நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலுக்குப் பிறகு, 2024 லோக்சபா தேர்தலுக்கான வேலைகளை இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் மீண்டும் முன்னெடுத்திருக்கிறது. ஐந்து மாநில தேர்தல் முடியும்வரை இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் தலைகாட்டாமல் இருந்ததால், கூட்டணியிலிருக்கும் சில தலைவர்கள் அதிருப்தியிலிருந்தனர். இதனாலேயே, டிசம்பர் 6-ம் தேதி நடைபெற இருந்த ஆலோசனைக் கூட்டம் தள்ளிப்போனதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், டிசம்பர் 19-ம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கிட்டத்தட்ட கூட்டணியிலிருக்கும் அனைத்து தலைவர்களும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், லோக்சபா தேர்தலுக்கான சீட் பகிர்வு விரைவில் முடிக்க முடிவெடுக்கப்பட்டது. அதேசமயம், கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன கார்கேவை முன்னிறுத்தலாம் என மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் முன்மொழிந்தது பேசுபொருளானது.
அதற்கு, `முதலில் தேர்தலில் வெற்றிபெறுவதில் கவனம்செலுத்த வேண்டும். வெற்றிப் பிறகு பிரதமர் யார் என்பதை முடிவுசெய்யலாம்’ என அந்தக் கூட்டத்திலேயே மல்லிகார்ஜுன கார்கே கூறிவிட்டார். இருந்தாலும், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து இந்தியா கூட்டணிக்கு அச்சாரமிட்ட பீகார் முதல்வர் நிதிஷ் குமார், இதில் கோபமடைந்ததாகப் பேச்சுக்கள் வெளிவந்தன. இதனால், நிதிஷ் குமாரைச் சமாதானப்படுத்த உடனடியாக ராகுல் காந்தி அவரைத் தொடர்பு கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அன்று நடந்த இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் வெளிப்பட்ட முடிவில் தனக்கு எந்த கோபமும் இல்லை என நிதிஷ் குமாரே தற்போது விளக்கமளித்திருக்கிறார். மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய நிதிஷ் குமார், “2024 தேர்தலில் ஐக்கிய ஜனதா தளமும், இந்தியா கூட்டணியும் இணைந்து செயல்படும். ஆலோசனைக் கூட்டத்தில் வெளிப்பட்ட முடிவில் நான் சிறிதும் கோபப்படவில்லை.
நாங்கள் அனைவரும் ஒன்றாகவே வேலை செய்கிறோம். நாங்கள் யாரும் கோபப்படவில்லை. நீங்கள் யாரை வேண்டுமானாலும் முடிவு செய்யுங்கள் என்று கூட்டத்தில் கூறிவிட்டோம். அதோடு, சீட் பகிர்வை முன்கூட்டியே முடிக்குமாறு பரிந்துரைத்திருக்கிறேன். எனவே, சீட் பகிர்வு ஃபார்முலா விரைவில் முடிவு செய்யப்படும்” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com