குமாரபாளையம் தி.மு.க நகர் மன்றத் தலைவரான விஜய்கண்ணன், மாவட்டச் செயலாளர் மீதுள்ள அதிருப்தியால், முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் அ.தி.மு.க-வில் இணையயப் போவதாக பரவும் தகவலால், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க-வில் புயல் வீசத்தொடங்கியிருக்கிறது.
இது பற்றி, நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க-வினர் சிலரிடம் பேசினோம். “தி.மு.க, அ.தி.மு.க, சுயேச்சை கவுன்சிலர்களை விலைக்கு வாங்கித்தான், சுயேச்சையாக குமாரபாளையம் நகர் மன்றத் தலைவரானார் விஜய்கண்ணன். அதாவது, குமாரபாளையம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் இருக்கின்றன. அவற்றில், தி.மு.க 14 இடங்களிலும், அ.தி.மு.க 10, விஜய்கண்ணனோடு சேர்த்து சுயேச்சை 9 இடங்களிலும் வெற்றிபெற்றன. நகர் மன்றத் தலைவர் பதவிக்கு 17 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்பதால், தி.மு.க., அ.தி.மு.க என யாருக்கும் தனி மெஜாரிட்டி இல்லாத சூழலில், அப்போதைய தி.மு.க மாவட்டச் செயலாளர் கே.எஸ்.மூர்த்தியும், அ.தி.மு.க தங்கமணியும், ‘ரகசிய கூட்டுவெச்சுக்குவோம். தலைவர் பதவி தி.மு.க-வுக்கு, துணைத் தலைவர் பதவி அ.தி.மு.க-வுக்கு’ என்று டீலிங் பேசிக்கொண்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால், இரண்டு தரப்புக்கும் ‘டிமிக்கி’ கொடுத்த விஐய்கண்ணன், தி.மு.க கவுன்சிலர்கள் 7 பேர், அ.தி.மு.க கவுன்சிலர்கள் 3 பேர், சுயேச்சை 7 பேர் என்று மொத்தம் 17 கவுன்சிலர்களை ‘வளைத்து’ அவர்களின் ஆதரவோடு, சுயேச்சையாக குமாரபாளையம் நகர் மன்றத் தலைவராக பதவியேற்றுக்கொண்டார்.
இதனால், கே.எஸ்.மூர்த்திக்கு, தி.மு.க தலைமையிடம் ஏக டோஸ் கிடைத்தது. அதன் காரணமாக விஜய்கண்ணன் மீது கே.எஸ்.மூர்த்தி ஆரம்பத்தில் கோபமாக இருந்தார். அமைப்புரீதியாக நாமக்கல் மாவட்ட தி.மு.க., கிழக்கு, மேற்கு என இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. 10 வருடங்களுக்கு மேலாக நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளராக கே.எஸ்.மூர்த்தி செயல்பட்டுவந்தார். ஆனால், அ.தி.மு.க-வினரோடு ரகசியமாகக் கூட்டுவைத்திருந்தது, மாவட்டச் செயலாளராக ஸ்திரமாகச் செயல்படாமல், பல்வேறு வகையில் கட்சியைக் கோட்டைவிட்டது என்று பல காரணங்களுக்காக அவரை பதவியிலிருந்து இறக்கியது தி.மு.க தலைமை.
கரூர் செந்தில் பாலாஜி சிபாரிசில், தி.மு.க நாமக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருந்த ‘மதுரா’ செந்தில், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளரானார். அதுவரை சுயேச்சை சேர்மனாக இருந்த விஜய்கண்ணன், ‘மதுரா’ செந்திலிடம் நெருக்கம் காட்டி, உதயநிதியைச் சந்தித்து, கட்சியில் சேர்ந்தார். அதோடு, அதற்கு விசுவாசமாக ‘மதுரா’ செந்திலுக்கு, விஜய்கண்ணன் புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கி பரிசளித்ததாகச் சொல்லப்பட்டது. இந்த நிலையில்தான், மாவட்டச் செயலாளர் பதவி கிடைப்பதற்கு முன்பு, ‘மதுரா’ செந்தில் வகித்து வந்த மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பதவியைக் குறிவைத்து, விஜய்கண்ணன் செயல்பட்டார். அந்தப் பதவியை அவருக்கு வாங்கித்தர ஆரம்பத்தில் ‘மதுரா’ செந்திலும் ஆர்வம் காட்டினார்.
