடியுமா…
மத்திய அரசில் அங்கம் வகித்துக்கொண்டு சுகம் கண்டதும், ஆசியாவில் பணக்கார குடும்பமானதும்தானே அவர்களின் சாதனை. எனவே, மாநில மற்றும் மத்திய அரசின் மக்கள் விரோத செயல்களைத் தேர்தல் நேரத்தில் தோலுரித்துக் காட்டுவோம். பா.ஜ.க-வின் உருட்டல் மிரட்டலுக்கு பயப்படமாட்டோம். ஆட்டைப் பொறுத்தவரை, குத்திவிட்டு ஆழம் பார்க்கக் கூடாது. அத்தகைய செயலில் ஈடுபட்டால், மொத்த அ.தி.மு.க-வும் சிங்கமாக எதிர்த்து வரும்போது, அனைத்து ஆடுகளும் ஓடுகின்ற நிலைமைதான் வரும்” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY
நன்றி
Publisher: www.vikatan.com