ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி மும்முரம் காட்டிவருவதால், ‘இந்தியா’ கூட்டணியின் கூட்டத்தைக் கூட்டுவதில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமார். இதன் மூலமாக, காங்கிரஸ் கட்சி மீது தனது அதிருப்தியை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஏற்கெனவே, ‘இந்தியா’ கூட்டணியில் முக்கிய அங்கமாக இருக்கும் சமாஜ்வாடி கட்சி, காங்கிரஸ் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறது. மத்தியப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் தொகுதிப்பங்கீடு குறித்து பேசச் சென்ற சமாஜ்வாடி கட்சித் தலைவர்களை காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் முதல்வர்கள் கமல்நாத்தும், திக்விஜய் சிங்கும் அவமதித்துவிட்டனர் என்று வெளிப்படையாகக் குமுறினார் அகிலேஷ் யாதவ்.
பெரியண்ணன் மனோபாவத்துடன் காங்கிரஸ் கட்சி நடந்துகொள்கிறது என்று விமர்சித்த அகிலேஷ் யாதவ், மத்தியப்பிரதேசத்தில் தேர்தலை தனித்து எதிர்கொள்ளும் முடிவை எடுத்திருக்கிறார். அகிலேஷ் யாதவ் வெளிப்படையாக விமர்சித்தபோதும், அது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் யாரும் பதில் சொல்லவில்லை. அகிலேஷ் யாதவைத் தொடர்ந்து, தற்போது நிதிஷ் குமாரும் காங்கிரஸை விமர்சித்திருக்கிறார்.
‘பா.ஜ.க-வை ஆட்சியிலிருந்து அகற்றுங்கள்.. நாட்டைக் காப்பாற்றுங்கள்’ என்ற தலைப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பீகார் தலைநகர் பாட்னாவில் நவம்பர் 2-ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசிய நிதிஷ் குமார், ‘மத்திய பா.ஜ.க அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. அந்தக் கூட்டணியில் தற்போது முன்னேற்றம் இல்லை.
இந்தியா கூட்டணியின் தலைமைப் பொறுப்பை காங்கிரஸ் வகிப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒப்புக்கொண்டன. ஆனால், காங்கிரஸ் கட்சி ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் மும்முரமாக இருக்கிறது. இதற்கு முன்பாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களிலும் காங்கிரஸ் வெற்றிபெற்றது. அதனால், ஐந்து மாநிலத் தேர்தல் முடிந்தால்தான் இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டத்தை காங்கிரஸ் கூட்டும் என்று நினைக்கிறேன்’ என்றார் நிதிஷ் குமார்.
அதே நேரத்தில், பா.ஜ.க-வை விமர்சிக்கவும் அவர் தவறவில்லை. ‘முஸ்லிம்களை இந்துக்களுக்கு எதிராகத் தூண்டிவிட பா.ஜ.க முயல்கிறது. ஆனால், பீகாரில் அது எடுபடவில்லை. நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பா.ஜ.க ஈடுபடவில்லை. எனவே, நாட்டின் வரலாற்றை மாற்றுவதற்கு பா.ஜ.க முயல்கிறது’ என்றார் நிதிஷ் குமார்.
நிதிஷ் குமார், அகிலேஷ் யாதவ் போன்ற முக்கியத் தலைவர்கள் காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறையை விமர்சித்திருக்கும் நிலையில், ‘காங்கிரஸ் மீது இந்தியா கூட்டணிக் கட்சிகள் கொண்டிருக்கும் அதிருப்தி குறித்து காங்கிரஸ் தலைமையிடம் தெரிவித்துவிட்டோம்’ என்று கூறியிருக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா.
காங்கிரஸ் மீதான நிதிஷ் குமாரின் அதிருப்தி குறித்து டி.ராஜாவிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது, ஐந்து மாநிலத் தேர்தலில் காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீட்டில் பிரச்னை ஏற்பட்டதாகவும், அதனால் சமாஜ்வாடி கட்சியும் ஐக்கிய ஜனதா தளமும் அதிருப்தியில் இருக்கின்றன என்றும் டி.ராஜா கூறினார். மேலும், ‘இந்தியா கூட்டணியில் காங்கிரஸ்தான் பெரிய கட்சி. கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு காங்கிரஸுக்கு உண்டு. இதை காங்கிரஸ் தலைமையிடம் தெரிவித்துவிட்டோம்’ என்றார் டி.ராஜா.
பாட்னா, பெங்களூரு, மும்பை என அடுத்தடுத்து மூன்று இடங்களில் வெற்றிகரமாகக் கூட்டங்களை நடத்திய ‘இந்தியா’ கூட்டணி செயல்பாட்டில் தற்போது தொய்வு ஏற்பட்டிருக்கிறது என்பது நிதர்சனம். அதற்கு காங்கிரஸ் கட்சியே முக்கியக் காரணம். எனவேதான், அகிலேஷ் யாதவ், நிதிஷ் குமார் ஆகியோரின் விமர்சனங்களுக்கு பதில் சொல்லாமல் கடந்து செல்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள். இது இந்தியா கூட்டணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் பார்க்கிறார்கள்.
ஆனால், ‘இத்தகைய சிறு மாச்சரியங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கத்தைப் பாதிக்காது’ என்கிறார் டி.ராஜா. அதாவது, மத்தியில் பா.ஜ.க அகற்றிவிட்டு மதச்சார்பற்ற அரசை அதிகாரத்தில் அமர வைக்க வேண்டும் என்பது இந்தியா கூட்டணியின் நோக்கம். அந்த நோக்கம் நிச்சயம் நிறைவேறும் என்று டி.ராஜா கூறுகிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com