ஓடும் ரயிலில் செல்வந்தரை கொன்றது யார்? அடுத்த பெட்டியில் பயணித்த நடிகைக்கு தொடர்பா?

ஓடும் ரயிலில் செல்வந்தரை கொன்றது யார்? அடுத்த பெட்டியில் பயணித்த நடிகைக்கு தொடர்பா?

ஓடும் ரயிலில் செல்வந்தர் கொலை

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டின் பழைய கொலை வழக்குகளைப் பற்றிப் பேசும்போதெல்லாம் போட் மெயில் கொலை வழக்கு கட்டாயம் பேசப்படும். ஆனால், போட் மெயில் கொலை வழக்கு என்ற பெயரில் இரண்டு வழக்குகள் இருந்தன. ஒன்று ஆளவந்தார் கொலை வழக்கு. இன்னொன்று, செல்வந்தர் ஒருவர் ரயிலில் கொல்லப்பட்ட வழக்கு.

சரியாகப் பார்த்தால், இந்தக் கொலை போட் மெயிலில் நடந்த கொலையல்ல. திருவனந்தபுரத்திலிருந்து சென்னை செல்லும் ரயிலில் நடந்த கொலை இது. இருந்தபோதும் இந்த வழக்கிற்கு ஏனோ போட் மெயில் கொலை வழக்கு எனப் பெயர் வந்துவிட்டது.

1940களின் மத்தியப் பகுதி. மதுரை ரயில் நிலையம். திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்ட திருவனந்தபுரம் – சென்னை மெயில் அப்போதுதான் அங்கு வந்து நின்றிருந்தது. தேவகோட்டையைச் சேர்ந்த பிரபலமான வங்கியாளர் முதல் வகுப்புப் பெட்டியில் ஏறி அமர்ந்தார்.

இந்த ரயில் அதிகாலை ஐந்து மணியளவில் செங்கல்பட்டை வந்தடைந்தபோது அந்த பணக்காரர் ரத்தவெள்ளத்தில் கழுத்து அறுக்கப்பட்டுக் கிடந்தார். இவருடன் யாரும் பயணம் செய்யவில்லை என்பதால், யார், எதற்காகக் கொலை செய்தார்கள் என்பதெல்லாம் உடனடியாகப் புரியவில்லை.

தமிழ்நாட்டின் பிரபல கொலை வழக்குகள்

பட மூலாதாரம், Getty Images

தண்டவாளத்தை ஒட்டி ரத்தத் துளிகள்

விசாரணையில் மெல்லமெல்ல விஷயங்கள் புலனாக ஆரம்பித்தன. மதுரையில் இருந்து புறப்பட்ட அந்த ரயில் இரவு பத்தரை மணியளவில் திருச்சி சந்திப்பை வந்தடைந்தது. அப்போது அந்தப் பணக்காரர் இறங்கி, அங்கிருந்த உணவகத்தில் ஏதோ வாங்கி சாப்பிட்டதை சிலர் பார்த்திருந்தார்கள். ஆகவே, திருச்சிக்கும் செங்கல்பட்டிற்கும் இடையில்தான் கொலை நடந்தது என்பது உறுதியானது.

ஆகவே, இந்த இரண்டு ரயில் நிலையங்களுக்கும் இடைப்பட்ட எதோ ஒரு ரயில் நிலையத்தில் யாரோ ஒருவர் ஏறி கொலை செய்துவிட்டு, அடுத்த நிலையத்தில் இறங்கியிருக்க வேண்டும் என காவல்துறையினர் முடிவுசெய்தனர்.

ஆகவே இந்த இரண்டு நிலையங்களுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஏதாவது தடயங்கள் கிடைக்கிறதா என்பதை ஆராய காவலர்கள் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அப்படி இறங்கிச் சென்றவர்களை யாராவது பார்த்தார்களா என்பதை விசாரிக்க ஆரம்பித்தனர். தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு திண்டிவனத்தில் ஒரு தடயம் கிடைத்தது. திண்டிவனம் ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளத்தை ஒட்டி ரத்தத் துளிகள் கிடைத்தன. அவற்றைப் பின்தொடர்ந்து சென்றபோது, ஒரு புதருக்குள் காயமடைந்த ஒருவர் கிடந்தார்.

