எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் பாணியை பின்பற்றாமல் விஜய் நடிப்பதை உடனே நிறுத்துவது ஏன்? தமிழ் சினிமாவுக்கு என்ன பாதிப்பு?

எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் பாணியை பின்பற்றாமல் விஜய் நடிப்பதை உடனே நிறுத்துவது ஏன்? தமிழ் சினிமாவுக்கு என்ன பாதிப்பு?

விஜய் நடிப்பதை நிறுத்துவது ஏன்?

பட மூலாதாரம், AGS

அரசியல் கட்சியைத் துவங்கியிருக்கும் நடிகர் விஜய், தனது அடுத்த திரைப்படத்துடன் திரையுலகை விட்டு விலகுவதாக அறிவித்திருக்கிறார். இது தமிழ் திரைத் துறையை எந்த அளவுக்கு பாதிக்கும்?

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் துவங்கியிருப்பதாகவும் அந்தக் கட்சி 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுமென்றும் அறிவித்திருக்கும் நடிகர் விஜய், “அரசியல் என்பது எனக்கு இன்னொரு தொழில் அல்ல. அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல. எனவே ஏற்கனவே நான் ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன்” என்று கூறியிருக்கிறார்.

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, ஸ்நேகா, லைலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்றுவருகிறது. இது விஜய் நடிக்கும் 68வது படம்.

இந்தப் படத்திற்குப் பிறகும் ஒரு படம் நடிக்கப்போவதாக விஜய் சொல்லியிருக்கிறார். அந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை. இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கலாம் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்திற்குப் பிறகு நடிக்கப் போவதில்லை என தற்போது விஜய் அறிவித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் விஜயின் இந்த அறிவிப்பு தமிழ் சினிமாவை குறிப்பாக திரையரங்குகளை எந்த அளவுக்கு பாதிக்கும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

தமிழ் சினிமாவுக்கு என்ன பாதிப்பு?

நடிகர் விஜய்

பட மூலாதாரம், ACTORVIJAY/KAYALDEVARAJ

கோவிட் பரவல் மற்றும் ஓடிடிகளின் வருகைக்குப் பிறகு, தமிழ்நாடு முழுவதுமே திரையரங்குகள் பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கின்றன. ஆயிரக்கணக்கில் இருந்த திரையரங்குகளின் எண்ணிக்கை தற்போது 800க்குள் சுருங்கியிருக்கிறது.

எல்லா வாரங்களிலும் திரைப்படங்கள் வெளியாகின்றன என்றாலும்கூட, அப்படி வெளியாகும் படங்களில் பல 2-3 நாட்கள்கூட ஓடுவதில்லை என்பதால், அந்தப் படங்களைத் திரையிட திரையரங்குகள் ஆர்வம் காட்டுவதேயில்லை. இதனால், பல வாரங்கள் திரையரங்குகள் மூடியே கிடக்கின்றன.

2000கள் வரை சென்னை மட்டுமல்லாமல் இரண்டாம் நிலை நகரங்களில்கூட, தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, ஆங்கிலப் படங்களும் தொடர்ச்சியாக வெளிவந்தன. ஆனால், 2020க்கு சற்று முன்பிருந்து இந்தப் போக்கு மாற ஆரம்பித்தது. தமிழில் வெளிவரும் பெரிய நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வந்தார்கள்.

தற்போதைய சூழலில் ரஜினி, கமல், விஜய், அஜீத், தனுஷ், சிம்பு, சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சில நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே பெரிய அளவில் முதல் நாள் ரசிகர்கள் திரையரங்குகளில் குவிகிறார்கள். மற்ற நடிகர்களின் படங்கள் நன்றாக இருப்பதாக செவிவழி விமர்சனம் பரவினால் கூட்டம் வருகிறது. ஆனால், அதுவரை அந்தப் படம் திரையரங்கில் தாக்குப்பிடித்திருக்க வேண்டும்.

திரையரங்குகளுக்கு ரசிகர்களை அழைத்து வரும் இந்தப் பெரிய நடிகர்களின் படங்களும் அடிக்கடி வருவதில்லை என்பதுதான் திரையரங்குகளின் பிரச்னை. ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் வருடத்திற்கு ஒரு படம் வெளிவரும் வகையில்தான் நடிக்கிறார்கள். அஜீத்தைப் பொறுத்தவரை ஒரு படத்திற்கு ஒன்றரை ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறார். விஜய், தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்றவர்கள் ஒன்றரை ஆண்டுகளில் இரண்டு படங்கள் நடிக்கிறார்கள். இந்த நிலையில்தான் இனிமேல் திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என அறிவித்திருக்கிறார் விஜய். இது எந்த அளவுக்கு திரையரங்குகளைப் பாதிக்கும்?

