திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் திருவெறும்பூர் அருகே காட்டூர் மற்றும் திருவெறும்பூர் கடைவீதி பகுதிகளில் தி.மு.க அரசைக் கண்டித்து தெருமுனைப் பிரசார கூட்டங்கள் நடந்தன. இந்தப் பிரசாரக் கூட்டங்களுக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.பி-யுமான குமார் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளரும், தலைமைக் கழகப் பேச்சாளருமான விந்தியா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “நிம்மதியில்லாமலேயே ஆட்சி நடத்தும் நிலையில், வீணாய்ப்போன அமைச்சர்களை வைத்துக்கொண்டு ஸ்டாலின் அவஸ்தைப்படுகிறார். தி.மு.க-வில் திருச்சிக்கே அடையாளமாய்த் திகழ்வது அமைச்சர் நேரு. ஆனால், அவருக்கு மாற்றாகவே உதயநிதி வீட்டில் வாட்ச்மேன் வேலை பார்க்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை வளர்க்கிறார். மோடிக்கு முன்பு கறுப்புக்கொடி காட்டிய ஸ்டாலின், இப்போது 2 – ம் புலிகேசிபோல நடக்கிறார். “இந்தி தெரியாது போடா’ என்று அன்று குரல் கொடுத்த தி.மு.க-வினர், இப்போது அதற்கு மாறாக, ‘வாடா’ என்று சொல்கிறார்கள்.
ஓ.பி.எஸ்., தினகரன், சசிகலா, மோடி என்று யாராக இருந்தாலும் கொள்கைக்கு விரோதமாக இருந்தால், எதையும் தில்லாக ஒதுக்கித் தள்ளுவது அ.தி.மு.க மட்டுமே. தமிழகத்திற்கான வளர்ச்சித் திட்டங்களை மத்திய அரசிடம் கேட்டுப் பெறாமல், ‘ஆத்தா வைய்யும்… காசு கொடு’ என்று மட்டும்தான் வாயைத் திறக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுக்கால அ.தி.மு.க அரசு பெற்ற கடன் ரூ.3 லட்சம் கோடி. இந்த நிதி, ஓக்கிப் புயல் உள்ளிட்ட பல்வேறு பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவத்தான். ஆனால், வெறும் இரண்டரை ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில், 4 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றிருக்கிறது விடியா தி.மு.க அரசு. நீட் தேர்வு, உள்ளாட்சி நிர்வாகம் என அனைத்திலுமே தி.மு.க ஃபெயில்தான். ஆனால், லூசான தன்னுடைய மகனை மாஸான மந்திரியாக ஆக்கியதில் மட்டும்தான், அவர் பாஸ். ஜல்லிக்கட்டைக் கொண்டுவந்ததே அ.தி.மு.க அரசுதான்.
நன்றி
Publisher: www.vikatan.com