அந்த நபர் உடனடியாகக் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் வேறு ஒரு கதையைச் சொன்னார். அந்த நபர் அதே இரவில் தனுஷ்கோடிக்கும் சென்னை எழும்பூருக்கும் இடையிலான போட் மெயிலில் சென்னையிலிருந்து இரண்டு நணபர்களுடன் பயணம் செய்தவர். மூன்று பேரும் அதிமாக மது அருந்திருந்தனர். ரயில் செங்கல்பட்டு நிலையத்தைத் தாண்டியதும் கழிப்பறைக்குச் செல்ல நினைத்து, கம்பார்ட்மென்டின் கதவைத் திறந்து கீழே விழுந்துவிட்டதாகச் சொன்னார். அவருடன் பயணம் செய்தவர்களைத் தேடிக் கண்டுபிடித்ததில் அவர் சொன்னது உண்மை என நிரூபணமாகிவிட்டது. அதனால் அவரை விட்டுவிட்டார்கள்.

தமிழ்நாட்டின் பிரபல கொலை வழக்குகள்

பட மூலாதாரம், Getty Images

லட்சுமிகாந்தன் கொலை வழக்குடன் கிசுகிசு

அந்தப் பணக்காரரைக் கொலை செய்வதற்கான நோக்கம் யாருக்கு இருக்கிறது என்பதை தேடிப் பார்த்து, அவர்களை விசாரிக்கலாம் என முடிவுசெய்தது காவல்துறை. அந்தப் பணக்காரருக்கு அரசியலில் கொஞ்சம் ஈடுபாடு இருந்தது. நடந்து முடிந்திருந்த மாவட்ட வாரியத் தேர்தலில், அவர் ஆதரித்திருந்த தரப்பு வெற்றிபெற்றிருந்தது. இதனால், எதிர்த் தரப்பு அவர் மீது பெரும் ஆத்திரத்துடன் இருந்தது. அதனால், எதிர்த் தரப்பைச் சேர்ந்த சிலரை விசாரித்துப் பார்த்தனர். அதில் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.

அடுத்ததாக இன்னொரு கதையும் சொல்லப்பட்டது. அதாவது அந்த நாட்களில் பிரபலமாக இருந்த நடிகை ஒருவரும் அடுத்த பெட்டியில் பயணம் செய்ததாகவும் இந்தக் கொலையுடன் அந்த நடிகைக்கு தொடர்பிருக்கலாம் என பல கிசுகிசுக்கள் எழுந்தன. அந்த நடிகை, திருச்சியில் ஏறி, சென்னையில் இறங்கினார். அந்த கோணத்திலும் காவல்துறை விசாரணை நடத்தியது. அதிலும் பலன் ஏதும் இல்லை.

இறுதிவரை, அந்த செல்வந்தரை யார் கொன்றார்கள் என்பதே தெரியாமல், அந்த வழக்கு தீர்க்கப்படாத வழக்காகவே நின்றுவிட்டது.

இதில் இன்னொரு கிளைக் கதையும் உண்டு. அதாவது, தியாகராஜ பாகவதரும் என்.எஸ். கிருஷ்ணனும் கைதுசெய்யப்பட்ட லட்சுமிகாந்தன் கொலை வழக்கில், இந்த விவகாரமும் பேசப்பட்டது. அதாவது, கொலை செய்யப்படுவதற்கு முன்பாக, இந்தப் பணக்காரர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது தனக்குத் தெரியும் என்றும் அந்த நடிகை யார், அவர் ஏன் அந்த ரயிலில் பயணம் செய்தார் என்பதையும் தனது இந்து நேசனில் வெளியிடப் போவதாக லட்சுமிகாந்தன் பலரிடமும் சொல்லிவந்ததாகச் சொல்லப்படுகிறது.

அந்தத் தகவல் வெளியில் வருவதை விரும்பாத யாரோ லட்சுமி காந்தனை கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால், இது ஒரு காரணமாக இருக்க முடியாது என காவல்துறை கருதியதால் விசாரணை அந்த திசையில் செல்லவில்லை. ஆனால், லட்சுமிகாந்தன் கொலை அதற்காகத்தான் நடந்தது என்று நம்புபவர்கள் இன்றும் உண்டு.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *