வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில், தி.மு.க-வினர் மண், மணல் கொள்ளையில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டி, நாளை (22-01-2024) காலை 10 மணியளவில் அணைக்கட்டுப் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில், வேலூர் புறநகர மாவட்டச் செயலாளர் வேலழகன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளையும், வேலூர் புறநகர மாவட்ட அ.தி.மு.க-வினர் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், ‘அ.தி.மு.க-வினரின் போலி நாடகம் எதற்கு?’ என்ற தலைப்பில், போஸ்டர் ஒன்றை அணைக்கட்டு ஒன்றிய தி.மு.க-வினர், சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த போஸ்டரில், ‘‘கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது, அணைக்கட்டு ஒன்றியத்துக்குட்பட்ட கரடிகுடி ஊராட்சியில் ‘பினாமி’ பெயரில் சட்டவிரோதமாக கல்குவாரியில் கிராவல் மண், கரடிகுடி அங்காளப் பரமேஸ்வரி கோயில் இடத்தில் பல கோடி ரூபாய்க்கு கிராவல் மண் மற்றும் கற்களை திருடி விற்பனைச் செய்ததாக’’ அ.தி.மு.க-வின் வேலூர் புறநகர மாவட்டச் செயலாளர் வேலழகன் பெயரைக் குறிப்பிட்டு, குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார்கள்.
அதேபோல, ‘‘கடந்த 3 மாத காலமாக நாளொன்றுக்கு 100 லோடுகள் வீதம் கிராவல் மொரம்பு மண்ணையும் திருடிவிட்டு, அந்தத் திருட்டை மறைக்க தி.மு.க-வினர்மீது பழிசுமத்தி போராட்டம் நடத்துவதாகவும்’’ அ.தி.மு.க-வுக்குப் பதிலடிக் கொடுத்திருக்கிறார்கள் தி.மு.க-வைச் சேர்ந்த அணைக்கட்டு ஒன்றியச் செயலாளர்கள். தி.மு.க-வினரின் இந்த போஸ்டர் பதிலடி பரபரப்பைக் கிளப்பியிருப்பதால், நாளைய தினம் நடைபெறவிருக்கும் அ.தி.மு.க-வினரின் ஆர்ப்பாட்டமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY
நன்றி
Publisher: www.vikatan.com