வங்கதேச கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஷகிப் அல் ஹசன், அதிகாரபூர்வமாக அரசியலில் நுழைந்திருக்கிறார். இவர் ஆளும் பங்களாதேஷ் அவாமி லீக் கட்சியில் இணைந்து, அடுத்த ஆண்டு ஜனவரி 7-ம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடவிருக்கிறார். மேலும், ஷகிப்பின் வேட்புமனுவை பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற வாரியம் உறுதிசெய்ய வேண்டும். ஷகிப்பின் வேட்புமனு உறுதிசெய்யப்பட்டால், அவர் மொத்தம் மூன்று தொகுதிகளில் போட்டியிடுவார். `ஷகிப் அல் ஹசன், நாட்டின் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமானவர். அதனால், அவர் போட்டியிடும் தொகுதியில் எளிதாக வெற்றி பெறுவார்” என்கின்றனர் அவர் கட்சியினர்.
மேலும், அவர் தனது சொந்த மாவட்டமான மகரா அல்லது தலைநகர் டாக்காவில் போட்டியிடுவார் என நம்புவதாக ஆளும் பங்களாதேஷ் அவாமி லீக் கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் பஹாவுதீன் நசீம் கூறியிருக்கிறார். தற்போது வங்கதேசத்திலுள்ள முக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகத் தெரிவிக்கின்றன.
சுமார் 170 மில்லியன் மக்கள் வசிக்கும் வங்கதேசத்தில், கடந்த 15 ஆண்டுகளாக ஹசீனா தலைமை தாங்கி ஆட்சி செய்து வருகிறார்.
இதற்கு முன்பு, வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் மஷ்ரஃப் மோர்டாசா 2018-ல் அரசியலில் சேர்ந்து, அதே ஆண்டு நடைபெற்ற ஆளுங்கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி
Publisher: www.vikatan.com