ஆனால், அதன் பிறகு விஜய்கண்ணனும் தனக்குப் போட்டியாக கட்சியில் வளர்ந்துவிடுவாரோ என்று நினைத்த ‘மதுரா’ செந்தில், மேற்கு மாவட்ட இளைஞரணி பதவியை தனது உதவியாளரான பாலாஜிக்கு வாங்கிக்கொடுத்து, விஜய்கண்ணனுக்கு ‘கடுக்காய்’ கொடுத்தார். விஜய்கண்ணனை சாமாதானம் செய்ய அவருக்கு மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணித் தலைவர் பதவியை வாங்கிக் கொடுத்தார். ஆனால், குமாரபாளையம் வடக்கு நகரச் செயலாளர் அல்லது நாமக்கல் தி.மு.க மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பதவியை எதிர்பார்த்திருந்த விஜய்கண்ணன், அது கிடைக்காத கோபத்தில் தனக்கு ஆதரவான 9 கவுன்சிலர்களோடு அ.தி.மு.க-வுக்கு தாவப்போவதாக பரபர டாக் போய்கொண்டிருக்கிறது” என்றார்கள்.
ஆனால், விஜய்கண்ணனைப் பற்றி நன்கு அறிந்த இன்னும் சிலர், “விஜய்கண்ணன் ரியல் எஸ்டேட் தொழிலில் பெரும் புள்ளி. இவர், முதலில் தி.மு.க-வில் இருந்தார். ஆனால், பதவி எதுவும் கிடைக்கவில்லை. அதனால், கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பத்து மாதங்களுக்கு முன்பு, பா.ஜ.க-வுக்குத் தாவி, அந்தக் கட்சியின் மாவட்ட வர்த்தக அணித் தலைவராகப் பதவி வகித்தார். ஆனால், அப்போது அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த தங்கமணியோடு, நிலம் அப்ரூவல் வாங்குவது சம்பந்தமாக விஜய்கண்ணனுக்கு முட்டிக்கொண்டது. அதற்கு பா.ஜ.க தரப்பு தனக்கு உதவவில்லை என்ற கோபத்தில் ஆறு மாதங்கள் கழித்து, தி.மு.க-வுக்கு வந்தார். ஆனால், அங்கு யாரும் அவரை அங்கீகரிக்கவில்லை. ஆன்லைன் மூலம் உறுப்பினரானேரே தவிர, முறையாகக் கட்சியில் சேர்ந்து உறுப்பினர் கார்டெல்லாம் வாங்கவில்லை. ஆனாலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் குமாரபாளையத்தில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் வெங்கடாசலத்துக்கு ஆதரவாக, தனியாக தனது ஆதரவாளர்களோடு சென்று ஓட்டுக் கேட்டார். அதன் பிறகு, கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் குமாரபாளையம் நகராட்சித் தலைவர் பதவிக்கு சீட் கேட்டு காய்நகர்த்தினார்.
ஆனால், அப்போதைய தி.மு.க நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் கே.எஸ்.மூர்த்தி, அதை விரும்பவில்லை. இதனால் கோபமடைந்த விஜய்கண்ணன், சுயேச்சையாகக் களமிறங்கினார். அதன் பிறகு, தான் ஜெயித்ததோடு, தி.மு.க, அ.தி.மு.க, சுயேச்சைக் கவுன்சிலர்களை ‘வளைத்து’ சுயேச்சை சேர்மனானார். இதற்கிடையில், மாவட்டச் செயலாளர் பதவி பெற்ற ‘மதுரா’ செந்தில் மூலம், தி.மு.க-வுக்கு வந்தார். தற்போது, நினைத்த பதவி கிடைக்கவில்லை என்பதற்காக, அ.தி.மு.க-வுக்கு தாவப்போவதாகப் பரவும் தகவலில் உண்மை இருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை. காரணம், அ.தி.மு.க மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணிக்கும், இவருக்கும் இடையில் ஏற்கெனவே ரியல் எஸ்டேட் தொழில் சம்பந்தமாக பிரச்னை ஏற்பட்டது. அதனால், தங்கமணி, விஜய்கண்ணனை பகைமை மறந்து, அ.தி.மு.க-வில் சேர்த்துக்கொள்வாரா என்பது கேள்விக்குறிதான். என்னதான் நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!” என்றார்கள்.
இதுகுறித்து, குமாரபாளையம் நகர் மன்றத் தலைவர் விஜய்கண்ணனிடம் பேசினோம். “ஆமாம். என்னை அ.தி.மு.க தரப்பிலிருந்து, நல்ல பதவி தருவதாகக் கூறி, அழைக்கிறார்கள். நான் தி.மு.க-வில் உண்மையாக உழைத்தேன். சுயேச்சையாக ஜெயித்தாலும், தி.மு.க-வில் இணைந்து, குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியை தி.மு.க வசமாக்க கடுமையாக பாடுபட்டு வருகிறேன். அதற்காக, குமாரபாளையம் வடக்கு நகரச் செயலாளர் பதவி அல்லது தி.மு.க மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பதவி என ஏதோ ஒரு பதவியை எதிர்பார்த்தேன். ஆனால், மாவட்டச் செயலாளர் என்னை அடிமையாக வைத்திருக்க நினைத்தார். நான் கேட்காத, உப்புசப்பில்லாத மாவட்ட சுற்றுச்சூழல் அணித் தலைவர் பதவி பெற்றுக் கொடுத்தார். அதில் எனக்கு உடன்பாடில்லை. இந்த நிலையில், எனது ஆதரவு கவுன்சிலர்கள் 9 பேர், ‘உழைப்பவர்களுக்கு மரியாதை தராத, மாவட்டச் செயலாளர் உள்ள கட்சியில் நமக்கு என்ன வேலை… கட்சி மாறுவோம்’ என்று சொன்னார்கள்.
அதற்காக, ‘உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை’ என்றும், ‘திறமையானவர்கள் பதவிகளை மறுத்தால், அதன் பின் முட்டாள்களால் ஆளப்படுவதுதான் அவர்கள் தலைவிதி’ என்ற வாசகத்தையும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்து, கட்சி மாறப்போவதாக அறிவித்தேன். இதற்கிடையில், அ.தி.மு.க தரப்பிலிருந்து என்னிடம் பேசினார்கள். அதனால், முன்னாள் அமைச்சர் தங்கமணியையே நேராகப் போய் சந்தித்தேன். ‘நல்ல பதவி தருகிறோம். அ.தி.மு.க-வுக்கு வாருங்கள்’ என்று அழைப்பு விடுத்தார். நான் பதவிக்காக அலையவில்லை.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
அதேநேரம், உண்மையாக உழைப்பவர்களை தி.மு.க மாவட்டச் செயலாளர் ‘மதுரா’ செந்தில் மதிப்பதில்லை. நான் கட்சியை விட்டுப் போகிறேன் என்று தெரிந்ததும், என்னை அழைத்து சமாதானம் செய்யவில்லை. மாறாக, எனது உதவியாளரிடம் பேசிய மாவட்டச் செயலாளர், ‘கட்சி மாறினால், சேர்மன் விஜய்கண்ணன் எந்த தொழிலும் பண்ணமுடியாது. அவரோட எல்லா தொழிலையும் முடக்கிவிடுவேன்’ என்று மிரட்டினார். இதனால், கண்டிப்பாக அ.தி.மு.க-வுக்கு தாவிவிடுவோம் என்று முடிவெடுத்திருந்த நிலையில், இன்று காலை நாமக்கல் தி.மு.க கிழக்கு மாவட்டச் செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் போன் மூலமாக என்னிடம் பேசிய, தி.மு.க தலைவர் தளபதி ஸ்டாலின், ‘தவறாக முடிவெடுக்க வேண்டாம். நாளை ஒரு நிகழ்ச்சிக்கு திருச்சிக்கு வருகிறேன். அங்கு வாருங்கள், பேசிக்கொள்ளலாம்’ என்று சொல்லியிருக்கிறார்.
