ஒரு வாரத்துக்கு முன்பு தி.மு.க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், `டெங்கு, கொரோனவைப்போல சனாதனத்தை ஒழிக்கவேண்டும்’ என்று சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசியது, பா.ஜ.க மற்றும் வலதுசாரிகள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை எதிர்த்த தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வேண்டும் என்றும், அப்படிச் செய்யவில்லையென்றால் செப்டம்பர் 11-ம் தேதி அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
அதன்படி, அண்ணாமலை தலைமையில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் இன்று போராட்டம் நடைபெற்றது.
அப்போது மேடையில் பேசிய அண்ணாமலை, “தமிழகத்தில் சனாதன தர்மத்தை வேரறுப்போம் என்று சொல்வது புதிதாக இருக்கலாம், ஆனால் சனாதான தர்மத்தை, இந்து தர்மத்தை கொச்சைப்படுத்துவது புதிதல்ல. 70 ஆண்டுகளாகத் தமிழகத்தில் இது நடந்து கொண்டிருக்கிறது. சனாதனத்தை ஒழிப்போம் என்ற மாநாட்டில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பேசுவதற்கு முன்பு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, `சனாதன தர்மமும் இந்து மதமும் ஒன்றுதான், வெவ்வேறு கிடையாது’ என்று கூறினார். ஆனால், அதன் பிறகு பேசிய உதயநிதி சனாதன தர்மத்தை வேரறுப்போம் என்று கூறினார். இதையெல்லாம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அதே மேடையில் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆனால், முதல்வர் ஸ்டாலின் முதல் தி.மு.க தலைவர்கள் வரை அவர்கள் அனைவரும், சனாதன தர்மம் வேறு, இந்து தர்மம் வேறு என்றும், பா.ஜ.க-வினர் இதனை திரித்துப் பேசுவதாகவும் அறிக்கை வெளியிட்டனர். சனாதன தர்மம் யாருக்கும் எதிரி கிடையாது. மதங்கள் வருவதற்கு முன்பிலிருந்தே சனாதன தர்மம் இருந்தது. ஆதிகாலத்தில் இங்கிருந்தவர்கள் எல்லோருமே சனாதன தர்மத்தைப் பின்பற்றியவர்கள். அந்நிய படையெடுப்பில் ராஜாவோ, வீரனோ கொல்லப்பட்ட பிறகு, அவர்களின் மனைவிகளையும், தங்கைகளையும், தாய்மார்களையும் ஒரு பரிசுப் பொருளாக வெள்ளையர்கள் எடுத்துச் செல்ல ஆரம்பித்தனர்.
அதனால்தான் போரில் தன் கணவன் இறக்கும்போது, கணவனோடு அந்தப் பெண் உடன்கட்டை ஏற ஆரம்பித்தார். இது சனாதன தர்மத்தில் வரவில்லை. இது பெண்ணின் கற்பைக் காப்பாற்றுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒன்று. முதன்முறையாக ராஜாராம் மோகன்ராய் என்ற சனாதன தர்ம சீர்திருத்தவாதி தான், பெண்கள் உடன்கட்டை ஏறுவதை எதிர்த்து வில்லியம் பெண்டிக் பிரபுவுக்கு மனு கொடுத்தார். அதன் பிறகு 1829-ல் வில்லியம் பெண்டிக், உடன்கட்டை ஏறக் கூடாது என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார். அப்போது பெரியார் இருந்தாரா, திராவிடர் கழகம் இருந்ததா… தி.மு.க இருந்ததா… அதேபோல் விதவைகள் மறுமணம் செய்யக் கூடாது என்பதை சனாதன தர்மம் எப்போதுமே கொண்டு வரவில்லை. சிலர்தான் அதைப் பின்பற்றினர். 1856-ல் இதை எதிர்த்து, இதற்காக சட்டம் கொண்டு வர காரணமாக இருந்தவர், மேற்கு வங்கத்தைச் சார்ந்த ஈஸ்வர் வித்ய சந்திரசேகர் என்கிற சனாதனவாதி.
