தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஜூலை மாதம் முதல் `என் மண் என் மக்கள்’ என்ற தலைப்பில் 234 தொகுதிகளை இணைக்கும் விதமாக யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக நேற்று திருவாரூரில் யாத்திரையை மேற்கொண்டார்.
அதில் அவர் பேசியதாவது, “காசியிலே இறந்தால் முக்தி என்பார்கள், திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பார்கள், காஞ்சியிலே வாழ்ந்தால் முக்தி என்பார்கள், சிதம்பரம் சென்று ஆண்டவனை தரிசித்தால் முக்தி என்பார்கள். ஆனால் பிறந்தாலே முக்தி என்ற சிறப்பை பெற்றது இந்த திருவாரூர். அப்படிப்பட்ட திருவாரூர் திமுக-வின் கோட்டை என்று சொல்லப்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த தேர்தலில் ஒன்பது முறை திமுக வெற்றிப்பெற்ற மாவட்டம் திருவாரூர். மாவட்டத்தின் வளர்ச்சியை குறிப்பிடும் தமிழக அரசின் மனித வளர்ச்சிக் குறியீடு பட்டியலில் திருவாரூர் கடைசியில் இருந்து ஐந்தாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தின் மொத்த உற்பத்தி திறனில் திருவாரூர் மாவட்டத்தின் பங்கு ஒரு சதவீதம் கூட இல்லை. வெறும் 0.8 சதவீதம் தான். திருவாரூரில் பிறந்தால் முக்தி கிடைக்கும் என்பார்கள். ஆனால் தற்போது திருவாரூரில் பிறந்தவர்கள் வெளிநாடுகளுக்கும் வெளியூர்களுக்கும் வேலைகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.
இந்த திருவாரூர் மண்ணில் இன்னும் தார் சாலையை பார்க்காத கிராமங்கள் உள்ளன . அங்கு சாலை அமைத்து அதற்கு கலைஞர் சாலை என பெயர் வைத்துக் கொள்ளவதை விட்டுவிட்டு, ஆழித்தேரோடும் தெற்கு வீதிக்கு கலைஞர் பெயரை வைக்க வேண்டும் என துடித்தது இந்த திராவிட கழகம். ஆனால் மக்களின் ஆதரவோடு போராடியதால் அத்திட்டத்தை செயல்படுத்த முடியாமல் திரும்பப் பெற்றது. இது தான் இந்த திராவிட மாடலின் வளர்ச்சி.
ஆன்மிகத்திற்கு பெயர் போன இந்த திருவாரூர் மண்ணில் பிறந்த தலைவர் கருணாநிதியின் பேரன், மக்களை வளர்ச்சி பாதையில் கொண்டுச் செல்வதற்கு பாடுபடுவதை தவிர்த்து, சனாதனத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என பாடுப்பட்டுக் கொண்டிருக்கிறார். திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலை கார் கண்ணாடியை கூட திறந்து பார்த்திராத உதயநிதி முடிந்தால், முதலில் அத்தனை மகிமைக்கொண்ட இந்த கோயிலின் ஒரு செங்கலை அசைத்துப் பார்க்கட்டும். பிறகு மக்களோடு ஒன்றியிருக்கும் சனாதனத்தை ஒழிப்பதுப்பற்றி பேசட்டும்.
தமிழகத்தின் சுகாதார கட்டமைப்பு ஐரோப்பா நாடுகளில் இருப்பது போன்று இருப்பதாக முதல்வர் குறிப்பிட்டு பேசி வருகிறார். அப்படியானால் ஊழல் வழக்கில் கைதான அமைச்சருக்கு பொதுமக்கள் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனையை விட்டுவிட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்ன. இதே முதல்வரின் சொந்த ஊரில்தான் அரைமணி நேரம் மின்சாரம் இல்லாததால் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அம்மையார் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். திமுக ஆட்சியில் சுகாதாரத்துறை சிரழிந்து வருகிறது. கஞ்சா விற்பனையை அறவே ஒழிக்க வேண்டும் என பேசும் முதல்வரின் கட்சியில் பொறுப்பில் இருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தான் கஞ்சா விற்பது, கள்ளச்சாராயம் காய்ச்சுவது என பல குற்றச் செயல்களை புரிந்து வருகின்றனர்.
தவறு செய்தது தன் மகன் என அறிந்ததும், தன் மகனையே தேர் சக்கரத்தில் இட்டுக் கொன்ற வரலாற்றைக் கொண்ட மனுநீதிச் சோழன் வாழ்ந்த இந்த ஊரை பூர்வீகமாகக் கொண்டவர்கள் தான், தந்தை மகன் என தொடர்ந்து தவறிழைத்து வருகின்றனர். கோபாலபுரத்தில் தொடங்கிய ஊழலானது தற்போது தமிழக அமைச்சரவையில் உள்ள 35 அமைச்சர்களில் 11 பேர், அதாவது 33 சதவீதம் என மூன்றில் ஒரு அமைச்சர்கள் மீது எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம் என்ற நிலையில் நீதிமன்றங்களில் ஊழல் வழக்குகள் உள்ளது. மன்னன் எவ்வழியோ மன்னனின் சேவகர்களும் அவ்வழியே என்று கோபாலபுரத்தில் தொடங்கிய ஊழல் இன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் தலைவிரித்து ஆடுகிறது. ஊழலை வளர்த்தது மட்டுமே திராவிட மாடலின் சாதனை.
திராவிட முன்னேற்றக் கழகம் அழிந்ததற்கு காரணம், வாழையடி வாழையாக கட்சியின் தலைமைப் பொறுப்பை ஓரே குடும்பமே வைத்திருப்பது தான். சாதியை குறிப்பிட்டு அரசியல் செய்யும் பல்வேறு கட்சிகளுக்கு இடையே ஏழை சாதி, பெண்கள் சாதி, விவசாய சாதி, இளைஞர்கள் சாதி என்ற நான்கு சாதிகளை அடிப்படையாகக் கொண்டும், இவற்றில் ஏழை சாதியை அறவே ஒழித்து பிறவற்றை மேம்படுத்ததுவது என்ற குறிக்கோளோடு பிரதமர் செயல்பட்டு வருகிறார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி என்பது உறுதிசெய்யப்பட்ட ஒன்று. ஆனால் அந்த வெற்றி எத்தனை உறுப்பினர்கள் எண்ணிக்கையோடு என்பதைத்தான் நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்” என அப்பகுதி மக்களின் ஆஸ்தான கோஷமான ஆரூரா தியாகேசா என கூறி நிறைவு செய்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com