
பட மூலாதாரம், PTI
பெங்களூருவில் உள்ள ஆங்கில பலகைகளை கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் சேதப்படுத்தினர்.
உலகளவில் பல முதன்மையான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தாயகம், ‘இந்தியாவின் சிலிகான் வேலி’ என அழைக்கப்படும் பெங்களூருவில் புத்தாண்டு நெருங்கும் வேளையில் நடைபெற்ற போராட்டத்தில், பெயர்ப் பலகைகளில் உள்ளூர் மொழியான கன்னடத்தில் எழுத வேண்டும் என வலியுறுத்தி, ஆங்கில பலகைகளை போராட்டக்காரர்கள் கிழித்து எறிந்த சம்பவங்கள், தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தன.
பெங்களூருவில் உள்ள ஒவ்வொரு காட்சிப் பலகையிலும் 60% கன்னடம் இருக்க வேண்டும் என சட்டம் அமல்படுத்த வேண்டும் என, அரசாங்கத்தை வலியுறுத்தி கர்நாடக ரக்ஷனா வேதிகே (கே.ஆர்.வி) என்ற அமைப்பு போராட்டம் நடத்தியது.
இந்த போராட்டங்களில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களை கண்டனம் தெரிவித்த இந்தியாவின் முக்கிய அரசியல் கட்சிகள், அதேவேளையில், கன்னட மொழியை முதன்மைப்படுத்த கோருவதில் எந்த தீங்கும் இல்லை என, கே.ஆர்.வி அமைப்புக்கு ஆதரவும் தெரிவித்தன.
ஆளும் பாஜகவின் மத்திய அமைச்சர் ஒருவர் உள்ளூர் தொலைக்காட்சி சேனலில் பேசுகையில், “ஆங்கிலத்தைத் தவிர கன்னடத்தில் எழுதுவதால் என்ன தீங்கு நேரப் போகிறது? இது பிரிட்டன் அல்ல” என்று கூறினார் .
300-க்கும் மேற்பட்ட மொழிகளின் தாயகமான இந்தியாவில், மொழியியல் அடையாளங்களை வலியுறுத்துவது பொதுவானது என்பதால் இவை எதுவும் ஆச்சரியமாக இல்லை. உதாரணமாக, தமிழ்நாட்டில் தமிழ் மொழி ஆதரவு போராட்டக்காரர்கள் 1930-களில் இருந்து “தமிழ்நாடு தமிழர்களுக்கே” என்ற முழக்கத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
”முதலில் கன்னடம்”
1947-இல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, ஒரே மொழி பேசும் பகுதிகளை ஒன்றிணைத்து மொழிவாரியாக நாட்டில் பல மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. கர்நாடகம் 1956-இல் உருவாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாகும்.
கடந்த மாதம் ஆங்கில விளம்பரப் பலகைகளைக் கிழித்த கே.ஆர்.வி அமைப்பு இந்தியா மற்றும் பல்வேறு உலக நாடுகளை சேர்ந்தவர்கள் வேலை செய்யும் பெருநகரத்தில் கன்னட மொழியும் அதனை பேசுபவர்களும் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று பல தசாப்தங்களாக கூறி வருகிறது.
பெங்களூருவில், 10 பேரில் நான்கு பேர் இந்நகரத்திற்கு வெளியில் இருந்து வருகிறார்கள் என்று அறிக்கைகள் கூறுகின்றன, இருப்பினும் இந்த மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு கர்நாடகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்கள்.
புலம்பெயர்ந்தோரின் வருகை சில உள்ளூர் மக்கள், தாங்கள் விரைவில் சிறுபான்மையினராக மாறிவிடுவோம் என நினைக்கும் அதே வேளையில், கே.ஆர்.வி-யின் “முதலில் கன்னடம்” எனும் கோரிக்கை பல தசாப்தங்களாக உள்ள ஒரு மொழியியல் தேசியவாதத்திலிருந்து உருவாகிறது. பண்பாட்டு வரலாற்றாசிரியர் ஜானகி நாயர் ஒரு ஆய்வுக் கட்டுரையில் கன்னடம் பேசுபவர்கள் 1920-களில் தனி மாநிலத்தை முதன்முதலில் கோரியதாகக் கூறுகிறார்.
