தற்போது நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் கட்சிகளின் வெற்றி, தோல்விகளுக்கு அப்பாற்பட்டு, பழங்குடியினப் பிரதிநிதிகளுக்கான அதிகாரம் கவனம் ஈர்த்திருக்கிறது. குறிப்பாக, தெலங்கானாவில் காங்கிரஸ் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், நக்சலைட்டாக பொதுவாழ்வில் ஈடுபட்டு, பின்னர் அரசியலில் நுழைந்து வெற்றிகண்டுவரும் பழங்குடியினத்தைச் சேர்ந்த சீதாக்கா, பழங்குடியின நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
அந்த வரிசையில், தற்போது சத்தீஸ்கரில் பழங்குடியினத்தைச் சேர்ந்த விஷ்ணு தியோ சாய் என்பவரை முதல்வராக நியமித்திருக்கிறது பா.ஜ.க. அரசியல் குடும்ப வாரிசான இவர், நான்கு முறை எம்.பி, மூன்று முறை எம்.எல்.ஏ, முன்னாள் மத்திய அமைச்சர் எனப் பிரபலமாக இருந்தாலும், தனது அரசியல் வாழக்கையை கிராமத் தலைவராக (கிராம சர்பஞ்ச்) தொடங்கி தற்போது மாநில முதல்வராகியிருக்கிறார்.
விஷ்ணு தியோ சாயும், அவரின் குடும்பப் பின்னணியும்!
1964-ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தின் (2000-ம் ஆண்டு சத்தீஸ்கர் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது) ஜஷ்பூர் மாவட்டத்தில், பாகியா என்ற கிராமத்தில், பிப்ரவரி 21-ம் தேதி ஒரு விவசாயி குடும்பத்தில் பிறந்தார் விஷ்ணு தியோ சாய். கன்வார் பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர், குங்குரியின் ஜஷ்பூரிலிள்ள லயோலா மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து, பட்டப் படிப்புக்காக அம்பிகாபூருக்குச் சென்றார். ஆனால், பட்டப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு, 1988-ல் மீண்டும் தனது சொந்த கிராமத்துக்குத் திரும்பி, விவசாயத்தில் ஈடுபட்டார்.
இவரின் தாத்தா புத்நாத் சாய், 1947 முதல் 1952 வரை நியமன எம்.எல்.ஏ-வாகப் பணியாற்றியிருக்கிறார். ஜனசங்கத்தைச் சேர்ந்த இவரின் பெரியப்பா நர்ஹரி பிரசாத் சாய், 1962, 1972 என இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக வெற்றிபெற்று, அதன் பின்னர் 1977-ல் ராய்கர் மக்களவைத் தொகுதி எம்.பி-யாக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார். அதோடு, மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி ஆட்சியில் மத்திய அமைச்சராகவும் இவர் பணியாற்றியிருக்கிறார்.
அரசியல் என்ட்ரி!
விஷ்ணு தியோ சாய், முதன்முதலாக 1989-ல், தனது சொந்த கிராமமான பாகியாவில் போட்டியின்றி தலைவராக (சர்பஞ்ச்) வெற்றிபெற்று பொதுவாழ்வில் களமிறங்கினார். பின்னர், திலீப் சிங் ஜூதேவ் எனும் பா.ஜ.க தலைவர் மூலமாக, மாநில அரசியலிலும் நுழைகிறார் விஷ்ணு தியோ சாய். அதே ஆண்டில், பா.ஜ.க சார்பில் மத்தியப் பிரதேசத்தின் தப்காரா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, சட்டமன்றத்துக்குள் நுழைந்தார். 1990 முதல் 1998 வரை தொடர்ச்சியாக இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்தார்.
நாடாளுமன்றத்தில் விஷ்ணு தியோ சாய்!
தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகச் சட்டமன்றத்துக்குள் நுழையும் வகையில், 1998-ல் பத்தல்கான் தொகுதியில் போட்டியிட்ட விஷ்ணு தியோ சாய், இம்முறை தோல்வியைத் தழுவினார். ஆனால், அடுத்த ஆண்டே ராய்கர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றியும் பெற்று எம்.பி-யாக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார். தன்னுடைய முதல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றதைப்போல மக்களவைத் தேர்தலிலும் வெற்றிபெற்ற விஷ்ணு தியோ சாய், 2014 வரை அதே தொகுதியில் எம்.பி-யாக வெற்றிபெற்றார். இடையில், 2000-ல் மத்தியப் பிரதேசத்திலிருந்து 16 தென்கிழக்கு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, சத்தீஸ்கர் என்ற தனி மாநிலம் உருவாக்கப்பட்டது. அப்போது, 2006-ல் சத்தீஸ்கர் மாநில பா.ஜ.க தலைவராக இவர் நியமிக்கப்பட்டார். 1999 முதல் 2014 வரை நான்கு முறை எம்.பி-யாக நாடாளுமன்றத்துக்குச் சென்றார். இந்தக் காலகட்டங்களில், வேளாண்துறை, நீர்வளத்துறை தொடர்பான மத்திய கமிட்டியில் உறுப்பினராக இருந்த விஷ்ணு தியோ சாய், பிரதமர் மோடியின் அமைச்சரவையில் மத்திய எஃகு, சுரங்கங்கள் துறை இணையமைச்சராக இருந்தார்.
மீண்டும் மாநில அரசியல்!
