நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அ.தி.மு.க-பா.ஜ.க ஆகிய இரு கட்சிகளிடையே மோதல் முற்றி, கிளைமாக்ஸை எட்டியிருக்கிறது. அண்ணாமலை Vs அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் என்ற நிலை அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியில் சமீபமாக நிலவி வருகிறது. ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் பேச்சு, அ.தி.மு.க-வினரை ஏற்கெனவே கொதிப்படையச் செய்தது. அதனால் அண்ணாமலையை அ.தி.மு.க-வினர் விமர்சிப்பதும், பதிலுக்கு அண்ணாமலை காட்டமாக எதிர்வினையாற்றுவதுமென அரசியல் களம் சூடாகவே இருந்து வந்தது. இந்த நிலையில், `அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி முறிவு’ என்ற நிலைக்கு அண்மையில் அண்ணாதுரையைப் பற்றி அண்ணாமலை பேசியது வித்திட்டிருக்கிறது.
அண்ணாதுரை குறித்த அண்ணாமலையின் பேச்சுக்கு, அ.தி.மு.க முகாமிலிருந்து சி.வி.சண்முகம் காட்டமான எதிர்வினையாற்ற, பதிலுக்கு, `போலீஸைப் பார்த்தால், திருடனுக்கு பயம் வரத்தான் செய்யும். நேர்மை குறித்து சி.வி.சண்முகம் எனக்குப் பாடம் எடுக்க வேண்டாம். எனக்கும் கடுஞ்சொற்கள் பேச வரும்’ என கொந்தளித்தார் அண்ணாமலை. அதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ஒரு கூட்டணியில் இருந்துகொண்டு கூட்டணி தர்மத்தை மீறிப் பேசுகிற எந்த ஒரு செயலையும் கருத்தையும் தன்மானமுள்ள அ.தி.மு.க தொண்டன் எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ளமாட்டான். சிட்டுக்குருவிக்கு பட்டம் கட்டினால், அது திமிர்பிடித்து ஆடும்.
வீட்டிலுள்ள பண்டபாத்திரங்களை யெல்லாம் கொத்தும். சிட்டுக்குருவிகளுக்கே உள்ள புத்தி அது. ஓர் அரசியல் தலைவருக்கே லாயக்கில்லாத, பா.ஜ.க தலைவருக்கே லாயக்கில்லாத, சிறுமை புத்திகொண்ட, தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு அண்ணாமலை பேசிவருகிறார்.
இது குறித்து மேலிடத்திலும் சொன்னோம். `நாங்கள் உங்கள் கூட்டணியில் இருக்கிறோம், இவரைத் திருத்துங்கள்’ என்று தெரிவித்தோம். திரும்பத் திரும்ப இப்படிப் பேசினால் இனியும் பொறுத்துக்கொள்வதாக இல்லை.
அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இல்லை. கூட்டணி குறித்துத் தேர்தல் வரும்போதுதான் முடிவு செய்ய முடியும். பா.ஜ.க எங்களுக்கு வேஸ்ட் லக்கேஜ்” என்று கூறி பா.ஜ.க-வுடனான கூட்டணிக்கு தற்போதைக்கு ஒரு முற்றுபுள்ளி வைத்திருந்தார். ஜெயக்குமாரின் இத்தகைய பேச்சு இரு கட்சிகளிடையே பெரும் புகைச்சலை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு, புதுச்சேரி என எல்லா திசைகளிலிருந்தும் அண்ணாமலைக்கு எதிரான விமர்சன ஏவுகணைகளை ஏவினர் அ.தி.மு.க-வினர்.
இதற்கிடையே, `அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி குறித்தோ, பா.ஜ.க குறித்தோ யாரும் விமர்சிக்கக் கூடாது.’ என அ.தி.மு.க தலைமை உத்தரவு பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க துணை பொதுச்செயலாளர்கள் நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க நேரம் கேட்டு கிடைக்காமல் போகவே, மத்திய அமைச்சர் பியூஸ் கோயலைச் சந்தித்து, அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி விவகாரம் குறித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.
மோதல்போக்கு `முற்றிய’ நிலையில், இரு கட்சிகளின் முகாம்களிலும் `பதற்ற’மான சூழல் நிலவிக்கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி இதுவரையிலும், அண்ணாமலையைக் கண்டித்து அறிக்கையோ, அல்லது கூட்டணி தொடர்பான அ.தி.மு.க-வின் நிலைப்பாட்டையோ தெரிவிக்காமல் இருந்து வருகிறார். அதேபோல அண்ணாமலையும், `அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியில் என்ன பிரச்னை என்று எனக்கு தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமியுடன் நான் தொலைபேசியில் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்’ எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், `அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், எம்.ஜி.ஆர் மாளிகையில் 25.09.2023 பிற்பகல் 3:45 மணிக்கு, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என அ.தி.மு.க தலைமைக் கழகம் அழைப்பு விடுத்திருக்கிறது.
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நடைபெறவிருக்கும் இந்தக் கூட்டத்தில், `அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி’ உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பான முடிவுகள், கலந்தாலோசித்து எடுக்கப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது.
நன்றி
Publisher: www.vikatan.com