ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் பா.ஜ.க வெற்றிபெற்றது. மத்தியப்பிரதேசத்தில் நீண்டகாலம் முதல்வராக இருந்த சிவராஜ்சிங் சௌகானையோ, ராஜஸ்தானில் இரண்டு முறை முதல்வராக இருந்த வசுந்தர ராஜே சிந்தியாவையோ, சத்தீஸ்கரில் முன்னாள் முதல்வர் ரமன் சிங்கையோ முதல்வர்களாக பா.ஜ.க முன்னிறுத்தவில்லை.
எனவே, மூன்று மாநிலங்களிலும் முதல்வராக வரப்போவது யார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. இரண்டு மத்திய அமைச்சர்களும் 11 எம்.பி-க்களும் தேர்தலில் களமிறக்கப்பட்டதால், அவர்களிலிருந்துதான் முதல்வர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் அடிபட்டது.
ஆனால், மூன்று மாநிலங்களிலும் முதல்வர்கள் அறிவிப்பில் பெரும் ஆச்சர்யத்தை பா.ஜ.க அளித்திருக்கிறது. மத்தியப் பிரதேச முதல்வராக அறிவிக்கப்பட்டவர் மோகன் யாதவ். இவர், அங்கு சிவராஜ்சிங் சௌகான் அமைச்சரவையில் உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்தவர். மத்தியப்பிரதேசத்தில் ஓ.பி.சி வகுப்பினர் அதிகம் என்பதால், ஓ.பி.சி பிரிவைச் சேர்ந்த மோகன் யாதவை பா.ஜ.க தேர்வு செய்ததாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.
மோகன் யாதவ் ஓ.பி.சி வகுப்பைச் சேர்ந்தவர் என்றாலும், அவர் சார்ந்த யாதவ் சாதியினரின் மக்கள்தொகை மத்தியப் பிரதேசத்தில் குறைவுதான். ஆனாலும், யாதவ் சமூகத்தைச் சேர்ந்த மோகன் யாதவை முதல்வராகத் தேர்வுசெய்ததன் நோக்கம், யாதவ் சமூகத்தினர் பெரும்பான்மையாக இருக்கும் உத்தரப்பிரதேசத்திலும், பீகாரிலும் வரக்கூடிய தேர்தல்களில் யாதவ வாக்குகளைக் கவருவதற்காகத்தான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
இதனிடையே நில அபகரிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளான மோகன் யாதவை முதல்வராக்கியது சர்ச்சையாகியிருக்கிறது. உஜ்ஜைனியில் சிம்மஸ்தா என்ற விழாவுக்காக வழங்கப்பட்ட 872 ஏக்கர் நிலத்தை அபகரித்திருக்கிறார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு.
ராஜஸ்தானிலும் யாரும் எதிர்பார்க்காத பஜன்லால் ஷர்மா முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். முன்னாள் முதல்வரான வசுந்தர ராஜே சிந்தியா, தேர்தலுக்கு முன்பாகவே கட்சித் தலைமையால் புறக்கணிக்கப்பட்டார் என்ற பேச்சு அடிப்பட்டது. ஆகையால், இந்த முறை அவர் முதல்வராக மாட்டார் என்று அப்போதே சொல்லப்பட்டது. இந்த நிலையில், ராஜஸ்தான் அரசியலில் ஜாட் சமூகமும், ராஜ்புத் சமூகமும் ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், பிராமண சமூகத்தைச் சேர்ந்த பஜன்லால் ஷர்மா முதல்வராக்கப்பட்டிருக்கிறார்.
ராஜஸ்தானில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பிரேம்சந்த் பைர்வாவையும், ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த தியா குமாரியையும் துணை முதல்வர்களாக்கி இருக்கிறது பா.ஜ.க தலைமை. மன்னர் வம்சத்தைச் சேர்ந்தவர் என்றுதான் ஒரு காலத்தில் வசுந்தரராஜே சிந்தியாவை முதல்வராக்கியது பா.ஜ.க. இப்போது அவர் ஓரங்கட்டப்பட்டுவிட்டார்.
அதே நேரத்தில். ஜெய்பூர் ராஜ வம்சத்தைச் சேர்ந்த தியா குமாரியை துணை முதல்வர் ஆக்கியிருக்கிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தியாகுமாரிக்கு தேர்தல் சமயத்திலேயே பா.ஜ.க தலைமை முக்கியத்துவம் கொடுத்தது. பிரதமர் மோடி பங்கேற்ற தேர்தல் பிரசார மேடையில் தியாகுமாரிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. எனவே, அவருக்கு முதல்வராகும் வாய்ப்பு கிடைக்கலாம் என்ற பேச்சுகூட அடிபட்டது. இப்போது துணை முதல்வராகியிருக்கும் அவருக்கு, எதிர்காலத்தில் முதல்வர் வாய்ப்பு கிடைக்கலாம் என்ற பேச்சும் அடிப்படுகிறது.
சத்தீஸ்கரில் முன்னாள் முதல்வர் ரமன் சிங், முன்னாள் மத்திய இணையமைச்சர் ரேணுகா சிங் ஆகியோருக்கு முதல்வராகும் வாய்ப்பு இருக்கிறது என்று பேச்சு அடிபட்டது. ஆனால், முன்னாள் மத்திய அமைச்சர் விஷ்ணு தியோ சாயை முதல்வராகத் தேர்வுசெய்திருக்கிறது பா.ஜ.க தலைமை. பழங்குடி இனத்தைச் சேர்ந்தவரான விஷ்ணு தியோ சாய், மூன்று முறை பா.ஜ.க-வின் மாநிலத் தலைவராக இருந்தவர்.
ஓ.பி.சி பிரிவிலுள்ள சாஹு சமூகத்தைச் சேர்ந்த அருண் சாவ், பிராமண சமூகத்தைச் சேர்ந்த விஜய் சர்மா ஆகியோர் துணை முதல்வர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பாஜக-வில் பிரதமர், முதல்வர் உட்பட முக்கியப் பதவிகளுக்கான நபர்களைத் தேர்வுசெய்வதில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பங்கு முக்கியமானதாக இருக்கும். மூன்று முதல்வர்களின் தேர்விலும் ஆர்.எஸ்.எஸ் முக்கியப் பங்கு வகித்ததாக சில தேசிய அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com