மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் சூழலில், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் மேற்கு வங்கத்தில் மம்தாவும், பஞ்சாப்பில் பகவந்த் மானும் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்தது, கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இருப்பினும், இந்தியா கூட்டணியில் தாங்கள் தொடர்வதாகவே அவர்கள் தெரிவித்தனர். ஆனால், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்த நிதிஷ் குமார், இந்தியா கூட்டணியிலிருந்தே வெளியேறப்போவதாகவும், பீகாரில் மீண்டும் பா.ஜ.க கூட்டணியில் ஆட்சியமைக்கப் போவதாகவும் எழுந்த பேச்சுகள் இரண்டு நாள்களாகப் பரபரப்பை ஏற்படுத்திவந்தன.

அதற்கேற்றாற்போலவே, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் கே.சி.தியாகி, `காங்கிரஸின் பொறுப்பற்ற தன்மை மற்றும் பிடிவாதத்தால் இந்தியா கூட்டணி உடையும் நிலையில் இருக்கிறது’ என்று கூறி, கிட்டத்தட்ட அந்த செய்தியை உறுதிப்படுத்தினார். இன்னொருபக்கம், பீகார் பா.ஜ.க-வும், தனது எம்.எல்.ஏ-க்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவந்தது. இத்தகைய சூழலில், நிதிஷ் குமார் இன்று காலையில், பீகார் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து, இன்று காலை 11 மணியளவில் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற நிதிஷ் குமார், ஆர்.ஜே.டி, காங்கிரஸுடனான தற்போதைய மகாபந்தன் கூட்டணியை முறித்துக்கொள்வதாக, தன்னுடைய முதல்வர் ராஜினாமா கடித்ததை ஆளுநர் ராஜேந்திர அர்லேகரிடம் அளித்தார். ஆளுநரும் அதை ஏற்றுக்கொண்டார். இந்த செய்தியறிந்ததும், பிரதமர் மோடி நிதிஷ் குமாரை போனில் தொடர்புகொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இன்று மாலையே பா.ஜ.க-வுடன் கூட்டணியமைத்து, நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராகப் பதவியேற்கப் போவதாக பா.ஜ.க தரப்பில் தகவல்கள் வெளியாகின்றன.

இந்த நிலையில், ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நிதிஷ் குமார், “இன்று என்னுடைய முதல்வர் பதவியை நான் ராஜினாமா செய்துவிட்டேன். அதோடு, மாநிலத்தில் ஆட்சியை கலைக்க வேண்டும் என்றும் ஆளுநரிடம் கூறிருக்கிறேன். எதுவுமே சரியில்லாததால்தான் இத்தகைய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்த விஷயத்தில், எல்லோருடைய கருத்துகளையும் கேட்டு அதனை கவனத்தில் எடுத்துக்கொண்டேன்” என்றார்.
மேலும், இந்தியா கூட்டணி குறித்து பேசிய நிதிஷ் குமார், “கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்தியா கூட்டணியில் வேலைபார்த்துக்கொண்டிருந்தோம். ஆனால், எந்தவொரு விஷயங்களும் செயல்படவில்லை. இப்போது புதிய கூட்டணியை உருவாக்குவோம்” என்று தெரிவித்தார்.

நிதிஷ் குமார் இவ்வளவு விளக்கமளித்தாலும், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்த தனக்கு கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகமாக ஒருங்கிணைப்பாளர் பதவியை தராததாலே இத்தகைய அதிரடி முடிவை நிதிஷ் குமார் எடுத்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இன்னொருபக்கம், பீகாரில் மீண்டும் பா.ஜ.க-வுடன் நிதிஷ் குமார் கூட்டணியமைக்கப் போவதாக வரும் பேச்சுகளுக்கு மத்தியில், `செத்தாலும் பா.ஜ.க-வுடன் சேரமாட்டேன்’ எனக் கடந்த காலங்களில் நிதிஷ் குமார் கூறியது வைரலாகி வருகிறது.
நன்றி
Publisher: www.vikatan.com