தென்மேற்கு இங்கிலாந்தின் கடற்கரையில் உள்ள செங்குத்தான பாறைகளில் உலகின் மிகப் பழமையான காட்டின் புதைபடிவத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சோமர்செட் பகுதியின் மைன்ஹெட் அருகே, புட்லின் விடுமுறை முகாமுக்கு அருகில் செங்குத்தான பாறைகளில் இந்தப் புதைபடிமம் கண்டெடுக்கப்பட்டது.
கேம்பிரிட்ஜ் மற்றும் கார்டிஃப் பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்கள், இவை பிரிட்டனில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பழமையான மரங்களின் புதைபடிவங்களைவிட பழமையானவை என்றும் பூமியில் அறியப்பட்ட மிகப் பழமையான காட்டின் புதைபடிவம் என்றும் கூறுகின்றனர்.
காலமோபைட்டன் எனப்படும் இந்த மரங்கள் பனை மரங்களை ஒத்திருக்கின்றன.
10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு…
தற்கால மரங்களின் ‘முன்மாதிரி’ என இம்மரங்களை விவரிக்கலாம். இவற்றில் மிகப்பெரிய மரங்கள், இரண்டு முதல் நான்கு மீட்டர் (6 அடி – 12 அடி) வரை உயரம் கொண்டவை.
ஆராய்ச்சியாளர்கள் தாவரங்களின் புதைபடிவங்களையும் அவற்றின் சிதைவுகளையும் மரக்கட்டைகளின் புதைபடிவங்கள் மற்றும் வேர்களின் தடயங்களையும் அடையாளம் கண்டுள்ளனர்.
10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிலப்பரப்புகளை வடிவமைக்கவும் ஆற்றங்கரைகள் மற்றும் கடற்கரைகளை உறுதிப்படுத்தவும் ஆரம்பகால மரங்கள் எவ்வாறு உதவியது என்பதை அவை காட்டுகின்றன.
“நான் முதன்முதலில் இம்மரங்களின் தண்டுகளின் படங்களைப் பார்த்தபோது, ஏற்கனவே 30 ஆண்டுகளாக உலகளவில் இந்த வகை மரங்களைப் பற்றி ஆய்வு செய்திருந்ததால், அவை என்னவென்று எனக்கு உடனடியாகத் தெரிந்தது,” என்று கார்டிஃப் புவி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் பள்ளியை சேர்ந்தவரும் இந்த ஆய்வின் இணை ஆசிரியருமான டாக்டர் கிறிஸ்டோஃபர் பெர்ரி கூறினார்.
டெவோனியன் காலத்திற்கு முந்தையது
“வீட்டுக்கு மிக அருகில் அவற்றைப் பார்ப்பது ஆச்சரியமாக இருந்தது. முதன்முறையாக, வளர்ந்த நிலைகளில் இந்த மரங்களைப் பார்ப்பது, அவை குறித்த ஆழமான நுண்ணறிவை வெளிப்படுத்துவதாக உள்ளது,” என்றார் கிறிஸ்டோஃபர் பெர்ரி.
இந்த ஆய்வில் ஈடுபடாத, நேச்சுரல் ஹிஸ்ட்ரி அருங்காட்சியகத்தின் தாவர புதைபடிவங்கள் நிபுணர் டாக்டர் பால் கென்ரிக், தாவரங்கள் எவ்வாறு ஒன்றாக வளர்ந்தன என்பதற்கான இந்த தடயங்கள் ஆழமான முக்கியத்துவம் வாய்ந்தவை என்று கூறினார்.
நியூயார்க்கில் முன்பு கண்டுபிடிக்கப்பட்ட பழமையான காட்டின் புதைபடிவத்தை விட இது 40 லட்சம் ஆண்டுகள் பழமையானது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இது டெவோன் மற்றும் சோமர்செட் கடற்கரைகளில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இது, 41.9 முதல் 35.8 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டெவோனியன் காலகட்டத்திற்கு முந்தையது.
இந்தக் காலகட்டம், நிலத்தில் உயிர்களின் பெரும் விரிவாக்கத்திற்கான காலமாக கருதப்படுகிறது. புவியியலாளர்கள் அக்கடற்கரையில் கண்டறிந்த கடல் பாறைகள் காரணமாக இக்காலகட்டத்திற்கு டெவோனின் என பெயரிடப்பட்டது. ஏனெனில், அக்காலகட்டத்தின் அடையாளமாக கடல் பாறைகள் இருந்தன.
இந்தப் புதைபடிமங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடம், அக்காலகட்டத்தில் இங்கிலாந்தோடு இணைந்தது அல்ல. மாறாக, ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தின் சில பகுதிகளுடன் இணைக்கப்பட்ட ஒரு பாதி வறண்ட சமவெளி என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள், அங்கும் இத்தகைய மரங்களின் புபுதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
‘வித்தியாசமான காடு’
“இது மிகவும் வித்தியாசமான காடு – இன்று நீங்கள் பார்க்கும் எந்த காடுகளையும் போல இது இல்லை,” என்று கேம்பிரிட்ஜின் புவி அறிவியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் நீல் டேவிஸ் கூறினார்.
“அவற்றுக்கு எந்த அடிமரங்களும் இல்லை. அப்போது புற்கள் கூட தோன்றியிருக்கவில்லை. ஆனால், இந்த அடர்த்தியான மரங்களின் கீழே ஏராளமான கிளைகள் கிடந்தன, இவை நிலப்பரப்பில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின,” என்றார் அவர்.
நேச்சுரல் ஹிஸ்டரி அருங்காட்சியகத்தைச் சேர்ந்த டாக்டர் கென்ரிக் கூறுகையில், இன்று நாம் அறிந்திருக்கும் மரங்களில் இருந்து இம்மரங்கள் மிகவும் வேறுபட்டவை என்றார். இன்று, இம்மரங்களின் மிக நெருங்கிய உயிரியல் உறவினர்கள் டிக்சோனியா அண்டார்டிகா எனப்படும், ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு வகை மர ஃபெர்ன் (பன்னம்), இது பிரிட்டனில் பிரபலமான அலங்காரச் செடியாக உள்ளது. இந்த மர வகை, பழமையான மரங்களுடன் மிகவும் ஒத்த நவீன இணையாக கருதப்படுகிறது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்