சர்ச்சையைக் கிளப்பிய நிர்மலா சீதாராமன்!
சமூக வலைத்தளமான ட்விட்டரில் டி.எஸ்.கிருஷ்ணன் என்பவர் ‘ஜல்லிக்கட்டு என்ற சனாதனத் திருநாள்’ என்று ஒரு பதிவை பகிர்ந்திருந்தார். அந்த பதிவைப் பகிர்ந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “சங்ககால தமிழ் இலக்கியமான கலித்தொகையில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் பலராமர், ஸ்ரீகிருஷ்ணர், சிவன், முருகன் உள்ளிட்ட தெய்வங்களை ஒப்பிட்டு உவமைப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த கால மக்களின் வாழ்க்கை அப்படி இருக்கிறது. ஆனால், அதனை வேறுபடுத்திப் பார்ப்பது தவறான நோக்கம், பிரிவினைவாதம் ஆகும் என்று டி.எஸ்.கிருஷ்ணன் சுட்டிக்காட்டுகிறார்” என்று பதிவு செய்திருந்தார்.
நிர்மலா சீதாராமனின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மதுரை எம்.பி சு.வெங்கடேசன் “ஏறுதழுவல் என்னும் ஜல்லிக்கட்டின் வரலாற்றை மாற்ற நினைக்கிறது ஒரு கூட்டம். “தீய உள்நோக்கங்கொண்ட பிரிவினைவாதம்” என நிர்மலா சீதாராமன் கூறுகிறார். உலகம் அதிர உரக்கச்சொல்வோம். கீழடி அகழாய்வு தொடங்கி அலங்காநல்லூர் வாடிவாசல் வரை “தமிழும் திமிலும்” எமது பேரடையாளம்.” எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
சனாதன தர்மத்தினுடைய ஒரு பகுதி!
இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன், “ஒவ்வொரு ஜல்லிக்கட்டுக்கு ஒவ்வொரு கோயிலுடன் தொடர்புடையது. இதனை நாடாளுமன்ற உறுப்பினர். சு.வெங்கடேசன் மறுக்க முடியுமா… இதனை இந்த நாட்டின் மரபு, பண்பாடு, மதச்சார்பின்மை என்ற பெயரில் திமுகவும், கம்யூனிஸ்ட்டுகளும் இந்து மதத்தின் அடையாளம், பண்பாடு, கலாச்சாரத்தைச் சீரழித்து அவமானப்படுத்துவதை வேலையாக வைத்திருக்கிறார்கள்.
கோயிலில் சாமி கும்பிட பிறகுதான் காளையை அவிழ்த்து விடுவார்கள். ஜல்லிக்கட்டில் முதல் காளையே சாமியுடைய காளைமாடுதான் வெளிவரும். கோயிலிலிருந்து ஜல்லிக்கட்டைப் பிரிக்க நினைக்கிறார்களா…. ஜல்லிக்கட்டு என்பது இந்து மாதவழிபாட்டில் ஒரு கூறு. அதனால் தான் காளையைச் சாமியோடு ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். ஜல்லிக்கட்டு என்பது சனாதன தர்மத்தினுடைய ஒரு பகுதி” என்று பேசியிருந்தார்.
மத சாயம் பூச நினைக்கிறார்கள்!
இந்த விவகாரம் குறித்து திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னாவிடம் பேசினோம், ” பாஜக எப்போதுமே தான் பெற்ற பிள்ளையை விட மற்றவர்களின் பிள்ளைக்குப் பெயர் வைக்கப் பேரார்வம் கொண்டவர்கள். சனாதனத்துக்கு எதிரானவர் வள்ளுவர். அவருக்கே காவி சாயம் பூசுகிறார்கள். அனைவர்க்கும் பொதுவான ஒருவரைச் சனாதன வாதியாகச் சித்தரிப்பது கண்டிக்கத்தக்கது. சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றார் வள்ளலார். ஆனால், அவரையே சனாதனத்தைப் பரப்பவந்தவர் என்று சொல்கிறார்கள். ஏறுதழுவுதல் தமிழர் பாரம்பரியம். அது நம்முடைய கலாசாரம்.
ஜல்லிக்கட்டைத் தடை செய்தபோது ஒட்டுமொத்த தமிழர்களும் ஒன்றுகூடித்தான் போராட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டத்தில் மதமோ… சாதியோ இல்லை.. தமிழர் என்ற உணர்வு மட்டுமே மேலோங்கி இருந்தது. அப்படிப்பட்ட ஜல்லிக்கட்டில் கூட மத சாயத்தைப் பூச நினைக்கிறார்கள். அவர்களுக்கு எப்போதுமே இங்கு இருக்கும் ஒரு நடைமுறையை மாற்றவேண்டும். வரலாற்றைத் திருத்தி மத சாயம் பூசவேண்டும். குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது மட்டுமே அவர்களின் எண்ணம். அதன்மூலம் அரசியல் ஆதாயம் அடையவேண்டும். அதற்காக என்ன வேண்டுமென்றாலும் பேசுவார்கள். எதை வேண்டுமென்றாலும் செய்வார்கள். ஆனால், அவர்கள் எண்ணம் தமிழகத்தில் என்றுமே ஈடேறப் போவதில்லை” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com