காஸாவில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியுள்ள நிலையில், இந்தப் போர் நீண்ட நெடியதாகவும் கடினமானதாகவும் இருக்கும் என இஸ்ரேல் பிரதமர் பென்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
தரைவழி தாக்குதலை காஸாவின் வடக்குப் பகுதியில் இஸ்ரேல் நடத்தப் போவதாக கடந்த பத்து நாட்களுக்கு முன்பே இஸ்ரேல் அறிவித்திருந்தது. தரைப்படைகள் இரவோடு இரவாக காஸாவிற்குள் நுழைந்து ஹமாசுக்கு எதிராக தாக்குதலை தீவிரப்படுத்தும் என்று இஸ்ரேலின் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகரி வெள்ளிக்கிழமை இரவு பத்திரிகையாளர் சந்திப்பில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.
இதனால் காஸா நகரம் உள்ளிட்ட வடக்குப் பகுதியில் இருக்கும் மக்கள் தெற்கு நோக்கி நகர இஸ்ரேல் எச்சரித்தது. இந்நிலையில் காஸாவின் வடக்குப் பகுதியில் தற்போது தீவிரமான தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியுள்ளது.
இஸ்ரேலின் மூன்று கட்ட தாக்குதல்கள் என்ன?
இது காஸாவுக்கு எதிரான போரின் இரண்டாவது கட்டம் என்றும் இது கடினமானதாக இருக்கும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
கடந்த வாரம் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலண்ட், காஸாவுக்கு எதிரான போர் மூன்று கட்டங்களாக நடைபெறும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த மூன்று கட்டங்கள்,
- முதல் கட்டத்தில் ஹமாஸின் கட்டமைப்புகள் தகர்க்கப்படும்
- இரண்டாம் கட்டத்தில் ஹமாஸ் ஒழிக்கப்படும்
- மூன்றாவது கட்டத்தில் காஸா மக்களின் உயிருக்கு இஸ்ரேல் பொறுப்பல்ல என்ற நிலை உருவாகி இஸ்ரேல் குடிமக்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
‘தீய சக்திகளின் கோட்டைக்குள் இஸ்ரேல் நுழைந்துள்ளது’
தொலைக்காட்சி மூலம் உரை நிகழ்த்திய பிரதமர் நெதன்யாகு, காஸா பகுதி முழுவதும் இஸ்ரேலின் படைத் தளபதிகள் நிறுத்தப்பட்டிருப்பதை உறுதிபடுத்தினார். தரைவழித் தாக்குதல் தொடங்கியது முதலே காஸாவில் இதுவரை இல்லாத அளவிலான தொடர் குண்டு வீச்சுகள் நிகழ்ந்து வருகின்றன.
இஸ்ரேலின் தரைவழிப் படைகள், காஸாவில் நுழைந்ததை ‘தீய சக்தியின் கோட்டைக்குள்’ படைகள் நுழைந்துள்ளன என்று நெதன்யாகு குறிப்பிட்டார்.
ஹமாஸ் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து நெதன்யாகு ஆறுதல் கூறினார். அப்போது அந்தக் குடும்பத்தினர், தரைவழித் தாக்குதல் தொடங்கி, தீவிரப்படுத்தப்பட்டிருப்பதால் தங்கள் உறவினர்களுக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தை அவரிடம் வெளிப்படுத்தினர்.
அவர்களிடம் பேசிய நெதன்யாகு, பணயக் கைதிகளை பத்திரமாக மீட்டுக் கொண்டு வருவது இந்தப் போரில் ராணுவத்தின் நோக்கங்களில் முக்கியமான ஒன்று என்றார்.
