
பட மூலாதாரம், MOHAN YADAV
மத்திய பிரதேசத்தில் 4 முதலமைச்சராக இருந்த சிவ்ராஜ்சிங் சவுகானை ஓரங்கட்டி அவரது அரசில் உயர் கல்வி அமைச்சராக இருந்த மோகன் யாதவை முதலமைச்சராக்கப் போவதாக பாஜக அறிவித்துள்ளது.
திங்களன்று, கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவராக மோகன் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மாநிலத்தில் இரண்டு துணை முதல்வர்கள் இருப்பார்கள். ஜெகதீஷ் தியோரா, ராஜேந்திர சுக்லா ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்க உள்ளனர். நரேந்திர சிங் தோமர் சட்டப்பேரவை சபாநாயகராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மோகன் யாதவ் மூன்றாவது முறையாக எம்எல்ஏ ஆனார். சிவராஜ் சிங் சவுகான் அரசில் உயர்கல்வி அமைச்சராக இருந்தார். மோகன் யாதவ் முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிவராஜ் சிங் சவுகான் முதல்வர் பதவியில் இருந்து விலகுவது உறுதியாகி உள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மாநிலத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 163 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றது. தேர்தலுக்கு முன்பு பாஜக எந்த தலைவரின் பெயரையும் முதல்வராக முன்வைக்கவில்லை.
மோகன் யாதவ் 2013ல் முதல் முறையாக எம்எல்ஏ ஆனார். அவர் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. மோகன் யாதவ் அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்துடன் தொடர்புடையவர். இவர் மத்திய பிரதேச மல்யுத்த சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.
மோகன் யாதவ் ஓபிசி பிரிவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவில் பாஜக ஆட்சியமைத்த மற்றொரு மாநிலமான சத்தீஷ்கரில் முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள விஷ்ணு தியோ சாய் பட்டியல் பிரிவைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பரிசீலனையில் இல்லாத மோகன் யாதவின் பெயர்
இதற்கு முன்பு தேசிய அளவில் மத்திய பிரதேசத்தின் வருங்கால முதல்வரான மோகன் யாதவின் பெயரை யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். ஆனால் அவரது சகோதரி கூறுகையில், உள்ளூர் அரசியல் மட்டத்தில் முதலமைச்சர் பதவிக்கு மோகன் யாதவை தேர்ந்தெடுப்பது குறித்து விவாதம் நடந்ததாக கூறுகிறார்.
செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ. தகவல்படி, மோகன் யாதவின் சகோதரி, “அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. முழு தகவல் தெரியவில்லை.”, எனத் தெரிவித்திருந்தார்.
தனது அண்ணனின் கடின உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளதாக மோகன் யாதவின் சகோதரி தெரிவித்துள்ளார்.
கடந்த எட்டு நாட்களில், மத்திய பிரதேசத்தின் புதிய முதல்வராக பலரின் பெயர்கள் ஊகிக்கப்பட்டன.
இந்த ஊகங்களிலும் மோகன் யாதவின் பெயர் குறித்து எந்த தகவலும் இல்லை. அவர் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், திடீரென மோகன் யாதவின் பெயர் தொலைக்காட்சித் திரைகளில் ஒளிரத் தொடங்கியது. இதனுடன் மோகன் யாதவ்தான் மத்தியப் பிரதேசத்தின் புதிய முதல்வர் என்றும் முடிவு செய்யப்பட்டது.

பட மூலாதாரம், @DRMOHANYADAV51
மோகன் யாதவின் அரசியல் பயணம்
மோகன் யாதவ் நீண்ட காலமாக ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்புடையவர். ஆர்.எஸ்.எஸ்.ஸின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் நீண்ட காலம் இருந்தார்.
1982-இல், அவர் மாதவ் அறிவியல் கல்லூரி மாணவர் சங்கத்தின் இணைச் செயலாளராகவும் 1984-இல் அதன் தலைவராகவும் ஆனார். அவர் 1984-இல் உஜ்ஜைனியின் அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் நகர அமைச்சராகவும், 1986-இல் அதன் துறைத் தலைவராகவும் ஆனார்.
2002-2003ல் பா.ஜ.கவின் நகர் மாவட்ட பொதுச்செயலாளராகவும், 2004ல் பா.ஜ.,வின் மாநில செயற்குழு உறுப்பினராகவும் ஆனார்.
2004-இல் அவர் சிம்ஹஸ்த மத்தியப் பிரதேசத்தின் மத்திய குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
குழுவின் தலைவருக்கு மாநில அமைச்சருக்கு இணையான அந்தஸ்து இருந்தது. அவர் 2011-இல் மத்திய பிரதேச மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இது கேபினட் அமைச்சருக்கு இணையான பதவியாகும்.