2014 முதல் 2019 வரை மோடி அமைச்சரவையில் மத்திய அமைச்சராக இருந்த விஷ்ணு தியோ சாய்க்கு, அதற்கடுத்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டது. இதற்கிடையில், 2018-ல் சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தோல்வியடைந்தது, அப்போது அந்தக் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர் ஓ.பி.சி பிரிவைச் சேர்ந்த தரம்லால் கௌசிக். அந்தத் தேர்தலில், பழங்குடியினப் பகுதியில் காங்கிரஸ் பெருமளவு வெற்றி பெற்றதால், பழங்குடியினத்தவரான விஷ்ணு தியோ சாயை இரண்டாவது முறையாக மாநிலத் தலைவராக்கியது பா.ஜ.க. பின்னர், பிற்படுத்தப்பட்டோரை பா.ஜ.க வஞ்சிப்பதாக அப்போதைய முதல்வர் பூபேஷ் பாகல் கடுமையான எதிர்பிரசாரத்தை நடத்த, 2022-ல் விஷ்ணு தியோ சாயை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து நீக்கி, ஓ.பி.சி பிரிவில் சாஹு சமூகத்தைச் சேர்ந்த எம்.பி அருண் சாவோவை மாநிலத் தலைவராக்கியது பா.ஜ.க மேலிடம்.
சூசகமாக அறிவித்த அமித் ஷா!
பொதுவாகவே அமைதியானவர், மென்மையானவர் என்று கூறப்படும் விஷ்ணு தியோ சாய், 2022-ல் தன்னை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து நீக்கியபோதுகூட அமைதியாக இருந்தார். அமைதியாக இருந்தாலும்கூட, தனது கட்சியைச் சேர்ந்த சத்தீஸ்கரின் முன்னாள் முதல்வர் ராமன் சிங், ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு நெருக்கமானவராக இருந்தார். தேசிய செயற்குழு உறுப்பினராக கட்சித் தலைமை கூறும் வேலைகளைப் பார்த்துவந்தார். அதைத் தொடர்ந்து, 2023 சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத் தேர்தலில் குங்குரி தொகுதியில் போட்டியிட விஷ்ணு தியோ சாய்க்கு கட்சியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதோடு, குங்குரி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, `விஷ்ணு தியோ சாயை நீங்கள் எம்.எல்.ஏ ஆக்குங்கள். நாங்கள் இவரை பெரிய ஆளாக ஆக்குகிறோம்’ என்று மக்களிடம் கூறினார். ஆனால், அந்த சமயத்தில் யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள், `சத்தீஸ்கரின் பழங்குடியின முதல்வராக விஷ்ணு தியோ சாய் வருவார்’ என்று.
சத்தீஸ்கரின் பழங்குடியின முதல்வர் விஷ்ணு தியோ சாய்!
இன்னொருபக்கம், முதல்வர் வேட்பாளர் இவர்தான் என்று யாரையும் அறிவிக்காமல்தான் தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டது பா.ஜ.க. அதற்கேற்றவாறு கைமேல் பலனாக, மொத்தமுள்ள 90 இடங்களில் 54 இடங்களில் வெற்றிபெற்று, காங்கிரஸிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியது பா.ஜ.க. குறிப்பாக, பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட 29 தொகுதிகளில் 17-ல் பா.ஜ.க வெற்றிபெற்றது. ஆனாலும், முதல்வர் யார் என்பது மட்டும் ஒருவாரத்துக்கு மேலாக இழுபறியாக இருந்தது. ராமன் சிங், ரேணுகா சிங் ஆகியோர்தான் முதல்வர் பதவி ரேஸில் இருப்பார்கள் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், விஷ்ணு தியோ சாய் சத்தீஸ்கரின் புதிய முதல்வராக இருப்பார் என பா.ஜ.க நேற்று அறிவித்தது. இதன்மூலம், சத்தீஸ்கர் மாநிலத்தின் பழங்குடியின முதல்வராக பதவியேற்கவிருக்கிறார் விஷ்ணு தியோ சாய். இந்த அறிவிப்பு வெளியானதும் மோடி, அமித் ஷா நட்டா உட்பட கட்சியின் மூத்த தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த விஷ்ணு தியோ சாய், “முதல்வராக, பிரதமர் மோடியின் உத்தரவாதங்களை புதிய அரசாங்கத்தின் மூலம் நிறைவேற்ற முயல்வேன். வீட்டு வசதித் திட்டத்தின் மூலம் மக்களுக்கு 18 லட்சம் வீடுகளை வழங்குவதே அரசின் முதல் வேலை” என்று தெரிவித்தார். முதல்வர் பதவியேற்பு விழா நாளை மறுநாள் (டிசம்பர் 13) ராய்பூரில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. முன்னதாக, சத்தீஸ்கரின் முதல் பழங்குடியின முதல்வராக அஜித் ஜோகி 2000-ல் பதவியேற்றார். இருப்பினும் 2019-ல் “அஜித் ஜோகி `சத்னாமி’ பட்டியினத்தவர்தான், பழங்குடியினத்தவர் அல்ல” என்று மாநில அரசின் உயரமட்டக் குழு கூறியது. அதனடிப்படையில் பார்க்கையில், சத்தீஸ்கரின் முதல் பழங்குடியின முதல்வரும் விஷ்ணு தியோ சாய்தான்.
கட்சிகளுக்கிடையிலான போட்டிகள், விருப்பு வெறுப்புகளைக் கடந்து அனைத்து சமூக மக்களுக்குமான ஆட்சி வழங்க வாழ்த்துகள் விஷ்ணு தியோ சாய்!
நன்றி
Publisher: www.vikatan.com