எதிர்க்கட்சி எம்.பி-க்களைக் கண்டித்து, வேலூரில் பா.ஜ.க-வினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் கலந்துகொண்டு பேசிய பா.ஜ.க-வின் மாநிலப் பொதுச்செயலாளரும் வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மேயருமான கார்த்தியாயினி, ‘‘வேலூர் மாநகராட்சியின் நிலை அய்யோ… கந்தரகோலமாக இருக்கிறது. ஏதாவது கேட்டால் மேயர் சுஜாதா பதில் சொல்லமாட்டார். துணை மேயர், கமிஷனர் ஆகியோரும்கூட பதிலளிக்க மாட்டார்கள். சபைக்கே சம்பந்தமில்லாத ஆட்கள்தான் ‘வா… உட்கார். நில்… பேசாதே’ என்கிறார்கள்.

பத்திரிகையாளர்கள் ஏதாவது கேள்விக் கேட்டாலும், ‘வந்தியா… போட்டோ எடுத்துக்கிட்டியா. போய்க்கிட்டே இரு!’ என்கிறார்கள். இவர்களுக்கு ‘மரபு’ என்றால் என்னவென்றுத் தெரியுமா… மாநகராட்சியில் எந்தப் பணிகளுமே நடைபெறவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மாநகராட்சி நிர்வாகம் உறங்கிக்கொண்டுதான் இருக்கிறது.
நாய்கள் தொல்லை, மாடுகள் தொல்லை இருக்கிறது. சரியான முறையில் சுத்திகரிப்புச் செய்யப்பட்ட தண்ணீர் கிடைப்பதில்லை. குழாய்கள் ஆங்காங்கே உடைந்துபோயிருக்கின்றன. கொசு மருந்துகூட தெளிக்க வருவதில்லை. கால்வாய்களையும் தூர்வாராமல் விட்டிருக்கின்றனர்.

கடைத் திறப்பு விழாவில் மட்டும்தான் மேயரைப் பார்க்க முடிகிறது. எங்கேயாவது புதிதாகக் கடை வையுங்கள். குறிப்பாக, சாப்பாடு கடை வைத்தால், முதல் ஆளாகப் போய் ஓப்பனிங்கில் கலந்துகொள்வார். மில்க் ஷேக் கடை, துணிக்கடை ஓப்பனிங் என்றாலும் அங்குப் போய்விடுகிறார். இதற்காகத்தான் மக்கள் உங்களைத் தேர்ந்தெடுத்தார்களா… மக்கள் பணியை செய்யப் பாருங்கள். அதைவிடுத்து, ‘பா.ஜ.க காலூன்றக் கூடாது’ எனத் தேவையில்லாமல் பேசிக்கொண்டிருக்கக் கூடாது’’ என்றார் காட்டமாக!
நன்றி
Publisher: www.vikatan.com