சனாதன தர்மத்தில் நீங்கள் குறை சொல்லும் குற்றங்களை சனாதன தர்மம் உருவாக்கவில்லை. அதில் இருக்கக்கூடிய சில மனிதர்கள் உருவாக்கினார்கள். எனவே இதற்காகத்தான் நீதிக்கட்சி, தி.மு.க பிறந்தது, பெரியார் பிறந்தார் என்ற பொய்யை உங்கள் குடும்பத்துக்குள்ளேயே சொல்லிக் கொள்ளுங்கள். இந்தியாவைப் பொறுத்தவரை அனைத்து மக்களையும் உள்ளடக்கக்கூடிய தர்மமாக சனாதன தர்மம் இருக்கிறது. சனாதன தர்மம் என்றால் பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்துவது என்று சொல்லிக் கொண்டே 70 ஆண்டுகள் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். சனாதன தர்மத்தைப் பொறுத்தவரை எந்தக் கோட்பாடும் கிடையாது. இப்படித்தான் இருக்க வேண்டும் என்கின்ற அறிவுரையும் கிடையாது. யார் வேண்டுமானாலும் இயற்கையின் நியதிகளுக்கு உட்பட்டு வாழ்க்கையை வாழலாம் என்பது சனாதன தர்மம்.
இது பழைய தமிழகம் இல்லை என்பதை தி.மு.க புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் தி.மு.க வந்த பிறகுதான் சாதி அரசியல் வந்தது. தமிழகத்தை சாதிக்கலவர பூமியாக மாற்றியிருப்பது தி.மு.க-வின் முக்கிய சாதனை. கடவுள் எனும் ஆன்மாவை எடுத்து விட்டால், அப்போதுதான் மேல் சாதி, கீழ் சாதி என்கின்ற பாகுபாடு வரும். 70 ஆண்டுகளாக திராவிட இயக்கம் என்று சொல்லி நீங்கள் சாதித்தது என்ன… தமிழகத்தில் பா.ஜ.க நிச்சயம் ஒரு நாள் ஆட்சிக்கு வரத்தான் போகிறது, அப்போது உங்களுக்கு என்ன தேவையோ அது நடக்கத்தான் போகிறது. அதுவரை நீங்கள் என்ன பேசுகிறீர்களோ அதைப் பேசிக்கொள்ளுங்கள்” என்று கூறினார்.
அதன் பின்னர் அண்ணாமலை சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு காவல் ஆணையர் அலுவலகத்துக்கு செல்கிறோம். உச்ச நீதிமன்றத்தில் 153(a) அப்படியே உதயநிதிக்கு பொருந்தும் என்று காவல்துறைக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். சனாதன தர்மத்தை, இந்து தர்மத்தை வேரறுப்போம் என்று சொன்னவர்கள் மீது, ஏன் உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை” என்று கேள்வியெழுப்பினார்.
அதைத் தொடர்ந்து, இந்த ஆர்ப்பாட்டத்தினால் பொதுமக்களுக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “பொதுமக்களுக்காகத்தான் இந்தப் போராட்டம். இது ஒரு நாள் போராட்டம் இல்லை, 70 ஆண்டுக்கால போராட்டம். மகாத்மா காந்தி அறப்போராட்டம் நடத்தியதை, போக்குவரத்து இடையூறு எனப் போய் கேட்டீர்களா… இந்த பிரச்னை முக்கியமானது என இந்தியா முழுவதும் உள்ள மக்கள் கருதுகின்றனர். காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. தி.மு.க, சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று பேசுவது புதிது. இதனால் நாங்கள் ஆர்ப்பாட்டத்தை கையில் எடுத்திருக்கிறோம். நாங்கள் கைதாகவும் தயாராகத்தான் வந்தோம். காவல்துறையும் கடமையை செய்யவில்லை என்றால், மக்களுக்கு என்ன வழி. காவல்துறையை நாங்கள் மதிக்கின்றோம். அதனால்தான் இங்கு யாரும் கைதுசெய்யப்படவில்லை” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY
நன்றி
Publisher: www.vikatan.com