மக்கள் சாரைசாரையாக மேடையை நோக்கிக் குவிந்தார்கள். தூரத்து இடிமுழக்கமாய் எங்கும் கேப்டன் என்ற கோஷம் தீவுத்திடலையே அதிரவைத்தது. நா வரண்டு, கால்கடுக்க வரிசையில் நின்று, வியர்த்து விறுவிறுக்க கோஷமிட்டு ஓடிவந்தவர்களெல்லாம், விஜயகாந்தின் உடலைப் பார்த்த ஒரு நொடி உறைந்துபோனார்கள். அந்தக் கம்பீர மீசையைக் காணமுடியவில்லை. சிவந்த கண்களை கறுப்புக் கண்ணாடி திரையிட்டு மறைத்திருந்தது. முன்பு மோதிரத்தையேப் பிளக்கும் விரல்கள், இப்போது சுற்றிய நூலாய் சுருங்கிப்போயிருந்தது. `கேப்டன்… கேட்பன்’ என்ற கூப்பிட்ட குரலுக்கு அவர் எழுந்து வரவேயில்லை!


அவரைப் பார்த்த சிலர் அப்படியே மயங்கி விழுந்தார்கள். சிலர் சில நிமிடங்களுக்காக காவலர்களிடம் முரண்டுபிடித்தார்கள். சிலர் கோபத்தில் எதிரே நின்ற பத்திரிகைகாரர்களை ஏகத்துக்கும் வசைபாடினார்கள். பலர் கத்திக் கதறினார்கள். தரையில் அழுது புரண்டார்கள். பலர் யாரையும் குற்றம் சொல்ல முடியாமல், தங்களைத் தாங்களே தலையில் அடித்துக்கொண்டார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியார்கள், காவல்துறையினர் என அவரைப் பார்த்து அழாத ஆளில்லை! அங்கு கட்சி வேட்டி கட்டியவர்களைவிட அழுக்குத் தோய்ந்த கச்சை வேட்டிகள் கட்டியவர்கள்தான் நன்றியுள்ள காக்கைகளைப்போல வட்டமிட்டுக்கொண்டிருந்தார்கள். கேப்டனின் இழப்பை சகியாது கூட்டமாகக் கரைந்து கரைந்து தீவை கண்ணீரிலே மூழ்கடித்தனர்.
வி.ஐ.பி பாதை வழியே வந்த திரையுலக நட்சத்திரங்களும் அரசியல் பெருந்தலைகளும் அழுவதில் இங்கே விதிவிலக்கல்ல! கண்ணாடிப்பேழையில் விஜயகாந்த்துக்கு மாலை அணிவித்து, நிற்கதியாய் கலங்கிநிற்கும் அவரின் மனைவி, மக்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தையின்றி கைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டார்கள். மைக்கில் பேச வார்த்தையின்றி பாதியிலே நிறுத்தினார்கள். ரஜினியும் கமலும் `விஜயகாந்தின் கோபம் நியாயத்துக்கும் நேர்மைக்குமானது’ என்றார்கள்.
தவிர, பத்திருபது ஆண்டுகளுக்கு முன்பு திரையில் பார்த்திருந்த இதுவரை வெளியில் தலைகாட்டிராமல் இருந்துவந்த பழைய முகங்களும், வில்லன் நடிகர்கள், துணை நடிகர்களும், ஃபைட் மாஸ்டர்களும், ஸ்டன்ட் கலைஞர்களும், இயக்குநர்களும் திரைப்படத் தயாரிப்பாளர்களும் மறுபிறவி எடுத்து அமரர் விஜயகாந்தின் உடலின் அருகே அமர்ந்திருந்தார்கள். `எங்கள் வெற்றியும் வளர்ச்சியும் கேப்டன் போட்ட பிச்சை!’ என ஒருசேரக் கூறினார்கள். சிலர் செய்த தவற்றுக்கு விஜயகாந்த்தின் பூவுடலின்முன்பு மன்னிப்பு கோரினார்கள். “அவர் மனிதரல்ல… எங்களுக்கு கடவுள்! இறைவன்… இறைவனடிச் சேர்ந்திருக்கிறார்” என்றார்கள். ஒட்டுமொத்த கூட்டமும் உணர்ச்சிக் கடலில் கொந்தளித்தது.
நன்றி
Publisher: www.vikatan.com