வேலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே டிசம்பர் 21-ம் தேதி எதிர்க்கட்சி எம்.பி-க்களைக் கண்டித்து, பா.ஜ.க-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கலந்து கொண்ட அந்தக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளரும் வேலூர் முன்னாள் மேயருமான கார்த்தியாயினி, இப்போதைய மேயர் சுஜாதா குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். ‘ஏன், இந்த தனிப்பட்ட தாக்குதல்’ என்ற கேள்வியைக் கார்த்தியாயினிடமே கேட்டோம்.
‘‘வேலூர் மாமன்றக் கூட்டரங்கில், சபைக்கே சம்பந்தமில்லாத நபர்கள்தான் உட்கார்ந்திருக்கிறார்கள். சிறப்பாளராக அழைக்கப்படும் நபர், மேயருக்கான பிரதான இடத்தில் உட்காரக் கூடாது. பக்க வரிசையிலோ, பார்வையாளர்கள் அமரும் இடத்திலோதான் உட்கார வேண்டும். இதுதான் மரபு. இதெல்லாம் மேயர் சுஜாதாவுக்குத் தெரியவில்லை. இரண்டு ஆண்டுகளாக மாநகராட்சி நிர்வாகம் உறக்கத்தில் இருக்கிறது. ஒரு வேலையும் நடைபெறவில்லை.
உள்கட்டமைப்பை மேம்படுத்த இதுவரை ஏதாவது சிறப்புத் தீர்மானம் போட்டிருக்கிறாரா, அல்லது உள்ளாட்சி அமைச்சரைச் சந்தித்து ஏதாவது கோரிக்கை வைத்திருக்கிறாரா?. மில்க் ஷேக் கடை, துணிக்கடை, ஹோட்டல் திறப்பு விழாவுக்களுக்கு மட்டுமே போகிறார். இப்படியானச் செய்திகள்தான் வருகின்றன. அதேபோல, தன் வசதிக்காக அலுவலக அறையை மாற்றி அமைத்திருக்கிறார். காலையில் வந்துவிட்டு மாலையில் செல்வதற்கு மக்கள் வரிப்பணத்தை இப்படி வீணாக்கக் கூடாது’’ என்றார் கார்த்தியாயினி.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த மேயர் சுஜாதா, ‘‘எந்த நேரத்திலும் மக்கள் என்னைச் சந்திக்கிறார்கள். குறைகளையும் உடனே சரிசெய்து கொடுக்கிறேன். இதே கார்த்தியாயினி ‘மேயராக இருக்கும்போது, வேலூருக்கு இதைச் செய்தேன்’ என்று ஏதாவது ஒன்றைச் சொல்ல முடியுமா?. வாரத்துக்கு ஒருநாள் அலுவலகத்துக்கு அவர் வருவதே அதிசயமாகப் பார்க்கப்பட்டது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் உதவாத ஒப்பந்ததாரரிடம் பாதாளச் சாக்கடைப் பணிகளைக் கொடுத்தனர்.
அம்ருத் குடிநீர் திட்டப் பணிகளிலும் குளறுபடி செய்துவிட்டுப் போனார்கள். இவற்றையெல்லாம் விரைந்து சரிசெய்து கொண்டிருக்கிறோம். நாய்த் தொல்லை, சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் தொல்லையைக் கட்டுப்படுத்தத் தீவிர நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறோம். பல சவால்களுக்கிடையே பணிகளை முடிக்கிறேன். பொதுமக்கள் யாரேனும் கடைத் திறப்பு விழாவுக்கு அழைத்தால், எப்படி அவர்களைப் புறக்கணிக்க முடியும்’’ என்றார் கடுகடுத்து.
வேலூர் மாவட்ட தி.மு.க செயலாளரும் அணைக்கட்டு எம்.எல்.ஏ-வுமான ஏ.பி.நந்தகுமார் பேசுகையில், ‘‘அ.தி.மு.க-வில் மேயராகப் பதவி அனுபவித்துவிட்டு பா.ஜ.க-வுக்குத் தாவிய கார்த்தியாயினி முதலில் நாகரிகமாகப் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும். எங்கள் மேயர் சுஜாதா தினமும் பல்வேறு பகுதிகளுக்குப்போய் ஆய்வு செய்கிறார்.
அரசியலுக்காக என்ன வேண்டுமானாலும் பேசக் கூடாது. பொத்தம் பொதுவாகவும் குறைச் சொல்லக் கூடாது. என்ன குறை என்று சரியாகச் சுட்டிக் காட்டலாம். மாநகரத்தைத் தரம் உயர்த்திக்கொண்டிருக்கிறோம். சாலைகள் மட்டும்தான் செப்பனிப்பட வேண்டும். அந்தப் பணிகளும் விரைவுப்படுத்தப்பட்டிருக்கிறது. எங்கள் ஆட்சியில்தான் வேலூர் மாநகரம் பொலிவுறப் போகிறது. கார்த்தியாயினி இனியும் பேச வேண்டுமானால், நாங்களும் விவாதத்துக்குத் தயார். அவர் தயாராக இருக்கிறாரா?’’ என்று காட்டமாகச் சவால்விடுத்தார்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com