`சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சனாதன தர்மம் குறித்து அவதூறாகப் பேசிய உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும்’ என்பதை வலியுறுத்தி, நேற்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் பா.ஜ.க-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் கலந்துகொண்டவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அதில், “சனாதன தர்மம் வேறு, இந்து மதம் வேறு என புதிய விளக்கம் கொடுத்து சமாளிக்க முயல்கிறார்கள். இந்து என்றால் திருடன் என்று வசைபாடிவிட்டு, பொதுமக்களிடமிருந்து பலமான எதிர்ப்புக் குரல் வந்ததும், உள்ளம் கவர்ந்த திருடன் என்று கூறியதாக, நீதிமன்றத்தில் பூசி மொழுகிய கலைஞர் கருணாநிதி வழிவந்தவர்கள்தானே. இவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்… இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சராக இருக்கும் சேகர் பாபு, இந்து சமயத்தை ஒழிப்போம் என்று கூடிய கூட்டத்தில் கலந்துகொண்டதன் மூலம், அமைச்சராகப் பதவி வகிக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டார்.
மேற்கத்திய நாடுகள் பல உருவாகும் முன்னரே, நாம் நாகரிகத்தின் உச்சத்தில் இருந்தோம். அந்த வாழ்வியலைத்தான் இவர்கள் சிதைக்கப் பார்க்கிறார்கள். எப்படி பல நாடுகளின் தொன்மையான பல நாகரிகங்கள் இன்று காணாமல் போய்விட்டனவோ, அப்படி ஒரு நிலையை நமக்கும் ஏற்படுத்த இவர்கள் செய்யும் முயற்சிதான், சனாதன தர்மம் வேறு, இந்து மதம் வேறு என்று பிரித்துப் பேசுவது. சனாதன தர்மத்தில் அனைத்து உயிர்களுமே சமம் என்பதாகத்தான் இருக்கிறது.
இதையேதான் திருக்குறள் உள்ளிட்ட அனைத்து பக்தி இலக்கியங்களும் கூறுகின்றன. சனாதன தர்மம் யாருக்கும், எந்த நம்பிக்கைக்கும் எதிரானதல்ல. சனாதன தர்மத்தில் ஏற்றத் தாழ்வுகளுக்கு எப்போதும் இடம் இல்லை. மனிதர்கள் சிலர் செய்யும் தவறுகளுக்கு, எப்படி ஓட்டு மொத்த இந்து சமயத்தையே குறை சொல்வது. நமது நாகரிகத்தையும், கலாசாரங்களையும், விஞ்ஞான அறிவையும் எப்படியாவது சிதைத்து விட முடியாதா என்ற சிலரின் ஏக்கமே தவிர வேறொன்றுமில்லை. நாம் விஞ்ஞானத்திலும், வான சாஸ்திரத்திலும் பிற நாடுகள் இன்று கண்டுபிடிப்பதை, எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கன்டறிந்தவர்கள்.
சனாதன தர்மத்தில் சிறு தெய்வம் பெருந்தெய்வம் என்ற வித்தியாசம் இல்லை. ஆனால், தி.மு.க-வினருக்கு அப்படிப் பிரித்துக் கூற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. சனாதன தர்மம் பெருந்தெய்வங்களைத்தான் வழிபடச் சொல்கிறது. சிறு தெய்வங்களைப் புறக்கணிக்கிறது என்று மக்களைப் பிரிப்பார்கள். பின்னர் சிறு தெய்வ வழிபாடுகளை ஒவ்வொன்றாகத் தடை செய்வார்கள். ஆக்கிரமிப்பு என்ற பெயரில் மக்கள் ஆண்டாண்டு காலமாக வழிபடும் கோயில்களை இடிப்பார்கள்.
வழிபாட்டு முறைகளைத் தடுத்து நிறுத்துவார்கள், அவற்றை மூடநம்பிக்கைகள் என்று கேலி செய்வார்கள். இன்னொரு புறம் பெரிய கோயில்களை, இந்து சமய அறநிலையத்துறை மூலம் கைப்பற்றிக் கொண்டு, கோயில் சொத்துகளையும், கோயிலுக்குச் சொந்தமான நிலங்களையும் ஆக்கிரமித்து, கோயிலுக்குச் சொந்தமான தங்க நகைகளைத் திருடி, உண்டியல் பணத்தைக் கையாடல் செய்து, பூஜை நடைமுறைகளைப் பாழாக்கி அவற்றின் தொன்மையைச் சிதைக்கிறார்கள். பல ஆயிரம் கோடி சொத்துகளுடைய ஆலயங்கள்கூட, முறையான பூஜைகள் நடைபெறாமல் புறக்கணிக்கப்படுகின்றன.
கோயிலுக்குச் சொந்தமான இடங்களிலிருந்து வரும் வருவாய் என்ன ஆகிறது என்பது தெரியவில்லை. கோயில் உண்டியல் பணத்தைத் திருடி, அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு சொகுசு வாகனங்கள் வாங்குகிறார்களே தவிர, ஆலய திருப்பணிகள் செய்வதில்லை. தனிநபர் கட்டிய ஆலயத் திருப்பணிகளை, இந்து சமய அறநிலையத்துறையின் பெயரில் கணக்கு எழுதிக் கொள்கிறார்கள். இவர்களது நோக்கம், இந்து மதத்தை அழிப்பதே, ஒவ்வொரு படிநிலையாக அதைச் செய்ய முயன்று கொண்டிருக்கிறார்கள். அதற்காக, மக்களிடையே பிரிவினையைத் தூண்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இனியும் இவர்கள் நாடகம் இங்கே செல்லுபடியாகாது. நாம் எல்லா மதமும் சம்மதம் என்கிறோம். ஆனால், தி.மு.க-வினர், இந்து மதத்தைத் தவிர அனைத்து மதமும் சம்மதம் என்கிறார்கள். அதற்கு இவர்கள் வைத்திருக்கும் பெயர்தான் சனாதன ஒழிப்பு. இறுதியாக தி.மு.க-வினருக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். கடவுள் இல்லை என்று ஆரம்பித்த உங்கள் கட்சி நிறுவனர் மறைந்த அண்ணாதுரை அவர்கள், இறுதியில் `ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதில் வந்து நின்றார்.
இந்து சமயத்தை வசைபாடி மறைந்த கருணாநிதி, `இந்து மதத்தைப் புண்படுத்தவில்லை’ என்று நீதிமன்றத்துக்குச் சென்று சொன்னார். கடந்த தேர்தலுக்குச் சில மாதங்கள் முன்பாக, தி.மு.க-வில் 90% இந்துக்களே என்றார் முதலமைச்சர் ஸ்டாலின். சனாதன தர்மம் வேறு, இந்து மதம் வேறு என்று சமாளித்துக் கொண்டிருக்கிறார் பட்டத்து இளவரசர் உதயநிதி. உங்களுக்கு வேறு வழியில்லை. தேர்தலின்போது மட்டும் கோயில் படியேறி நெற்றியில் விபூதி வைக்கும் உங்களின் கபட நாடகம், இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது என்பதை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com