மகாராஷ்டிராவில் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருப்பவர் அப்துல் சத்தார். சிவசேனா(ஷிண்டே)வை சேர்ந்த அப்துல் சத்தார் அடிக்கடி சர்ச்சைக்குறிய வகையில் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சத்ரபதி சாம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள சிலோட் என்ற இடத்தில் அப்துல் சத்தார் தனது பிறந்த நாளுக்கு நாட்டுப்புற கலைஞர் கவுதமி பாட்டீல் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தார். கவுதமி பாட்டீலின் லாவனி நடனம் மகாராஷ்டிரா முழுக்க பிரபலம் ஆகும். அவரின் நடனத்தை பார்க்க 60 ஆயிரம் பேர் வந்திருந்தனர். நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது சிலர் மேடையில் ஏறி தகராறில் ஈடுபட்டனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. அதோடு நிகழ்ச்சியும் நிறுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அப்துல் சத்தாரும் கலந்து கொண்டார். அவர் எழுந்து மேடைக்கு சென்று மைக்கை வாங்கி தகராறில் ஈடுபவர்கள் மீது தடியடி நடத்தும் படியும், அவர்களது முதுகில் கடுமையாக அடித்து எலும்பை உடைக்கும்படியும் போலீஸாரிடம் கேட்டுக்கொண்டார். அதோடு இளைஞர்களை பார்த்து, “உங்கள் தந்தை கூட இப்படியான நிகழ்ச்சிகளை பார்த்திருக்க மாட்டார். நீங்களெல்லாம் பேய்கள். உங்களுக்கு மனிதர்களைப்போல் நடந்து கொள்ளத்தெரியாது. குழப்பத்தை ஏற்படுத்துபவர்களை அனுப்பியது யார் என்று எனக்கு தெரியும், இவர்களை நாயை அடிப்பது போல் அடித்து சிறையில் போடுங்கள். அவர்களை ஜாமீனில் வெளியில் விடாதீர்கள்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
அமைச்சரின் இந்த பேச்சு தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் பரவி இருக்கிறது. இதையடுத்து அமைச்சர் அப்துல் சத்தார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அதுல் லோண்டே இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ”பிறந்த நாளில் நடனம் பார்க்க வந்தவர்களை நாயை அடிப்பது போல் அடிக்க போலீஸாருக்கு அமைச்சர் அப்துல் சத்தார் உத்தரவிட்டு இருக்கிறார். அவர் அமைச்சரா அல்லது கேங்ஸ்டரா” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து தனது கருத்துக்கு அப்துல் சத்தார் வருத்தம் தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ”கிராமிய மொழியில் பேசி கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்றேன். இது யாருக்காவது வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com