ஆரம்பத்தில், கன்னட தேசியவாதிகள் ஆங்கிலம் உட்பட பிற மொழிகளுக்கு இணங்கியதாக அவர் குறிப்பிடுகிறார். கன்னட தேசியவாதிகளில் ஒருவர், “ஆங்கிலம் நமது கலாசார மற்றும் அரசியல் மொழி, சமஸ்கிருதம் நமது ஆன்மிக மற்றும் செம்மொழி, கன்னடம் எங்கள் தாய்மொழி மற்றும் பேசும் மொழி” என்று கூறியதாக ஜானகி நாயர் எழுதுகிறார்.
மொழிப் போராட்ட வரலாறு

பட மூலாதாரம், K VENKATESH
அறிவிப்புப் பலகைகளில் கன்னடம் முதன்மையாக இருக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
“ஆரம்பத்தில், மொழி மற்றும் இலக்கியத்தின் வளர்ச்சியை முக்கியமாகக் கோரியதால், இந்த மொழியியல் போராட்டம் பலம்பெறவில்லை. பின்னர்தான் இந்த இயக்கத்தில் தீவிரமான போராட்டங்கள் இடம்பிடித்தன,” என்று கன்னட அறிஞர் முசாபர் அசாதி பிபிசியிடம் கூறினார்.
ஆங்கிலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 1980-களில் கடுமையான போராட்டங்கள் தொடங்குவதற்கு முன்னதாக, கன்னட தேசியவாதிகள் மற்ற இந்திய மொழிகளான சமஸ்கிருதம், தமிழ், உருது மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்ததாக அறிஞர்கள் கூறுகின்றனர்.
பள்ளிகளில் சமஸ்கிருதத்திற்குப் பதிலாக கன்னடம் மட்டுமே முதல் மொழியாக இருக்க வேண்டும் எனக்கூறி, 1982-ல் நடந்த கோகாக் போராட்டம் தீவிரமான போராட்டங்களில் முதன்மையானது. இந்த போராட்டத்திற்கு ராஜ்குமார் தலைமையில், கன்னட திரையுலகினர் ஆதரவு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, 1991-ல் தமிழ்நாட்டிற்கு எதிராக பெங்களூரு மற்றும் மைசூரு நகரங்களில் போராட்டங்கள் நடந்தன. இரு மாநிலங்கள் இடையே காவிரி நதிநீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக இரு மாநிலங்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. தமிழ் பேசுபவர்களோ அல்லது கன்னட மொழி பேசுபவர்களோ எதிர்தரப்புக்கு அதிகளவு நீர் பங்கீடு செல்வதை விரும்பவில்லை.

பட மூலாதாரம், Getty Images
இந்தி மொழிக்கு எதிர்ப்பு
பின்னர், 1996-ஆம் ஆண்டில், அரசு ஊடகமான தூர்தர்ஷன் உருது மொழியில் நிகழ்ச்சிகளை ஆரம்பித்தபோது பெரும் எதிர்ப்புகள் வெடித்தன. பத்தாண்டுகளுக்குப் பிறகு, 2017-இல், கே.ஆர்.வி தலைமையிலான கன்னட தேசியவாதிகள் இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பெங்களூரு மெட்ரோ வழித்தடத்தில் உள்ள பலகைகள் மற்றும் பொது அறிவிப்புகளில் இந்தி மொழியை அகற்ற வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். “நம்ம மெட்ரோ, ஹிந்தி பேடா”, அதாவது ‘எங்கள் மெட்ரோவில் இந்தி இல்லை’ என்பது சமூக வலைதளங்களில் பல நாட்களாக ட்ரெண்டானது.
1990-களில் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி தொடங்கிய நிலையில், ஆங்கிலம் பேசும் பணியாளர்களுக்கான தேவை அதிகரித்த பிறகுதான் கன்னட தேசியவாதிகள் ஆங்கிலத்திற்கு எதிராக போராடத் தொடங்கினர்.
ஒதுக்கீட்டுக்கு வலியுறுத்தல்
பிற மாநிலங்களைச் சேர்ந்த ஆங்கிலம் பேசுபவர்கள் தங்கள் வேலையைப் பறிக்கிறார்கள் என்ற பொதுவான கவலை பல கன்னடர்களிடையே இருந்தது. மேலும் கே.ஆர்.வி அமைப்பு 1980-களின் சரோஜினி மகிஷி கமிட்டியின் பரிந்துரையின்படி “மண்ணின் மைந்தர்கள்” ஒதுக்கீட்டை அமல்படுத்த அல்லது உறுதியான நடவடிக்கையை கோரத் தொடங்கியது.
இந்தியாவின் கூட்டாட்சியானது பிராந்திய சுயாட்சியில் வேரூன்றியிருப்பதாலும், ஆங்கிலப் பலகைகள் அதற்குத் தடையாக இருப்பதாலும், பிற மொழிகளை விட பிராந்திய மொழிகளை ஆதரிக்கிறோம் என்று கே.ஆர்.வி அமைப்பினர் கூறுகின்றனர். வேலைக்கு ஆங்கிலம் முக்கியமாக இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாங்கள் எதிரானவர்கள் அல்ல என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
“கன்னடத்திற்கும் அதன் மக்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மட்டுமே நாங்கள் நினைக்கிறோம்,” என்று ஐ.டி. துறையில் பணிபுரியும் கே.ஆர்.வி-யின் நிறுவன செயலாளர் அருண் ஜவ்கல் கூறுகிறார்.
‘இந்தியாவின் சிலிகான் வேலி’ என்ன ஆகும்?

பட மூலாதாரம், PTI
டிசம்பர் 2023-ல் நடைபெற்ற போராட்டத்தில் ஆங்கில பலகையை கிழிக்கும் போராட்டக்காரர்.
கன்னட தேசியவாதத்தின் பெரும்பாலான வெளிப்பாடுகள், கன்னட மொழி பேசுபவர்களில் ஒரு பிரிவினர் கே.ஆர்.வி-யின் கோரிக்கைகளை தீவிரமாக ஆதரிப்பதால் மாநிலத்தில் எதிர்க்கப்படாமல் போய்விட்டது. பெங்களூரு உட்பட கர்நாடகாவில் தங்கள் அமைப்புக்கு பெரும் ஆதரவு இருப்பதாக அருண் ஜவ்கல் கூறுகிறார்.
ஆனால், சமீபத்திய எதிர்ப்புகள் மற்றும் ஆங்கிலத்தில் இருந்து கன்னடத்திற்கு பலகைகள் மாற்றப்பட்டிருப்பது பெங்களூருவின் உலகளாவிய பிம்பத்தை பாதிக்குமா?.
பாதிக்காது என, மாநிலத்தில் வணிக நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கர்நாடக வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு (FKCCI) கூறுகிறது.
“பெங்களூருவில் விடாமுயற்சியுடன் கூடிய பணியாளர்கள்தான் இந்த பிம்பத்தை உருவாக்கியுள்ளனர். மேலும் பெயர்ப்பலகைகள் மாறினாலும் அவர்கள் தொடர்ந்து சிறப்பாக வேலை செய்வார்கள்” என்று FKCCI தலைவர் ரமேஷ் சந்திரா கூறுகிறார். மேலும், “வணிக நிறுவனங்கள் சட்டத்தைப் பின்பற்றி கன்னடத்தை முதன்மையாகப் பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம்” என தெரிவித்தார்.
அடையாளங்களை மாற்றுவதற்கான காலக்கெடு பிப்ரவரி 28. கே.ஆர்.வி-ஐப் பொறுத்தவரை, அதன் தலைவர்கள் கூறுகையில், “ஐரோப்பிய நாடுகள் தங்கள் உள்ளூர் மொழிகளில் விளம்பரப் பலகைகளை வைத்திருக்க முடியும் என்றால், 6.11 கோடி மக்கள்தொகை கொண்ட, பெரும்பான்மையாக கன்னடம் பேசுபவர்கள் உள்ள கர்நாடகாவிலும் அதனை செய்ய முடியும்.” என்கின்றனர்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்