நமது மனக்குமுறலை வெளிப்படுத்த கட்சித் தலைமை ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கும் சூழலில், நாம் தவறாக முடிவெடுக்கக் கூடாது என்று நாளை தலைவரைச் சந்தித்து, மனக்குமுறலை சொல்லப் போகிறேன். ஆனால், என்னை அடிமையாக நினைக்கும் ‘மதுரா’ செந்தில் மாவட்டச் செயலாளராக இருக்கும்வரை, அவருடன் இணைந்து அந்த மாவட்டத்தில் எப்படி கட்சி பணியாற்ற முடியும் என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது. நாளை தலைவரை சந்தித்தப் பிறகுதான், என்னுடைய அடுத்தகட்ட முடிவை அறிவிப்பேன்” என்றார்.
இது குறித்து, நாமக்கல் தி.மு.க மேற்கு மாவட்டச் செயலாளர் ‘மதுரா’ செந்தில் தரப்பில் பேசினோம். “அண்ணன்மீது எந்த தவறும் இல்லை. விஜய்கண்ணன் தி.மு.க-வை வளர்க்க இங்கு என்ன பாடுபட்டார் என்று நீங்களே கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். அவரது நோக்கம், தன்னை வளர்த்துக்கொள்ள தி.மு.க-வைக் கருவியாக்கப் பார்க்கிறார். பதவிக்காக எந்த எல்லைக்கும் போவார். தி.மு.க-வில் சேர்மன் சீட் கிடைக்கவில்லை என்பதால்தான், கட்சி கட்டுப்பாட்டை மீறி சுயேச்சையாக நின்றார். அதோடு, தி.மு.க சார்பில் நின்று வென்ற 7 கவுன்சிலர்களையும் வளைத்து, சேர்மனாகி தி.மு.க-வுக்கு அவமானத்தைத் தேடித்தந்தார். அதோடு, சுயேச்சை சேர்மனாகவும் பதவியேற்றார். ஆனால், அதையெல்லாம் மறந்து, குமாரபாளையம் நகராட்சியை தி.மு.க வசமாக்க வேண்டும் என்பதற்காக, தி.மு.க தலைமையிடம் பேசி, விஜய்கண்ணன் மீதான கோபத்தை குறையவைத்து, அவரை தி.மு.க-வில் சேர்த்துக்கொள்ள ‘மதுரா’ செந்தில் அத்தனை மெனக்கெட்டார்.
ஆனால், கட்சியில் சேர்ந்த உடனேயே நகரச் செயலாளர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் என்று பவர்ஃபுல்லான பதவிகளை எதிர்பார்த்தார். இதனால், கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. இருந்தாலும், சேர்மனாக இருப்பதால், அவருக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதற்காக, கட்சித் தலைமையிடம் பேசி, விஜய்கண்ணனுக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணித் தலைவர் பதவி வாங்கிக் கொடுத்தார். ஆனால், தான் நினைத்த பதவி கிடைக்கவில்லை என்பதற்காக, அவருக்கு ஏணியாக உதவிய ‘மதுரா’ செந்தில் மீது பொய்ப் புகார்களைச் சொல்லியதோடு, தற்போது கட்சி மாறப்போகிறேன் என்று ஃப்லிம் காட்டி வருகிறார். பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார் விஜய்கண்ணன். கட்சித் தலைமையிடம் எங்கள் அண்ணனும் உண்மை என்ன என்பதை நாளை எடுத்துச் சொல்வார்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com