2018ல் இரண்டாவது முறையாக எம்எல்ஏ ஆனார். 2020ல் மாநிலத்தின் உயர் கல்வி அமைச்சராக பதவியேற்றார்.
மோகன் யாதவ் பி.எஸ்சி., எல்.எல்.பி மற்றும் அரசியல் அறிவியலில் எம்.கே. பட்டம் வாங்கியுள்ளார். இதுதவிர எம்பிஏ மற்றும் பிஎச்டியும் செய்துள்ளார்.
பூனம் சந்த் யாதவின் மகன் மோகன் யாதவ் 1965-இல் பிறந்தார்.
மோகன் யாதவின் மனைவி பெயர் சீமா யாதவ். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
ஊடகங்களிடம் பேச மறுத்த சிவ்ராஜ் சிங் சவுகான்
எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், பதவி விலகும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மோகன் யாதவ் பெயரை முன்மொழிந்ததாகவும், பின்னர் அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய முதல்வர் சிவராஜ் சிங்கிடம் ஊடகங்கள் கேள்வி கேட்க முயற்சித்தன. ஆனால் அவர் எதையும் கூற மறுத்துவிட்டார்.
இந்த அறிவிப்புக்கு முன்பு நரேந்திர தோமர், பிரஹலாத் படேல் போன்ற பாஜக தலைவர்களின் பெயர்கள் முதல்வர் பதவிக்கான போட்டியில் சேர்க்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
மத்திய பிரதேசத்தில் டிசம்பர் 3ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. டிசம்பர் 12ம் தேதி புதிய எம்எல்ஏக்கள் கூட்டம் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் மற்றும் மூன்று பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.
மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் திங்கள்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் அவரது பெயர் அங்கீகரிக்கப்பட்டது. ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் 3 மத்திய பார்வையாளர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பட மூலாதாரம், @CHOUHANSHIVRAJ
“இதுதான் பாரதிய ஜனதா கட்சி”
உஜ்ஜைன் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் மோகன் யாதவ், அனைத்து அரசியல் நோக்கர்களையும் வியப்பில் ஆழ்த்தி முதல்வர் பதவியை அடைந்திருக்கிறார். மாநில ஆளுநர் மங்குபாய் படேலை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
முன்னதாக சிவராஜ் சிங் சவுகான் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்தார்.
முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு மோகன் யாதவ் கூறுகையில், “என்னைப் போன்ற சிறிய தலைவருக்கு இதுபோன்ற பொறுப்பை வழங்கிய மத்திய, மாநில தலைமைக்கு நன்றி. இதுதான் பாரதிய ஜனதா கட்சி. இந்த பொறுப்பிற்கு நான் தகுதியானவன் இல்லை என்றாலும் உங்கள் அன்பும், ஆசியும், ஆதரவும் கிடைத்தால் கண்டிப்பாக என்னால் முடிந்த வரை முயற்சி செய்வேன். உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி”, என அவர் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சிக்கான கனவை நிறைவேற்றி முன்னேறுவோம் என மோகன் யாதவ் தெரிவித்தார்.
முதல்வராக மோகன் யாதவை நியமிப்பதாக அறிவித்த மத்தியப் பிரதேச பாஜக தலைவர் பி.டி.சர்மா, சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் பதவிக்கு அவரது பெயர் முன்மொழியப்பட்டதாகக் கூறினார். நரேந்திர சிங் தோமர், கைலாஷ் விஜயவர்கியா மற்றும் பிரஹலாத் படேல் போன்ற அனைத்து மூத்த தலைவர்களும் கலந்துரையாடலின் போது உடனிருந்தனர்.

பட மூலாதாரம், X/DRMOHANYADAV51
பா.ஜ.க. வியூகம் என்ன?
மோகன் யாதவை முதல்வராக தேர்வு செய்ததன் மூலம் பல காய்களை நகர்த்த பாஜக முயற்சித்திருப்பதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
பிகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் வெளியானதில் இருந்து, எதிர்க்கட்சிகளான ‘இந்தியா’ மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) பிரதிநிதித்துவ பிரச்னையை எழுப்பி வருகிறது.
சிவராஜ் சிங் சவுகான் ஓபிசி வகுப்பைச் சேர்ந்தவர். அவருக்குப் பதிலாக முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள மோகன் யாதவும் ஓபிசி வகுப்பைச் சேர்ந்தவர் தான். இவரின் நியமனத்தின் மூலம் பிகார் மற்றும் உத்தரபிரதேசத்திலும் பா.ஜ.க கவனம் செலுத்தி வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
சிவராஜ் சிங் சவுகானின் ஆட்சிக்கு எதிராக மக்கள் மத்தியில் அதிருப்தி உருவானதால்தான் அவருக்கு பதில் இந்த முறை புதிய முகத்தை கொண்டு வந்து நிறுத்த பாஜக முயற்சிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்