ரஷ்ய அதிபர் தேர்தல் மார்ச் 15ஆம் தேதி துவங்கியது. இது ஞாயிறு, மார்ச் 17ஆம் தேதி வரை நடக்கும். இதில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மீண்டும் போட்டியிடுகிறார். இந்தத் தேர்தலில் வென்றால் அவர் ஐந்தாவது முறை ரஷ்ய அதிபராவார்.
யுக்ரேனில் ரஷ்யா இரண்டு ஆண்டுகளாக நடத்தி வரும் போருக்கு மத்தியில் நடக்கவிருக்கும் இந்தத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
ஆனால், மாஸ்கோவில் இருந்து 100கி.மீ. தூரத்தில் இருக்கும் பொரோவ்ஸ்க் நகரில், வரவிருக்கும் தேர்தலுக்கான அறிகுறியே இல்லை. வெகுசில பதாகைகளும் போர்டுகளுமே இருக்கின்றன. ஆனால் யாரும் துண்டுச் சீட்டுகளை விநியொகம் செய்வதைப் பார்க்க முடியவில்லை.
இது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. ஏனெனில் வரவிருக்கும் தேர்தலில் விளாதிமிர் புதின் ஐந்தாவது முறை அதிபராவார். ரஷ்ய அதிபர் தேர்தல் என்பது ஒரு முன்முடிவு செய்யப்பட்ட நாடகம் மட்டுமே.
‘மக்கள் பயத்தில் இருக்கிறார்கள்’
ஆனால், பொரோவ்ஸ்க் நகரத்தில் எங்கு பார்த்தாலும் தென்படுவது சுவர் ஓவியங்கள். இவை பெரும்பாலும் சர்ச்சையில்லாத வகையிலேயே அமைந்திருக்கின்றன. ஆனால் இவற்றை வரையும் 86 வயதான ஓவியர் விளாதிமிர் ஓவ்ச்சினிக்கோவ், தற்கால ரஷ்யாவை பற்றி ஓவியங்கள் வரையும்போது, அவற்றின் தன்மை மாறுகிறது.
உதாரணமாக, அவரது ஒரு ஓவியத்தில், இரண்டு பெரும் அரவை இயந்திரங்களில் மனிதர்கள் அரைக்கப்பட்டு அவற்றிலிருந்து ரத்தம் பெருக்கெடுக்கிறது. ஒரு இயந்திரம் ‘1937’ என்று எழுதப்பட்டிருக்கிறது,
இது சோவியத் யூனியனின் சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலினின் கொடுங்கோல் ஆட்சியில் படுகொலைகள் நடந்த ஆண்டைக் குறிக்கும். மற்றொரு இயந்திரம் ‘சிறப்பு ராணுவச் செயல்பாடு’ (யுக்ரேன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர்) என்று எழுதப்பட்டிருக்கிறது.
ரஷ்யா கடந்த காலத்திலிருந்து ஒரு பாடமும் கற்றுக்கொள்ளவில்லை என்று ஓவ்ச்சினிக்கோவ் கூறுகிறார். இதேபோன்ற ஒரு ஓவியத்தை சுவர்களில் வரைந்ததற்கு அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சமீபத்தில் இறந்துபோன எதிர்கட்சித் தலைவரை அலெக்செய் நவால்னியின் படத்தை, அரசியல் காரணங்களுக்காகக் கொல்லப்பட்டவர்களின் நினைவுத் தூணில் அவர் வரைந்தபோது, அந்த நாளே யாரோ அதை அழித்தனர்.
“அடக்குமுறை, வேலை பறிக்கப்படுவது, விமர்சனம், ஆகியவற்றுக்குப் பயந்து மக்கள் அமைதியாக இருக்கின்றனர்,” என்கிறார் ஓவ்ச்சினிக்கோவ்.
ரஷ்யாவின் ‘அங்கீகரிக்கப்பட்ட’ பிம்பம்
ஆனால் நீங்கள் ரஷ்ய தொலைக்காட்சிகளப் பார்த்தால், அந்நாட்டைப் பற்றி வேறு ஒரு பிம்பம் தென்படும்.
அந்தப் பிம்பம்: ரஷ்யா ஒரு மகத்தான கடந்த காலத்தைக் கொண்டிருக்கிறது. அதேபோல மகத்தான எதிர்காலத்தையும் கொண்டுள்ளது. இந்த ரஷ்யா தனது தலைவர் விளாதிமிர் புதினை நேசிக்கிறது. மக்கள் அவர்மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர்.
ரஷ்ய அரசு அந்நாட்டின் தொலைக்காட்சியை முழுவதுமாகக் கட்டுப்படுத்துகிறது.
தேர்தல்களையும்.
ஆனால், ரஷ்ய அரசு, தங்களது நாட்டில்தான் ‘உலகின் மிகச் சிறந்த ஜனநாயகம்’ இருப்பதாகக் கூறுகிறது.
தேர்தலில் புதினை எதிர்க்க முக்கியமான ஆட்கள் யாருமில்லை. அவரை எதிர்த்தவர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுவிடனர், அல்லது சிறையில் இருக்கின்றனர், அல்லது நவால்னியை போல இறந்துவிட்டனர்.
புதினை எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் யார்?
இந்தத் தேர்தலில், புதினை எதிர்த்து அதிகாரப்பூர்வமாக முன்று பேர் போட்டியிடுகின்றனர். அவர்களில் ஒருவர் நிகோலாய் கரிடோனோவ். இவர் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளார்.
ஆனால், ஆச்சரியமாக, அவரிடம் பேசியபோது, அவர் புதினை ஆதரித்துப் பேசினார். “புதின் 1990களில் இருந்த பல சிக்கல்களைத் தீர்க்க முயல்கிறார். அவர் ரஷ்யாவை அனைத்து தளங்களிலும் வெற்றியடையச் செய்ய முயல்கிறார்,” என்றார்.
கரிடோனோவ் முழுமனதோடு இந்தத் தேர்தலில் போட்டியிடுவது போலத் தெரியவில்லை.
ஆனால் தேர்தலில் போட்டியிடுதில் இருந்து தடைசெய்யப்பட ஒரு அரசியல்வாதி, யுத்தத்தை எதிர்க்கும் போரிஸ் நடேஷ்டின்.
“ரஷ்ய அதிபர் தேர்தல் நேர்மையாக, சுதந்திரமாக நடைபெறுகின்றன என்று சொல்லவே முடியாது,” என்கிறார் அவர். தான் மிகவும் பிரபலமடைந்ததால் தான் தேர்தலில் போட்டியிடுவது தடை செய்யப்பட்டதாகக் கூறுகிறார்.
சாதாரண மக்கள் என்ன சொல்கிறார்கள்?
பொரோவ்ஸ்க் நகரின் தெருக்களில் மக்களைச் சந்தித்துக் கேட்டால் ஒரு கலவையான மனநிலையே தென்படுகிறது. யுக்ரேன் போரைப் பற்றி, அதிபர் தேர்தலைப் பற்றி, விளாதிமிர் புதினைப் பறி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அவர்களிடம் கேட்டேன்.
ஸ்வெட்லானா எனும் இளம்பெண் “என்னதான் வாக்களித்தாலும் எதுவும் மாறப் போவதில்லை. அனைத்தும் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது. இந்தத் தேர்தலில் வாக்களிப்பதால் ஒரு பயனும் இல்லை,” என்கிறார்.
ஆனால், பல மூத்த ரஷ்ய மக்கள் தாங்கள் வாக்களிக்கப் போவதாகத் தெரிவிக்கின்றனர். இவர்களுடன் பேசினால், இவர்கள் ரஷ்ய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிம்பங்களை ஆதரிப்பவர்கள் என்பது தெளிவாகிறது.
அவர்களில், ல்யுட்மில்லா எனும் பெண், “விளாதிமிர் புதின் தேர்தலில் ஜெயிப்பார் என்று நம்புகிறேன். அவர் ஜெயித்தால், போர் ஒரு முடிவுக்கு வரும். பல இளைஞர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். அமைதி திரும்பினால், ரஷ்யாவை தோற்கடிக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்துவிடும்,” என்றார்.
நிகோலாய் என்பவரும் புதினுக்கு வாக்களிக்கப் போவதாகக் கூறுகிறார். கடந்த 25 வருடங்களாக அவர் பதவியில் இருப்பது அவருக்குச் சலிப்பாகத் தோன்றவில்லை. “அதனால் என்ன? ரஷ்ய வரலாற்றில் நீண்ட காலம் ஆட்சி செய்த ஜார் மன்னர்கள் இருந்திருக்கின்றனர். தலைவர்கள் மாறலாம், ஆனால் அதனால் எங்கள் வாழ்க்கை பெரிதாக மாறிவிடாது,” என்கிறார் அவர்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்