“வெயிலில் இருப்பது எனக்கு எப்போதும் பிடித்தமான ஒன்று. வைட்டமின் டி எனக்கு மிகவும் பிடிக்கும். ஆண்டு முழுவதும் மஞ்சள் கலந்த பழுப்பு நிறமான இடங்களில் இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே தனிமையான சூழ்நிலையில் விடுமுறை நாட்களைக் கழிக்கக்கூடிய எல்லா இடங்களுக்கும் செல்வதை நான் மிகவும் ரசிக்கிறேன்.”
பிரிட்டனில் சமூக ஊடகங்களில் செல்வாக்கு மிக்க ஜாரா ரோஸ், பயணம் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளதோடு, தனது முஸ்லீம் நம்பிக்கைக்கு உண்மையாக இருக்க விரும்புவதாகவும் கூறுகிறார்.
அவர் இதுவரை 30க்கும் மேற்பட்ட ‘ஹலால் விடுமுறை’ பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
அரபு மொழியில் ஹலால் என்றால் இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியது என்று பொருள். ஹலால் விடுமுறை என்பது முஸ்லிம்கள் தங்கள் மத நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளில் எதையும் விட்டுத் தராமல் பார்வையிடக்கூடிய இடங்களைக் குறிக்கிறது.
தனியுரிமைக்கு எப்போதும் கூடுதல் முன்னுரிமை
உலகளவில் கிறிஸ்தவத்திற்கு அடுத்தபடியாக இஸ்லாம் மதம் இரண்டாம் இடத்தில் உள்ளது. முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் நாடுகளில் நடுத்தர வர்க்கம் வளர்ந்து வருகிறது.
அதேநேரம், மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில், இரண்டாவது மற்றும் மூன்றாம் தலைமுறை முஸ்லிம்கள் விடுமுறை நாட்களில் செலவு செய்வதற்கு என்றே தங்கள் பெற்றோரைவிட அதிக பணம் வைத்துள்ளனர்.
ஹலால் விடுமுறை என்பது புதிதாக உலகின் பல்வேறு நாடுகளில் வளர்ந்து வரும் சந்தை.
“என்னைப் பொறுத்தவரை ஹலால் விடுமுறைக்கும் சாதாரண விடுமுறைக்கும் இடையில் உள்ள மிகப் பெரிய வித்தியாசம் தனியுரிமை தான்,” என்கிறார் ஜாஹ்ரா ரோஸ்.
இக்காலத்தில் ஹலால் உணவும் எல்லா இடங்களிலும் எளிமையாகக் கிடைக்கிறது எனவும் அவர் கூறுகிறார்.
இதேபோல் துருக்கியில் ஹெஜார் சுசொக்லு அடிகுசாய் என்ற 36 வயது பெண் மூன்று குழந்தைகளுக்குத் தாயாக உள்ளார். அவர் தனது குழந்தைகளுடன் இஸ்தான்புல் நகரில் வசிக்கிறார்.
துருக்கியில் ஹலால் விடுமுறைக்கு ஓரிடத்தைக் கண்டுபிடிப்பதில் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் அவருடைய குடும்பம் முஸ்லிம்கள் பெரும் எண்ணிக்கையில் இல்லாத, இஸ்லாம் அல்லாத நாடுகளுக்குச் செல்லும்போதெல்லாம் அக்குடும்பத்தினர் ஒவ்வொரு விஷயத்துக்கும் நிறைய திட்டமிட வேண்டியிருக்கிறது. அதே போல் ஒவ்வொரு தேவைக்கும் அதிக அளவில் பல இடங்களில் தேடி அலைய வேண்டிய நிலை உள்ளது.
“சமீபத்தில் நாங்கள் மாசிடோனியா மற்றும் கொசோவோவுக்கு சென்றோம். நாங்கள் எங்கள் ஹோட்டலில் வழக்கம் போல் காலை உணவை சாப்பிட்டோம். மதிய உணவிற்கு நாங்கள் மது இல்லாமல் உணவு பரிமாறப்படும் பாரம்பரிய இடங்களைத் தேடிச் சென்றோம்.”
அடிகுசாய் ஒரு நாளைக்கு ஐந்து முறை பிரார்த்தனை செய்கிறார் என்பதுடன் இஸ்லாமிய விழுமியங்களைப் பின்பற்றுவதில் அதிகளவில் ஆர்வம் காட்டுகிறார்.
“ஹலால் ஹோட்டல்களில், அவர்கள் தொழுகை செய்வதற்கான பாய்களை வழங்குகிறார்கள். ஆனால் நாங்கள் சாதாரண ஹோட்டல்களில் தங்கப் போகிறோம் என்றால், நான் என்னுடன் ஒரு பிரார்த்தனை பாயை எடுத்துச் செல்லவேண்டிய தேவை இருக்கிறது,” என்று அவர் கூறுகிறார்.
“ஹோட்டல்களில் குறைந்த உடை அணிந்தவர்களை நான் பார்க்க விரும்பவில்லை. எங்கள் நம்பிக்கை மற்றும் கலாசாரத்தைப் பின்பற்றுபவர்களுடன் எங்கள் குழந்தைகள் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மக்கள் நிர்வாணமாக சூரிய ஒளியில் இருக்கும் கடற்கரைகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல விரும்பவில்லை.”
ஹெட்ஜ் என்ற நபர் தொழில்முனைவோர் மற்றும் பெண்களுக்கு ஆன்லைனில் பயிற்சி அளிக்கிறார். ஹலால் விடுமுறையின் முழுத் திறனை சுற்றுலாத்துறை இன்னும் சரியாகப் பயன்படுத்த முடியவில்லை என்று அவர் நம்புகிறார்.
