“அண்ணாமலையின் தென்மண்டல நடைப்பயணம் நாடாளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்களா?”
“கடந்த 20 நாள்களில் 35 தொகுதிகளில் பயணம் மேற்கொண்டிருக்கிறார் அண்ணாமலை. உண்மையில் அண்ணாமலையின் ஸ்பீடுக்கு எங்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. எல்லா தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளுக்குச் செவி கொடுக்கிறார். சில தொகுதிகளில், அவர் வரக்கூடிய பகுதிக்கு மக்களை ஒருங்கிணைத்து மக்கள் சந்திப்பை நடத்தினார். ஒன்பது ஆண்டு கால பா.ஜ.க அரசின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார். எனக்குத் தெரிந்து எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு மக்கள் ஈர்ப்பு அண்ணாமலைக்குத்தான் இருக்கிறது அதற்கான பலனை நீங்களே நாடாளுமன்றத் தேர்தலில் தெரிந்துகொள்வீர்கள்.”
“ஆனால், கூட்டணிக் கட்சிகள் அண்ணாமலை மீது அதிருப்தியில் இருப்பதுபோல் தெரிகிறதே… அ.தி.மு.க-வின் மதுரை மாநாட்டில்கூட பா.ஜ.க குறித்தோ, மோடி குறித்தோ ஒரு வார்த்தைகூட எடப்பாடி பேசவில்லையே?”
“தேர்தல் அரசியலைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் ஒற்றுமையாகத்தான் செயலாற்றி வருகிறோம். எங்களுக்குள் எந்தக் கசப்புகளும் இல்லை. அ.தி.மு.க-வின் மாநாட்டில் அவர்களின் கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்த அவர்களின் கொள்கைகளைத் தானே பேசுவார்கள். அதில், எங்களைப்பற்றிப் பேச வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டியதில்லை. தவிர ஆளும் தி.மு.க அரசின் கையாளாகாத்தனங்களையும், நீட் உள்ளிட்ட விவகாரங்களில் அவர்களின் இரட்டை வேடங்களையும் உடைத்துப் பேசியிருக்கிறார் எடப்பாடி. அதான் இங்கு முக்கியமானது.”
“தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கொடுப்பது பற்றிய உங்கள் கருத்து என்ன?”
“நீட் இல்லாத இந்தியாவே இனிமேல் இருக்கப் போவதில்லை. உச்ச நீதிமன்றமே முடித்துவைத்த விவகாரம் அது. அதில் எதுவுமே செய்ய முடியாது எனத் தெரிந்தும் தங்களின் அரசியல் பிழைப்புக்காக நீட் விலக்கு குறித்துப் பேசி, ஏழை, எளிய மாணவர்களின் வயிற்றிலடிப்பதை தமிழக பா.ஜ.க வன்மையாகக் கண்டிக்கிறது. முதல்வர் ஸ்டாலினும், உதயநிதியும் சட்டத்திலேயே இடமில்லாத விஷயத்தைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சொல்லப்போனால் தமிழ்நாட்டில் நிகழும் நீட் தற்கொலைகளுக்குக் காரணமே தி.மு.க-தான்.”
“திமுக தான் காரணமென எதனடிப்படையில் சொல்கிறீர்கள்?”
“நீட் தேர்வு குறித்து தவறான எண்ணத்தை மக்கள் மத்தியில் விதைப்பதோடு, ஒரு தற்கொலை நிகழ்ந்தால் அதனைப் பெரிதுபடுத்தி மற்றொரு மாணவனுக்கும் தற்கொலை எண்ணத்தைத் தூண்டுவதே தி.மு.க-தான். மருத்துவக் கல்லூரி வைத்திருப்பவர்கள் எல்லாம் தி.மு.க-வின் எம்.பி எம்.எல்.ஏ-க்களாக இருக்கிறார்கள். நீட் வந்தபிறகு வருமானம் அழிகிறது என்பதற்கான பொதுமக்களை பலிக்கிடாவாக்குகிறார்கள்.”
“அமலாக்கத்துறையின் அடுத்த டார்கெட் தூத்துக்குடிதான் எனப் பேசி வருகிறீர்களே… என்ன காரணம்?”
“அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.பி கனிமொழி வரை எல்லோரும் எங்கெங்கே சொத்து வாங்கிப் போட்டிருக்கிறார்கள் எனப் பொதுமக்கள் அனைவருக்குமே தெரியும். கீதா ஜீவன் குடும்பத்தினர் தற்போதுதான் வழக்குகளில் விடுபட்டிருக்கிறார்கள். அதில் நாங்களே கூட மேல்முறையீடு செய்யலாம். அனிதா ராதாகிருஷ்ணனை வழக்கில் அமலாக்கத்துறையே தங்களை இணைக்கச் சொல்லி மனு கொடுத்திருக்கிறது. இதையெல்லாம் வைத்துத்தான் அமலாக்கத்துறையின் அடுத்த டார்கெட் தூத்துக்குடி எனப் பேசினேன். தூத்துக்குடி மக்களின் எதிர்பார்ப்பும் அதுதான்.”
நன்றி
Publisher: www.vikatan.com