ஒடிஷா மாநிலம் பூரியில் உள்ள ஜெகன்நாதர் கோயிலில் வீடியோ எடுப்பதற்காக சோஷியல் மீடியா இன்ஃப்ளுயன்சர், காமியா ஜானி( Kamiya Jani) என்பவர் நுழைந்தது தொடர்பாக ஆளும் பிஜேடி மற்றும் மாநிலத்தில் எதிர்க்கட்சியாக உள்ள பாஜக எக்ஸ் வலைதளத்தில் கடுமையான கருத்து மோதலில் ஈடுபட்டன.
காமியா ஜானி என்பவர் ஒரு சோஷியல் மீடியா இன்ஃப்ளுயன்சர். இன்ஸ்டாகிராமில் மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை கொண்டுள்ளார். இவர் ஒடிஷாவில் ஆளும் கட்சியான பிஜேடி தலைவரும், முன்னாள் அதிகாரியுமான வி.கே.பாண்டியன் உடன் பூரி ஜெகன்நாதர் கோயிலில் உரையாடுவது போன்ற வீடியோ வெளியானது. இது தான் சர்ச்சைக்கு காரணமாக அமைந்தது.
தனது சேனலில் மாட்டிறைச்சி உண்பதை ஊக்குவித்ததாக பாஜக ஆதரவாளர்களால் குற்றம்சாட்டப்பட்ட காமியா ஜானியை கோயிலுக்குள் நுழைய வழிவகை செய்ததாக வி.கே.பாண்டியன் மீது பாஜக குற்றம்சாட்டியது. அதே நேரத்தில், அவர் இதெற்கெல்லாம் முன்னதாக பாஜக-வின் முக்கிய தலைவர்களால் இந்தியாவின் பாரம்பரிய மட்டும் கோயில்களை ஆவணப்படமாக்க நியமிக்கப்பட்டார் என்று குற்றம் சாட்டுகின்றனர் ஆளும் பிஜேடி தரப்பினர்.
இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைவது தடைசெய்யப்பட்ட 12-ம் நூற்றாண்டு கோயிலில், மாட்டிறைச்சி உண்பதை ஊக்குவிப்பவருக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்ற கேள்வியையும் பாஜக எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பியது. இதற்கு பி.ஜே.டி எம்.பி மனஸ் மங்கராஜ், காமியா ஜானி சம்பந்தப்பட்ட பிரச்னை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். “அவர் கடவுள் ராமரை காண சார் தாம் மற்றும் அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்றுள்ளார், அப்போது நீங்கள் அனைவரும் அவர் குறித்து விரும்பி உங்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டீர்கள்” என்றார்.
இத்துடன் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தர்மேந்திர பிரதான் ஆகியோரால் பகிரப்பட்ட காமியா ஜனியின் புகைப்படங்களின் ஸ்கிரீன் ஷாட்களை இணைத்துள்ளார்.
“இப்போது அவருடன்(காமியா ஜானி) உங்களுக்கு என்ன பிரச்னை என்று கூறுங்கள். ஸ்ரீ மந்திருக்கான(கோயில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது) பெரிய வேலைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியாத நிலையா? இது உண்மையிலேயே அவமானகரமானது. அவரின் பதிவுகளுக்கு முன்னர் ஆதரவளித்தீர்கள், இப்போது மட்டும் உங்களுக்கு சிக்கல் இருக்கிறது” என்றார் மனஸ் மங்கராஜ்.
இதற்கு தர்மேந்திர பிரதான் நெருங்கிய உதவியாளரான லலிதேந்து பித்யாதர் மொஹபத்ரா, என்பவர் தனது X தளத்தில், “மங்கராஜ், நீங்கள் எவ்வளவு உண்மையை மறைக்க முயற்சிக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக அதை அம்பலப்படுத்துகிறீர்கள். மாட்டிறைச்சியை ஊக்குவிப்பவர் மகாபிரசாதத்தை விளம்பரப்படுத்துவதை நியாயப்படுத்துகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
காமியா தனது வீடியோவில், ஸ்ரீ ஜெகன்நாதர் கோயிலின் கலாசாரத்தை எடுத்துரைத்ததுடன், பிஜேடி தலைவரான வி.கே.பாண்டியன், மஹாபிரசாதத்தின் முக்கியத்துவம், தற்போது நடைபெற்று வரும் பாரம்பரிய வழித்தடத் திட்டம் மற்றும் கோவில் மேம்பாட்டுடன் தொடர்புடைய பிற அம்சங்கள் குறித்து பேசியதும் இடம்பெற்றுள்ளது. காமியா ஜானி, ராதா பல்லவ் மட்டத்தில் தான் மஹாபிரசாதத்தை எடுத்தார் என்றும், குற்றம் சாட்டப்பட்டபடி கோயில் வளாகத்திற்குள் அல்ல என்றும் ஆளும் தரப்பு கூறியது.
ஸ்ரீ ஜெகநாதர் கோயில் நிர்வாகமும் (SJTA) கோயில் வளாகத்திற்குள் வீடியோ கேமராக்களை எடுத்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. “யூடியூப் பிரபலம் கோயில் வளாகத்தில் கேமராவை எடுத்துச் சென்றதாக குறிப்பிட்ட அரசியல் கட்சியினர் கூறிய குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது. இதில் உண்மை இல்லை. யாரிடமாவது ஆதாரம் இருந்தால், அவர்கள் அதை முன்வைத்தால், அது விசாரிக்கப்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கோயில் நிர்வாகம் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.
தான் வெளியிட்ட வீடியோ சர்ச்சையான நிலையில், காமியா ஜானி தனது இன்ஸ்டாகிராம் பதிவில், தனது ஜெகன்நாதர் கோயில் வருகை குறித்து பதிவிட்டுள்ளார். அதில், “ஒரு இந்தியராக, இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துச் செல்வதே எனது நோக்கம். நான் இந்தியாவின் அனைத்து ஜோதிர்லிங்கங்கள் மற்றும் சார் தாம்களுக்குச் சென்று வருகிறேன், அது ஒரு பாக்கியம். ஜெகன்நாதர் கோயிலுக்கு நான் சென்றதை கேள்விக்குட்படுத்தும் செய்தித்தாளில் வெளியான விசித்திரமான கட்டுரைகளால் வியந்தேன். ஆனால் உண்மையில் நான் மாட்டிறைச்சி சாப்பிடவில்லை, ஒருபோதும் சாப்பிடவில்லை என்பதை இங்கே தெளிவுபடுத்துகிறேன். குறிப்பிட்ட கடையில் அது பிரபலம் என்பதை அதனை வீடியோவில் காட்டினேன். ஆனால் நான் அதனை உண்ணவில்லை. ஜெய் ஜெகன்நாத்,” என்று பதிவிட்டு இருக்கிறார். எனினும் மாட்டிறச்சியை உங்கள் வீடியோவில் நீங்கள் விளம்பரப்படுத்தி இருக்கிறீர்கள் என்பது அவர் மீது தொடர்ந்து வைக்கப்படும் குற்றச்சாட்டாக உள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com