நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துகொண்டதாகவும், தானும் சீமானும் கணவன்-மனைவியாக வாழ்ந்ததாகவும், தனது அனுமதி இல்லாமலேயே சீமான் தனக்கு 7 முறை கருச்சிதைவு செய்ததாகவும், நடிகை விஜயலட்சுமி சமீபத்தில் சென்னை காவல்துறையினரிடம் புகார் கொடுத்திருந்தார்.
தற்போது இந்த வழக்கு குறித்த விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமானுக்கு சென்னை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்துள்ள சென்னையைச் சேர்ந்த நடிகை விஜயலட்சுமி, ‘‘சீமான் என்னை திருமணம் செய்து ஏமாற்றியதுடன், என் அனுமதியின்றி கருவைக் கலைத்துள்ளார்,’’ எனக் கூறி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, 2011இல் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்திருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை, ஆரம்பம் முதலே சீமான் மறுத்து வருகிறார். அவ்வப்போது இந்த விவகாரம் செய்திகளில் வெளியாகி அரசியல் களத்தில் பேசுபொருளாவதும், பிறகு அமைதியாவதும் கடந்த பத்தாண்டுகளாக நடந்து வருகிறது.
இப்படியான நிலையில் சீமான் மீது, நடிகை விஜயலட்சுமி ஆகஸ்ட் 28ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் புகார் அளித்தார்.
“நான் சினிமாவில் நடித்து சேர்த்து வைத்திருந்த 60 லட்சம் ரூபாய் பணம், 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளைப் பெற்றுக்கொண்டார். எனக்குத் தெரியாமல் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நான் அளித்த புகாரின் பேரில், 2011இல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தற்போது, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மதுரை செல்வம் என்பவர் எனக்குக் கொலை மிரட்டல் விடுக்கிறார்.
சீமான் மீதும், என்னை மிரட்டும் மதுரை செல்வம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என விஜயலட்சுமி தனது புகாரில் தெரிவித்திருந்தார்.
விஜயலட்சுமியின் புகாரின் பேரில் சீமான் மீது போலீஸார், பாலியல் வல்லுறவு, மோசடி, மிரட்டல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்த விவகாரம் அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில், புகார் தொடர்பாக விசாரணை நடத்துமாறு போலீசாருக்கு காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.
போலீசார் விஜயலட்சுமியை நேரில் வரவழைத்து, 8 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தி, ஆதாரங்களைப் பெற்று, திருவள்ளூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் அவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். செப்டம்பர் 1ஆம் தேதி சீமான் கட்சி நிர்வாகிகளைச் சந்திக்க ஊட்டி வந்திருந்தார்.
அப்போது, ‘விஜயலட்சுமி கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் சீமான் எந்த நேரத்திலும் ஊட்டியில் வைத்து கைது செய்யப்படலாம்,’ என்ற தகவல் பரவியது. ஆனால், சம்மன் கொடுப்பது, கைது செய்வது என எதுவும் அப்போது நடக்கவில்லை.
ஊட்டியில் நிருபர்களிடம் பேசிய சீமான், ‘‘விஜயலட்சுமி விவகாரத்தில் நான் மெளனமாக இருக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். நான் வெடித்துச் சிதறினால் யாரும் தாங்க மாட்டீர்கள்.
பெரிய லட்சியங்களுடன் பயணித்துக் கொண்டிருக்கும் என்னை அவதூறு செய்கிறார்கள். என்னை எதிர்கொள்ள முடியாதவர்கள் விஜயலட்சுமியை வைத்து அரசியல் செய்கிறார்கள். இது எனக்கு எதிரான அரசியல் கட்சிகளின் சதி,’’ என காட்டமாகப் பேசியிருந்தார்.
மேலும், விஜயலட்சுமிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், விஜயலட்சுமி மற்றும் அவருக்கு ஆதரவாக வந்த தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி ஆகியோர் மீது, நாம் தமிழர் கட்சியினர் மதுரையில் அவதூறு வழக்குகள் பதிவு செய்ததுடன், ‘விஜயலட்சுமி பணம் பறிப்பதற்காக சீமான் மீது புகார் கொடுத்துள்ளார்,’ எனக் கூறி, சமூக ஊடகங்களில் வீடியோக்களையும் பதிவேற்றினர்.
நேரில் ஆஜராகும்படி சீமானுக்கு சம்மன்
விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், செப்டம்பர் 7ஆம் தேதி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் செப்டம்பர் 8ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு, ‘விஜயலட்சுமி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் இருந்து வருகிறது. வழக்கு தொடர்பான விசாரணையைச் செய்ய வேண்டியுள்ளது.
செப்டம்பர் 9ஆம் தேதி காலை, 10:30 மணிக்குள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும்,’ என எழுதப்பட்ட சம்மன் ஒன்றை, பாலவாக்கம் சக்திமூர்த்தி அம்மன் நகரில் உள்ள சீமானிடம் வளசரவாக்கம் போலீஸார் நேரில் வழங்கியுள்ளனர்.
சம்மன் வழங்கியது பெரும் பேசுபொருளாகியுள்ள நிலையில், சீமான் இதுவரை காவல் நிலையத்தில் ஆஜராகவும் இல்லை, இது தொடர்பாக அவர் பொதுவெளியில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
சீமானுக்கு வழங்கப்பட்ட சம்மன் தொடர்பாகக் கேள்வி எழுப்பியபோது, பிபிசி தமிழுக்கு நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் விளக்கமளித்தார்.
“அண்ணன் சீமான் மீது விஜயலட்சுமி கொடுத்த புகார் பொய்யானது. இதை நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம். சிவகங்கையில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட உள்ளதால், சீமான் சிவகங்கை செல்கிறார். வரும், 12ஆம் தேதி ஆஜராக போலீசாரிடம் அனுமதி கேட்டுள்ளோம்,” என்றார் இடும்பாவனம் கார்த்திக்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்