இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் 1965-ம் ஆண்டு மாபெரும் போராட்டம் வெடித்தது. அதில், பல்வேறு உயிர்கள் பலியாகின. இந்த விவகாரம் அப்போது அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. குறிப்பாக, தமிழ்நாட்டில், தி.மு.க ஆட்சியைப் பிடிக்க இந்த போராட்டம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதைத் தொடர்ந்து, ஜனவரி 25-ம் தேதி துக்க நாளாக தி.மு.க சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 25-ம் தேதி உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் வீர வணக்கம் செலுத்துவது வழக்கம். அந்த வகையில் இன்றும், மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகள் சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. இந்த ஆண்டும், இன்று தி.மு.க சார்பில் சென்னை அண்ணாநகரில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டம் நடந்தது.
அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது,“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி நாம். தமிழ் நிலத்தில் இந்தி மொழி ஆதிக்கத்தை நிறுவ முயன்றவர்களை எதிர்த்து, `இருப்பது ஒரு உயிர், அது போகப் போவது ஒருமுறை, அது இந்த நாட்டுக்காக மொழிக்காகப் போகட்டுமே!’ எனத் தமிழ் காக்க உயிரையும் கொடுத்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன்.
முன்னாள் முதல்வர் அண்ணா, 1968-ம் ஆண்டு ஜனவரி 23 அன்று, சட்டமன்றத்தில் இருமொழிக் கொள்கை தீர்மானத்தை நிறைவேற்றினார். அதைத் தொடர்ந்து நடந்த மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில்,’என்னால் ஆனதைச் செய்துவிட்டேன். இனி மத்திய அரசு தன்னால் ஆனதைச் செய்யட்டும். நான் குறுக்கே நிற்கமாட்டேன்’ எனத் தைரியமாகப் பேசினார். 9.9.2022 அன்று, அலுவல் மொழி தொடர்பாக நாடாளுமன்றக் குழுத் தலைவர் அமித் ஷா, குடியரசுத் தலைவரிடம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார்.
அதில், மாநில மொழிகளுக்கும், அதைப் பேசும் மக்களின் நலனுக்கும் எதிரான பல்வேறு பரிந்துரைகள் இருந்தன. அதை எதிர்த்து, 2022 அக்டோபர் 18-ம் தேதி இந்தியாவிலேயே முதன்முதலாகத் துணிச்சலுடன் அதை எதிர்த்து சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டுவந்து, அதைப் பரிந்துரைக்கக் கூடாது என ஒன்றிய அரசை வலியுறுத்தினோம். இந்தியாவை ஆளும் பா.ஜ.க. அரசு, இந்தி பேசும் மக்களை ஏமாற்றுவதற்குத்தான் இந்தி மொழியைத் திணிக்கிறது.
பா.ஜ.க.வுக்கு அதிகம் வாக்களிப்பது வடமாநில மக்கள்தான். குறைந்தபட்சம், வாக்களித்த இந்தி பேசும் வடமாநில மக்களுக்காவது, எந்த நன்மையாவது செய்திருக்கிறார்களா? கொரோனா காலத்தில் திடீரென ஊரடங்கு போடப்பட்டதால் தங்களின் சொந்த ஊருக்குச் செல்வதற்குக் கூட இந்தி பேசும் மக்களுக்குப் பேருந்து வசதியைக் கூட ஏற்படுத்தித் தரவில்லை. இந்தி பேசும் மக்கள், பல நூறு கிலோ மீட்டர் தூரம் நடந்து தங்களின் ஊருக்குச் சென்ற கொடுமையைப் பார்த்து நாம் கண்ணீர் விட்டோம். பலர் தண்டவாளத்தில் பலியானார்கள்.
இதை வைத்துப் பார்த்தால், மத்திய பா.ஜ.க அரசு கொரோனாவை விடக் கொடியது. சாரை சாரையாக நடந்து சென்ற இந்தி பேசும் மக்களுக்கு நீங்கள் காட்டிய இரக்கம் இதுதானா? ஆனால், அந்த மக்களை, இப்போது ராமர் கோயிலைக் காண்பித்துத் திசைதிருப்புகிறார்கள். தற்போது, வடமாநிலத்திலும் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. இந்த முறை வடமாநிலங்களிலும் பா.ஜ.க ஆட்சியை பிடிக்க முடியாது. அதுதான் உண்மை. சேலம் இளைஞர் அணி மாநாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர்.
அந்த மாநாட்டில், வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் ‘இந்துக்களின் உண்மையான எதிரி பா.ஜ.க.தான் என்பதை அம்பலப்படுத்துவோம்’ என்பதுதான் மிக முக்கியமான தீர்மானம். இது இளைஞரணிக்கான உறுதிமொழி மட்டுமல்ல, எல்லோரின் உறுதிமொழியாகவும் இதை ஏற்று, இந்தப் பரப்புரையை எல்லோரும் செய்தாக வேண்டும். எப்போதும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பா.ஜ.க மதத்தைக் கையில் எடுக்கிறது.
நாம் இந்தியாவைக் காக்க பா.ஜ.க.வின் தோல்விகளை, அவர்களின் தமிழ்மொழி விரோதப் போக்கை அம்பலப்படுத்துவோம். பா.ஜ.க அரசின் தோல்விகளைப் பட்டியலிடலாம். ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்வதானால், அத்தியாவசியப் பொருள்களின் தொடர் விலையேற்றம். தமிழ்நாட்டின் நலன்களை பா.ஜ.க-விடம் அடகு வைத்த எடப்பாடி பழனிசாமி, தற்போதும் பா.ஜ.க-வின் பாதம் தாங்கியாகப் பவனிவருகிறார். தமிழ்நாட்டின் உரிமைகள் அனைத்தையும் டெல்லியில் அடகு வைத்தார். தன் நாற்காலியைக் காப்பாற்றவே 4 ஆண்டுகள் போராடினார்.
பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்து, குடியுரிமைச் சட்டத்தையும், வேளாண் சட்டத்தையும் ஆதரித்தார். நீட்டை நுழையவிட்டார், ஜி.எஸ்.டி-யை தடுக்காமல் மாநில நிதிநிலையைப் பாதாளத்துக்குத் தள்ளினார். பா.ஜ.க-வின் இந்தி திணிப்புக்கும் உதவினார். சிறுபான்மையின மக்களுக்குத் துரோகம் செய்தவர் இப்போது ஒரு நாடகம் போடுகிறார். வரும் நாடாளுமன்றத்தில் பா.ஜ.க-வும், அதன் கூட்டணிகளும் தோற்கடிக்கப்பட வேண்டும். இந்தியா கூட்டணியின் வெற்றியில்தான் இந்தியாவின் எதிர்காலமே இருக்கிறது. இந்தியா கூட்டணியின் ஆட்சி உண்மையான கூட்டாட்சியாக அமையும்” எனப் பேசினார்.
நன்றி
Publisher: www.vikatan.com