குஜராத்தில் ரூ.2,000 கோடி போதைப்பொருள் பறிமுதல் – தமிழ்நாட்டில் சிலருக்கு தொடர்பா?

குஜராத்தில் ரூ.2,000 கோடி போதைப்பொருள் பறிமுதல் - தமிழ்நாட்டில் சிலருக்கு தொடர்பா?

குஜராத்தில் 2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது எப்படி?

பட மூலாதாரம், X/@SANGHAVIHARSH

அண்மைக் காலமாக குஜராத்தில் அதிகளவில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவங்கள் நடைபெறுகின்றன. போதைப்பொருள் தடுப்புப் பிரிவும் இந்திய கடற்படையும் போர்பந்தர் கடற்கரையில் கடந்த செவ்வாய்க்கிழமை சுமார் 3,300 கிலோகிராம் போதைப்பொருளைக் கைப்பற்றியுள்ளன.

ஏ.என்.ஐ செய்தி முகமை வெளியிட்டுள்ள செய்தியின்படி, போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் உதவியுடன் இந்திய கடற்படை சந்தேகத்திற்கிடமான படகைக் கைப்பற்றியது. அந்த படகில் இருந்து சுமார் 3,300 கிலோகிராம் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

சர்வதேச சந்தையில் இந்தபோதைப்பொருளின் விலை 2,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என ’இந்தியா டுடே’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சமீபகாலமாக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதில் இதுவே மிக அதிகமானது என்று இந்திய கடற்படை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடற்படை வெளியிட்ட அறிக்கையின்படி, “சந்தேகத்திற்கிடமான கப்பல் அரபிக்கடலில் குஜராத் கடற்கரையில் சர்வதேச கடல் எல்லைக் கோடு அருகே தடுத்து நிறுத்தப்பட்டது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் படகிலிருந்தவர்கள் பிப்ரவரி 27 அன்று இந்திய துறைமுகத்தில் சட்ட அமலாக்க முகமையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தடை செய்யப்பட்ட 3,300 கிலோ எடையுள்ள போதைப்பொருளில் 3,089 கிலோ ஹாஷிஸ், 158 கிலோ மெத்தம்பெட்டமைன் மற்றும் 25 கிலோ மார்ஃபின் ஆகியவை அடங்கும்.

அமித் ஷாவும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவும் கூறியது என்ன?

குஜராத்தில் 2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது எப்படி?

பட மூலாதாரம், ANI

இந்த நடவடிக்கை வெற்றி பெற்றதற்காக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, இந்திய கடற்படை மற்றும் குஜராத் காவல்துறைக்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் சமூக ஊடக தளமான ’எக்ஸ்’ தளத்தில், “போதைப்பொருள் இல்லாத இந்தியா என்ற பிரதமர் மோதியின் தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றி, நாட்டிலேயே அதிகளவிலான போதைப்பொருளை பறிமுதல் செய்வதில் எங்கள் முகமைகள் வெற்றி பெற்றுள்ளன. போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, கடற்படை மற்றும் குஜராத் காவல்துறை இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் அதிகளவிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது” என தெரிவித்துள்ளார்.

’ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ நாளிதழுடனான உரையாடலில், தேசிய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு துணை இயக்குநர் ஜெனரல் (ஆபரேஷன்ஸ்) தியானேஷ்வர் சிங் , “இதுபற்றிய கூடுதல் தகவல்களை நாங்கள் தரவிருக்கிறோம். கைது செய்யப்பட்ட 5 பேரிடம் அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லை. அவர்கள் இரான் அல்லது பாகிஸ்தானில் இருந்து வந்திருக்கின்றனர். இது நாட்டிலேயே கடல் வழியாக மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல்” என தெரிவித்தார்.

குஜராத் உள்துறை இணையமைச்சர் ஹர்ஷ் சங்வி ’எக்ஸ்’ தளத்தில், “பிரதமர் நரேந்திர மோதி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நடவடிக்கை, போதைப்பொருள் இல்லாத இந்தியா என்ற உறுதிப்பாட்டை வலுப்படுத்தும். இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்த அனைவருக்கும் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

குஜராத்திற்கு போதைப்பொருள் எங்கிருந்து வருகிறது?

குஜராத்தில் 2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது எப்படி?

பட மூலாதாரம், AJAY SHILU

கடந்த சில ஆண்டுகளில், தேசிய மற்றும் மாநில அளவில் பல்வேறு முகமைகள் குஜராத்தில் ஏராளமான போதைப் பொருட்களைக் கைப்பற்றியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கைகளில் பெரும்பாலானவை குஜராத்தின் கடலோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், கட்ச், ஜாம் நகர், சௌராஷ்டிராவின் வேறு சில இடங்கள் மற்றும் தெற்கு குஜராத்தின் சில இடங்களும் அடங்கியுள்ளன.