அதிகபட்ச வர்த்தகத்தைத் தரும் நடிகராக இருக்கும் விஜய்

நடிகர் விஜய்

பட மூலாதாரம், @ACTORVIJAY

விஜய் படங்களில் நடிப்பதை நிறுத்துவது பாதிப்பை ஏற்படுத்துமா இல்லையா என்பதை, சில நாட்களுக்கு முன்பாக நடந்த ஒரு சம்பவத்தை வைத்துத் தெரிந்து கொள்ளலாம் என்கிறார் மூத்த சினிமா பத்திரிகையாளரான அந்தணன்.

“சில நாட்களுக்கு முன்பாக திரையரங்கு உரிமையாளர்கள் ஒரு கூட்டம் போட்டார்கள். அந்தக் கூட்டத்தில் விஜய், அஜீத் போன்ற பெரிய நடிகர்கள் வருடத்திற்கு 2-3 படங்களை நடிக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஏனென்றால் பெரிய நடிகர்களின் படங்களுக்குத்தான் ரசிகர்கள் வருகிறார்கள். கேண்டீன், பார்க்கிங் என எல்லா வர்த்தகமும் அப்போதுதான் முழுமையாக நடக்கும்.

இதில் விஜய்தான் அதிகபட்ச வர்த்தகத்தைத் தரும் நடிகராக இருக்கிறார். அவரது ஒவ்வொரு படமும் சுமார் 500 கோடி ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. வருடத்திற்கு இரண்டு படம் நடித்தால், கிட்டத்தட்ட 1,000 கோடி ரூபாய். அவர் திடீரென நடிப்பதை நிறுத்தினால், இந்த 1,000 கோடி ரூபாய் வர்த்தகம் நின்று போகும்” என்கிறார் அந்தணன்.

தயாரிப்பாளரான தனஞ்செயனும் இதே கருத்தை எதிரொலிக்கிறார். “ஏற்கனவே திரையரங்குகள் மிக மோசமான நிலையில் இருக்கின்றன. சிறிய பட்ஜெட் படங்களைத் திரையிட்டால் ஆட்களே வருவதில்லை. பெரிய பட்ஜெட் படங்களுக்கு மட்டும்தான் வருகிறார்கள். சூழல் அம்மாதிரி இருக்கும்போது திடீரென ஒரு பெரிய நடிகர் நடிப்பதை நிறுத்துவது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

லியோ படம் வெளிவந்து எவ்வளவு நாட்களாகின்றன? ஆனால், இப்போதுவரை அந்தப் படம்தான் அதிக வசூலைச் செய்த படமாக இருக்கிறது. நிலைமை இம்மாதிரி இருக்கும்போது அவர் படங்களில் நடிப்பதை நிறுத்துவதாகச் சொல்வது ஒரு அதிர்ச்சியை நிச்சயம் ஏற்படுத்தும்” என்கிறார் தனஞ்செயன்.

ஆனால், திரையரங்க உரிமையாளர்கள் அப்படி கருதவில்லை. திரையரங்குகள் ஏற்கனவே மோசமான நிலையில் இருக்கும் நிலையில், இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது எனக் கருதுகிறார்கள் அவர்கள்.

“விஜய் திரையுலகை விட்டுச் செல்வது என்பது வருத்தத்திற்கு உரியதுதான். ஆனால், அது பெரிதாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அவர் வருடத்திற்கு ஐந்தாறு படங்களிலா நடிக்கிறார். அவர் நடித்து வருடத்திற்கு ஒரு படம் வருகிறது. சில சமயங்களில் அதைவிட கூடுதல் கால அவகாசத்தை எடுத்துக் கொள்கிறார்கள். ஆகவே அந்தப் படத்தை மட்டும் நம்பி திரையரங்குகள் இயங்குவதில்லை. இப்போது அந்த ஒரு படம் வராமல் போவது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது” என்கிறார் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவரான திருப்பூர் சுப்பிரமணியன்.

திரைத்துறையில் இருந்துகொண்டே அரசியலில் ஈடுபட்ட நடிகர்கள்

நடிகர் விஜய்

பட மூலாதாரம், ACTORVIJAY/X

பொதுவாக அரசியலுக்கு வரும் நடிகர்கள், நடிப்பதை உடனடியாக நிறுத்திவிடுவதில்லை. எம்.ஜி.ஆர். தி.மு.கவிலிருந்த படியே படங்களில் நடித்ததோடு, அந்தப் படங்களில் தனது கட்சியையும் முன்னிறுத்தி வந்தார். 1972 அக்டோபரில் அவர் தனிக்கட்சி ஆரம்பித்த பிறகும்கூட, நடிப்பதை நிறுத்தவில்லை. அவர் தனிக்கட்சி ஆரம்பித்த பிறகு, உலகம் சுற்றும் வாலிபன், பட்டிக்காட்டு பொன்னையா, நேற்று இன்று நாளை, உரிமைக் குரல், சிரித்து வாழ வேண்டும், நினைத்ததை முடிப்பவன், நாளை நமதே உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவர் முதலமைச்சரான பிறகே படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.

தனிக் கட்சி ஆரம்பித்த பிறகு, தனது படங்களை புதிய கட்சியின் பிரசார வாகனமாகவும் மிக வெற்றிகரமாகப் பயன்படுத்தினார் எம்.ஜி.ஆர். “நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால்” (மீனவ நண்பன்), “ஊருக்கெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே, தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்துவிட்டார் நகர சபையிலே” (நேற்று இன்று நாளை), “நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்” (உலகம் சுற்றும் வாலிபன்) என்று தனது பாடல்களிலேயே எதிர்க்கட்சியினரைக் குறிவைத்தார் எம்.ஜி.ஆர்.

விஜயகாந்தைப் பொறுத்தவரை, கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அவரது மன்றக் கொடி, திரைப்படங்களில் இடம்பெற்றது. கட்சியைத் துவங்கிய பிறகும், சுதேசி, பேரரசு, தர்மபுரி, சபரி, அரசாங்கம், மரியாதை, எங்கள் ஆசான், விருதகிரி என நடித்துக்கொண்டே இருந்தார். 2010ஆம் ஆண்டுவரை அவர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தவில்லை.

ரஜினிகாந்தும்கூட அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகும் படங்களில் நடித்துக்கொண்டேயிருந்தார். 2017ல் தான் அரசியலுக்கு வரப் போவதாக அறிவித்த ரஜினிகாந்த், அதற்குப் பிறகு காலா, 2.0, தர்பார் ஆகிய படங்களில் நடித்தார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கிய நிலையில், தான் அரசியலுக்கு வரப் போவதில்லை என அறிவித்துவிட்டு முழுமூச்சாக திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

2018ல் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் துவங்கிய கமல், அதற்குப் பிறகு விஸ்வரூபம் – 2, விக்ரம் ஆகிய படங்களில் நடித்து வெளியிட்டார். இதே காலகட்டத்தில் இந்தியன் – 2 படத்திலும் நடித்தார். தற்போது அரசியலில் இருக்கும் கமல், இப்போதும் தீவிரமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் பாணியை பின்பற்றாமல் விஜய் நடிப்பதை உடனே நிறுத்துவது ஏன்?

விஜய் நடிப்பதை நிறுத்துவது ஏன்?

பட மூலாதாரம், VIJAY MAKKAL IYAKKAM / YOUTUBE

எம்.ஜி.ஆர்., விஜயகாந்த், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கும் விஜய்க்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருக்கிறது. விஜயைத் தவிர்த்த மற்றவர்கள் அனைவருமே தங்கள் திரைவாழ்வின் உச்சத்தைக் கடந்த பிறகே அரசியலில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தார்கள். ஆனால், விஜய் தன் திரைவாழ்வின் உச்சத்தில் இருக்கும்போதே திரைத்துறையை விட்டு விலகி, அரசியலில் ஈடுபடப் போவதாகச் சொல்லியிருக்கிறார்.

“விஜய் சில காலத்திற்கு விலகியிருப்பதாகச் சொல்லலாம். ஏன் முழுமையாக விலகுவதாகச் சொன்னார் என்பது புரியவில்லை. அரசியலுக்கு வந்த பல நடிகர்கள் இப்போதும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதுபோல அவரும் செய்யலாம்” என்கிறார் தனஞ்சயன்.

ஆனால், தமிழ்த் திரைத்துறையின் பிரச்னை வேறு என்கிறார் திருப்பூர் சுப்பிரமணியன்.

“தமிழ்த் திரையரங்குகளைப் பொருத்தவரை கடந்த 6 மாதங்களுக்கு;k மேலாக மிகப் பெரிய சிக்கலில் இருக்கிறது. திரையரங்குகளை நடத்துவதே மிகக் கடினமான காரியமாகிவிட்டது. சென்னையில் அடுத்த சில மாதங்களில் பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளை மூடப்போகிறார்கள். கே.கே. நகரில் உள்ள நான்கு திரையரங்குகளைக் கொண்ட காம்ப்ளக்ஸ், அண்ணா சாலையில் உள்ள ஒரு திரையரங்கு ஆகியவை விரைவில் மூடப்படவிருக்கின்றன. ஓடிடி தளங்கள் வந்த பிறகு திரையரங்கிற்கு யாரும் வருவதில்லை என்பதுதான் இதற்குக் காரணம்” என்கிறார் அவர்.

ஆனால் இதில் பெரிய புதிர், சினிமா பிரபலத்தை வைத்து அரசியலில் நுழையும் விஜய், அரசியலுக்கு வந்த பிறகு தனது சினிமாவை அரசியலுக்காக பயன்படுத்தாமல், அதிலிருந்து விலக விரும்புவது ஏன் என்பதுதான்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *