நாகரத்னாவின் தந்தை வெங்கடராமையா, கர்நாடகாவில் இருந்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் நீதிபதி என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். 1962-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி பிறந்த நீதிபதி நாகரத்னா தனது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை டெல்லியில் முடித்தார். 1987-ம் ஆண்டு கர்நாடகா பார் கவுன்சிலில் தன்னை வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்ட நாகரத்னா, வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கினார்.
2008-ம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நாகரத்னா நியமிக்கப்பட்டார். 2010-ம் ஆண்டு நிரந்தர நீதிபதியானார். 2021-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தபோது, 2012-ம் ஆண்டு எலக்ட்ரானிக் மீடியாவை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
நாகரத்னா 2019-ம் ஆண்டு அளித்த தீர்ப்பில் கோயில்கள் வர்த்தக நிறுவனம் கிடையாது என்றும், அங்கு பணிபுரிபவர்களுக்குக் கருணைத் தொகையான கிராஜுவிட்டி கொடுக்க முடியாது என்றும் குறிப்பிட்டு இருந்தார். அதோடு சுப்ரீம் கோர்ட்டில் பணமதிப்பிழப்பு வழக்கு விசாரணையில் தீர்ப்பு கூறப்பட்டபோது, அதில் மற்ற நீதிபதிகளில் இருந்து நாகரத்னா மாறுபட்ட தீர்ப்பையே வழங்கினார். தனது தீர்ப்பில், பணமதிப்பிழப்பு நல்ல நோக்கத்தில் கொண்டு வரப்பட்டதுதான் என்றாலும் சட்டத்திற்கு எதிரானது என்றும், வெறும் ஓர் உத்தரவு மூலம் இதனைச் செயல்படுத்தக் கூடாது என்றும், பாராளுமன்றத்தின் மூலம் கொண்டு வந்திருக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
நன்றி
Publisher: www.vikatan.com