அழிவுக் காடாக மாறிய காஸா நகரம்
காஸா நகரில் இஸ்ரேலின் எச்சரிக்கை அறிவிப்புகளைக் கொண்ட பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் அந்தப் பகுதி தற்போது ‘போர்க்களமாக’ மாறியுள்ளது என்றும், அந்தப் பகுதியில் மக்கள் யாரேனும் இருந்தால் அவர்கள் தெற்குப் பகுதிக்குச் செல்ல வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
வான்வழித் தாக்குதல் மூலம் பெரும்பாலும் தீவிரவாதிகளின் கட்டமைப்பும் பூமிக்கு அடியில் உள்ள இலக்குகளையும்தான் குறி வைத்து தகர்க்கிறோம் என இஸ்ரேல் கூறியிருந்தது. தற்போது தரைப்படையினர் வெள்ளிக்கிழமை மாலை முதல் தங்களது தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளனர். ராணுவத்தின் இலக்கை அடைய அனைத்து வகைகளிலும் தீவிரமாகச் செயல்படுகிறோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
தரைவழித் தாக்குதல் தொடங்கியது முதல் காஸாவில் உள்ள மக்கள் வெளியுலகத் தொடர்பு இல்லாமல் இருக்கின்றனர். அந்தப் பகுதியில் தொலைபேசி இணைப்புகள் மற்றும் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இந்த தரைவழி தாக்குதலை துருக்கியின் அதிபர் ரெகப் தய்யிப் எர்டோகன் கண்டித்துள்ளார். இஸ்ரேல் போர் குற்றங்களை நிகழ்த்துவதாக அவர் கூறியிருந்தார்.
இதனால் கோபமடைந்த இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு , இஸ்ரேலில் உள்ள துருக்கி தூதர்களையும் அதிகாரிகளையும் வெளியே அனுப்பினார். இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளை, “தார்மீக ராணுவம்” என்று அவர் குறிப்பிட்டார்.
இஸ்ரேலின் தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது: ஐ.நா. பொதுச் செயலாளர்
அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் சுமார் 1,500 இறந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் காஸா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதலில் காஸாவில் இதுவரை 8000 பேர் இறந்துள்ளதாக காஸா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தப் போரில் மனிதநேய காரணிகளைக் கருத்தில் கொண்டு போர் நிறுத்தம் கொண்டு வரவேண்டும் என உலக சமூகம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், போரின் அடுத்த கட்டத்துக்கு இஸ்ரேல் சென்றிருப்பது அதிர்ச்சியாக இருப்பதாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளார் அண்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
பொதுவாக போர் போன்ற சூழல்களில் வெளிப்படையாக கருத்து தெரிவிக்காத சர்வதேச செஞ்சிலுவை சங்கம், இந்தப் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் காஸாவில் பொறுத்துக் கொள்ள முடியாத அளவிலான துயரம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை இரவு வெளியிட்ட தனது அறிக்கையில், “இருபது லட்சம் மக்கள் குண்டு வீச்சுகள் மற்றும் ராணுவ முற்றுகைக்கு இடையில், வெளியே செல்ல முடியாமல் காஸாவில் சிக்கியுள்ளனர். இந்தப் பேரழிவை உலகம் பொறுத்துக் கொள்ளக்கூடாது,” என்று தெரிவித்தது.
ஞாயிற்றுகிழமை X சமுக ஊடக தளத்தில் பதிவிட்ட இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள், காஸாவுக்கான மனிதநேய உதவிகள் அமெரிக்கா மற்றும் எகிப்திடம் இருந்து விரிவுப்படுத்தப்படும் எனத் தெரிவித்தது.
ஆனால் இந்த உதவிகள் எப்போது எங்கு எப்படி வழங்கப்படும் என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. மேலும் இஸ்ரேலுக்கு மக்கள் வாழும் பகுதி எது, ஹமாஸின் பகுதி எது எனத் தெரியும் என்பதால், மக்கள் வாழும் பகுதியில் மறைந்துகொண்டு, ஹமாஸ் மனித கேடயங்களைப் பயன்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியது.
காஸா மீதான தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாலத்தீனத்துக்கு ஆதரவான போராட்டங்கள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. இஸ்தான்புல்லில் நடைபெற்ற பாலத்தீனத்துக்கு ஆதரவான மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் துருக்கியின் அதிபர் ரெகப் தய்யிப் எர்டோகன் பங்கேற்றார். அப்போது அவர், இஸ்ரேலை ஆக்கிரமிப்பாளர் என்றும் இந்த வன்முறைக்கு மேற்கு நாடுகள் பொறுப்பு என்றும் கூறினார்.
பிரிட்டன் தலைநகரான லண்டனில் நீண்ட பாலத்தீன கொடி ஒன்றை ஏந்தி ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். மலேசிய தலைநகரான குவாலா லம்பூரில் அமெரிக்க தூதரகம் வெளியே நூற்றுக்கணக்கானோர் பாலத்தீன கொடிகளுடன் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். அதே போன்று மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரிலும் பாலத்தீனத்துக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலத்தீன கைதிகளை உடனே விடுவிக்குமாறு மேற்கு கரையில் மக்கள் போராட்டம் நடத்தினர்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்