சந்தையில் வளர்ந்து வரும் ஹலால் விடுமுறை
உலகளாவிய முஸ்லீம்களின் பயணங்கள் தொடர்பான புள்ளிவிவரங்களின்படி 2022ஆம் ஆண்டில், இல் ஹலால் பயண வணிகம் 220 பில்லியன் டாலர் மதிப்புடையதாக மாறியுள்ளது.
சில நிறுவனங்கள் ஹலால் சுற்றுலாவை மையப்படுத்தி தொழில் செய்கின்றன. மற்றவை அதை ஒரு விருப்பமாகச் சேர்க்கின்றன.
மாலத்தீவு, அந்நாட்டின் பிரத்யேகமான, வசதியான ஹோட்டல்களுக்காக மேற்கத்திய நாடுகளில் அறியப்படுகிறது. இந்நிலையில், இப்போது உலகம் முழுவதும் இருந்து மாலத்தீவுக்கு வரும் ஹலால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
“மாலத்தீவு ஒரு முஸ்லீம் நாடு. எங்களிடம் ஏற்கெனவே முஸ்லீம்கள் விரும்பும் சுற்றுலா கலாசாரம் உள்ளது. இந்தத் துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது,” என்று மாலத்தீவு சுற்றுலா அமைச்சர் டாக்டர் அப்துல்லா மௌசூம் கூறுகிறார்.
ஒவ்வொரு ஹோட்டலிலும் கால் பங்கு இடங்கள் சமூகம் சார்ந்த அல்லது உள்ளூர், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என டாக்டர் மௌசூம் கூறுகிறார்.
“பல ரிசார்ட்டுகளில் அறை ஒதுக்கீடு, அறை வடிவமைப்பு மற்றும் உணவு ஆகியவை அடிப்படையில் முஸ்லீம்களுக்கு ஏற்ற சூழ்நிலையைக் கொண்டுள்ளன,” என்று அவர் கூறுகிறார்.
மாலத்தீவு நாட்டின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறையின் பங்களிப்பு நான்கில் ஒரு பங்கிற்கும் அதிகமாக உள்ளது.
ஹலால் விடுமுறைக்கான மாற்றங்கள்
பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் பயணம் செய்வதில் ஆதிக்கம் செலுத்துவதாக 2023ஆம் ஆண்டின் உலகளாவிய முஸ்லிம் பயணக் குறியீடு கூறுகிறது. இந்தோனீசியா, மலேசியா ஆகிய நாடுகள் இதில் மிக அதிக அளவு பயணங்களை உள்ளடக்கிய நாடுகளாக உள்ளன.
முஸ்லிம் அல்லாத நாடுகளைப் பொறுத்தளவில் சிங்கப்பூர் (11வது இடம்), பிரிட்டன் (20வது இடம்) ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளன
லண்டனில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியான லேண்ட்மார்க் ஹோட்டல் 1899 முதல் செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் இப்போது ஹலால் இறைச்சி வழங்கப்படுகிறது. ஹோட்டல் ஊழியர்களுக்கு மத்திய கிழக்கு நாடுகளின் மதம் மற்றும் கலாசார புரிதல் பற்றிய பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
மத்திய கிழக்கு பகுதியினருக்கான பிரிவின் இயக்குநர் மக்டி ருஸ்டம் கூறுகையில், “எங்களிடம் மதுபானங்கள் மற்றும் மது அல்லாத பானங்கள் உள்ளன. இங்கு நீங்கள் மிகவும் பிரபலமான மது அல்லாத பானங்களுடன் கூடிய உயர்தர உணவுகளைச் சாப்பிடலாம்,” என்றார்.
ஹோட்டலுக்குள் நுழைய இரண்டு கதவுகள் உள்ளன. வடக்கு புறத்தில் ஒரு வாயில் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் குடும்பங்கள், குறிப்பாக பெண்கள், அவர்களை மற்றவர்கள் பார்ப்பதை விரும்புவதில்லை.
எனவே அவர்கள் வடக்கு வாயில் வழியாக ஹோட்டலுக்குள் நுழைகிறார்கள். அவர்களை யாரும் பார்க்காதபடி நேராக உணவருந்தும் அறைக்கு அழைத்துச் செல்ல தனி லிஃப்ட் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஹோட்டலில் திருமணங்களின்போது பயன்படுத்தப்படும் ஒரு பெரிய பால்ரூம் உள்ளது, இங்கும் முஸ்லிம்களுக்கு ஏற்றாற்போல் ஆண்களும், பெண்களும் தனித்தனியாகத் தங்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால், பிரிட்டனை சேர்ந்த ஜாஹ்ரா ரோஸ் தினமும் இதுபோன்ற தனிப்பட்ட ஏற்பாடுகளுக்கு கூடுதலாகப் பணம் செலவழிக்க வேண்டியிருக்கிறது.
இதுகுறித்துப் பேசிய அவர், “வழக்கமாக விடுமுறை நாட்களில் செல்லும் இடங்களைவிட தனி வசதிகளுடன் கூடிய இதுபோன்ற இடங்களைப் பயன்படுத்த அதிக செலவாகும் என்பது எனக்குத் தெரியும்.
பொதுவான (ஆண் மற்றும் பெண்களுக்கான) தங்குமிடங்கள் அல்லது பால்கனி போன்ற வசதிகள் இல்லாத ஓய்வு விடுதிகளில் முன்பதிவு செய்வது மிகவும் எளிதானது.
ஆனால் நமக்கு தனிப்பட்ட வசதிகள் வேண்டுமென்றால் உண்மையில் நாம் கூடுதலாகச் செலவு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது,” என்று தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்