2023-ம் ஆண்டில், கட்ச் பகுதியில் உள்ள காந்திதாமில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள மிதி ரோஹர் கிராமத்தின் கடற்கரையில் இருந்து உள்ளூர் போலீசார் 80 கிலோ கோகைனை பறிமுதல் செய்தனர்.

முன்னதாக, 2021-ம் ஆண்டு முந்த்ரா துறைமுகத்தில் இருந்து சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 3 ஆயிரம் கிலோ போதைப்பொருட்களை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைப்பற்றியது. இதற்கு முன்பும் பின்பும் இத்தகைய சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி, போதைப்பொருள் பறிமுதல் சம்பவங்கள், குஜராத்தில் பாதுகாப்புப் படையினரின் வெற்றி என்றும் போதைப்பொருளுக்கு எதிரான அரசின் கடுமையான கொள்கைதான் காரணம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

சமீப காலமாக குஜராத்தில் பிடிபடும் அதிகளவிலான போதைப்பொருட்கள் எப்படி வருகிறது என்ற கேள்வி எழுகிறது.

சமீப காலமாக குஜராத்தில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்கள் அனைத்தும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அல்லது இரானில் இருந்து வந்தவை என்று பாதுகாப்பு அமைப்புகள் கூறி வருகின்றன. வருவாய் புலனாய்வு அமைப்புகளின் வட்டாரங்களின்படி, விசாரணையில் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்களின் பெயர்களும் அடிபடுகின்றன. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள அதிகார மாற்றம் போதைப்பொருள் கடத்தல் அதிகரிக்க வழிவகுத்துள்ளதா என்பதை பாதுகாப்பு அமைப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். ஓபியம் விவசாயிகளிடம் இருந்து மிரட்டி பணம் பறிப்பதும் கடத்தல்காரர்களிடம் இருந்து பணம் பறிப்பதும் தாலிபன்களுக்கு முக்கிய வருமானம் ஆகும்.

போதைப்பொருள் மற்றும் குற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் அறிக்கையின்படி, ஆப்கானிஸ்தான் உலகின் மொத்த அபின் உற்பத்தியில் 80 சதவீதத்தைக் கொண்டுள்ளது. இதில், சுத்திகரிப்பு மூலம் ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்களை தயாரிக்கலாம்.

போதைப்பொருள் தடுப்புப் பிரிவால், ஒருவர் ஐந்து கிராம் வரை ஹெராயினுடன் பிடிபட்டால், அது ‘சிறிய அளவு’ என்று கருதப்படுகிறது. இருநூற்று ஐம்பது கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட அளவு பெரிய அளவாகக் கருதப்படும்போது, ​​அது வணிகத்தின் ஒரு அங்கமாகக் கருதப்படுகிறது.

முன்னதாக, குஜராத்தில் உள்ள சலாயா, ஓகா மற்றும் மாண்ட்வி போன்ற சௌராஷ்டிரா துறைமுகங்கள் வழியாக தங்கம், கடிகாரங்கள் அல்லது மின்னணு பொருட்கள் கடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக ‘தவ்’ எனப்படும் சிறிய ரக நாட்டுக் கப்பல் பயன்படுத்தப்பட்டது.

1993-ம் ஆண்டில், போர்பந்தரில் உள்ள கோசபரா துறைமுகத்தில் ஆர்டிஎக்ஸ் மற்றும் ஆயுதங்கள் அடங்கிய சரக்கு தரையிறங்கியது. இது அப்போதைய பம்பாயில் குண்டுவெடிப்புகளை நடத்த பயன்படுத்தப்பட்டது. குஜராத் கடந்த சில ஆண்டுகளாக போக்குவரத்துப் பாதையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

முன்னதாக, கட்ச், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் எல்லைகளைக் கடந்து சுரங்கப்பாதைகள் அல்லது குழாய்கள் வழியாக போதைப்பொருள் நாட்டுக்குள் நுழைந்தது.

குஜராத்தில் சுமார் 1,600 கிலோமீட்டர் நீளத்திற்கு கடற்கரை உள்ளது, இது நாட்டிலேயே மிக நீளமானது. குஜராத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் மற்றும் சிறிய கப்பல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, சர்வதேச கடற்பகுதியில் கடத்தல்காரர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பது கடினம்.

பாதுகாப்பு முகமைகள், கடற்படை, கடலோரக் காவல்படை போன்றவற்றுடன் இணைந்து, கடலில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ரேடியோ அலைவரிசைகளைக் கண்காணித்து, மத்திய புலனாய்வு அமைப்புகளின் தகவல்களின் அடிப்படையில், இந்தியாவிற்கு வரும் போக்குவரத்தை இடைமறிக்க மீனவர் சமூகத்தில் உள்ள தகவல் வழங்குபவர்களின் வலையமைப்பு முயற்சிக்கிறது.

போதைப்பொருட்களை அனுப்புவது யார்? வாங்குபவர்கள் யார்?

குஜராத்தில் 2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது எப்படி?

பட மூலாதாரம், X/@SANGHAVIHARSH

குஜராத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்கள் முக்கியமாக வட இந்தியாவுக்கானவை என்று குஜராத் ஏடிஎஸ் துணைக் கண்காணிப்பாளர் பவேஷ் ரோஜியா பிபிசியிடம் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “போதைப்பொருட்கள் குஜராத் மண்ணை அடைந்த பிறகு, அவை வெவ்வேறு நபர்களால் கடத்தப்படுகின்றன. முக்கியமாக போதைப்பொருட்கள் பஞ்சாப் மற்றும் டெல்லிக்கு அனுப்பப்படுகின்றன” என அவர் தெரிவித்தார்.

போதைப்பொருள் மாஃபியாவின் செயல்பாட்டினைப் பற்றி பேசுகையில், போதைப்பொருள் குஜராத்தை அடைந்தவுடன், அவை குஜராத்திலிருந்து ரயில், பேருந்து அல்லது கார் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன என்று கூறுகிறார்.

குஜராத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் பற்றி பாவேஷ் ரோஜியா கூறும்போது, ​​”கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்கள் குஜராத்தில் யாராலும் ஆர்டர் செய்யப்படவில்லை. ஒவ்வொரு முறையும் வெவ்வேறு நபர்களால் அனுப்பப்படும். வெவ்வேறு நபர்கள் அவற்றை குஜராத்தில் இருந்து வெளியே கொண்டு செல்ல முயற்சிக்கிறார்கள். பெரும்பாலானவை இதற்கு முன்பே பிடிபடுகின்றன” என்றார்.

சமீபத்தில் குஜராத் ஏடிஎஸ் (தீவிரவாத எதிர்ப்புப் பிரிவு) மற்றும் கடலோர காவல்படை இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில் இந்திய கடற்பகுதியில் இருந்து சுமார் ரூ.280 கோடி மதிப்புள்ள ஹெராயின் கைப்பற்றப்பட்டது. பாகிஸ்தானின் போதைப்பொருள் மாஃபியா முஸ்தபா பாகிஸ்தானில் இருந்து பல கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை ‘அல் ஹஜ்’ என்ற படகில் அனுப்பியதாக குஜராத் ஏடிஎஸ் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்த போதைப்பொருட்கள் குஜராத் வழியாக வட இந்தியாவுக்கு வழங்கப்பட இருந்தன. இதுபற்றிய தகவல் ஏற்கனவே குஜராத் ஏ.டி.எஸ்-க்கு கிடைத்ததால், கடலோர காவல்படையினருடன் இணைந்து படகை தடுத்து நிறுத்தினர்.

கடலோர காவல்படையினர் படகை சுற்றி வளைத்ததால் படகை இயக்கியவர் தப்பியோட முயன்றார். எனினும், இறுதியில் அவர் பிடிபட்டார். இந்த படகில் ஹெராயினுடன் இருந்த ஒன்பது பாகிஸ்தானியர்களை கைது செய்த பிறகு, ஏடிஎஸ் மற்றும் என்சிபி வெவ்வேறு குழுக்களை உருவாக்கி வட இந்தியாவின் பல மாநிலங்களில் விசாரணையைத் தொடங்கின.

தமிழ்நாட்டில் சிலருக்கு தொடர்பா?

குஜராத்தில் பிடிபட்டுள்ள 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தலில் தமிழ்நாட்டில் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவை சுட்டிக்காட்டி நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெளிநாட்டைச் சேர்ந்த, பதிவு செய்யப்படாத மீன்பிடிப் படகில் இருந்து கொண்டு வரப்படும் 3 ஆயிரம் கிலோ போதைப்பொருள், தமிழ்நாட்டைச் சேர்ந்ததாக சந்தேகிக்கப்படும் மீன்பிடி படகிற்கு மாற்றப்பட இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது என்று என்.சி.பி. உதவி இயக்குநர் ஞானேஸ்வர் சிங் கூறியதாக தி இந்து ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணைக்காக தமிழ்நாடு வருகை தரப் போவதாக கூறப்படுகிறது.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *