
பட மூலாதாரம், Getty Images
ஸ்ரேயாஸ், கேஎல் ராகுல் சதம், ரோஹித், கில், கோலி அரைசதம் ஆகியோரின் பங்களிப்பால் நெதர்லாந்து அணி எட்டமுடியாத வகையில் 411 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
பெங்களூருவில் நடந்துவரும் உலகக் கோப்பைத் தொடரின் கடைசி லீக் ஆட்ட்தில் இந்திய அணியை எதிர்த்து நெதர்லாந்து அணி ஆடி வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 410 ரன்கள் எனும் இமாலய ரன் குவிப்பை எட்டியுள்ளது.
ஸ்ரேயாஸ் அய்யர் 128(நாட்அவுட்), கே.எல்.ராகுல்(102), கில்(51), ரோஹித் சர்மா(61), கோலி(51) என 5 பேட்டர்களும் ஆகச்சிறந்த பங்களிப்பு செய்ததால் மிகப்பெரிய இலக்கை இந்திய அணி எட்டியது.
ரோஹித் – கில் கூட்டணி அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை அடுத்துவந்த கோலி நன்கு பயன்படுத்தி ரன்களைக் குவித்தார். தொடக்கத்தில் நிதானத்தைக் கடைபிடித்த கோலி, அதன்பின் மின்னல் வேகத்தில் ரன்களைச் சேர்த்தார். 4வது விக்கெட்டுக்கு ராகுல், ஸ்ரேயாஸ் கூட்டணி இந்திய அணியின் ஸ்கோரை எட்ட முடியாத நிலைக்கு கொண்டு சென்றனர்.
பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் நெதர்லாந்து அணியின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. பந்து நன்றாக பேட்டர்களை நோக்கி எழும்பி வந்ததால், ஷாட்களை அடிக்க வசதியாக இருந்தது. இதனால் விக்கெட்டுகளை வீழ்த்துவது கடினமாக இருந்தது.
டாஸ் வென்று இந்தியா முதல் பேட்டிங்
நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணி ஏற்கெனவே அரையிறுதிக்கு முதல் அணியாகத் தகுதி பெற்றுவிட்ட நிலையில் இந்த ஆட்டம் வெறும் சம்பிரதாயமான ஒன்றாகவே அமைந்துள்ளது. இருப்பினும் எந்த ஆட்டத்தையும் இந்திய அணி குறைத்து மதிப்பிடவில்லை என்பதால் நெதர்லாந்துக்கு எதிரான இந்த ஆட்டத்திலும் முழு பலத்துடன் களமிறங்கியது. பும்ரா, ஷமி, சிராஜ் ஆகிய 3 வேகப்பந்துவீச்சாளர்கள், ஜடேஜா, குல்தீப் ஆகியோருடன் இந்திய அணி களமிறங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். இந்திய அணியில் எந்தவிதமான மாற்றமும் செய்யவில்லை.

பட மூலாதாரம், Getty Images
கில், ரோஹித் விளாசல்
ரோஹித் சர்மா, கில் ஆட்டத்தைத் தொடங்கினர். தத் வீசிய முதல் ஓவரிலேயே ரோஹித் 2 பவுண்டரிகளை விளாசி 11 ரன்களைக் குவித்தார். ஆர்யன் தத் வீசிய 5-வது ஓவரிலும் ரோஹித் சர்மா 2 பவுண்டரிகளை அடித்து ரன்ரேட்டை உயர்த்தினார். அதன்பின் கில் அதிரடியில் இறங்கி நெதர்லாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கினார்.
வேன் பிரீக் வீசிய 6-வது ஓவரில் கில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகல் உள்ளிட்ட 16 ரன்கள் சேர்த்தார். ஆக்கர் மேன் வீசிய 7-வது ஓவரில் ரோஹித் சர்மா பவுண்டரி, சிக்ஸர் உள்பட 10 ரன்கள் சேர்த்ததால், ரன்ரேட் 9 ரன்கள் வீதத்தில் உயர்ந்தது. வேன் மீக்ரன் வீசிய 10-வது ஓவரில் கில் பவுண்டரி, சிக்ஸர் என 10 ரன்கள் சேர்த்தார்.
பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 91 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய சுப்மான்கில் 30 பந்துகளில் அரைசதம் அடித்தார். 12வது ஓவரில் இந்திய அணி 100 ரன்களைக் கடந்தது. சுப்மான் கில் அரைசதம் அடித்தபின் நீண்டநேரம் நிலைக்கவில்லை.
வேன் மீக்ரன் வீசிய 12-வது ஓவரில் நிதானமானாருவிடம் கேட்ச் கொடுத்து கில் 51ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்து கில்-ரோஹித் சர்மா கூட்டணி பிரிந்தனர்.
அடுத்துவந்த விராட் கோலி, ரோஹித்துடன் இணைந்தார். அரைசதத்தை நெருங்கிய ரோஹித் சர்மா 44 பந்துகளில் வேன் மீக்கரன் வீசிய 14-வது ஓவரில் பவுண்டரி விளாசி அரைசதம் அடித்தார்.

பட மூலாதாரம், Getty Images
அதிக சிக்ஸர் சாதனை
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா புதிய மைல்கல்லை இன்று எட்டினார். ஒரு காலண்டர் ஆண்டில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா எட்டினார். இதற்கு முன்2015ம் ஆண்டு, தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ் ஒரு காலண்டர் ஆண்டில் 18 இன்னிங்ஸில் 58 சிக்ஸர்கள் விளாசி அதிகபட்ச சிக்ஸர் சாதனையை வைத்திருந்தார், அதை முறியடித்த ரோஹித் சர்மா 24 இன்னிங்ஸில் 59 சிக்ஸர்களை விளாசினார்.

பட மூலாதாரம், Getty Images
கங்குலியின் 20 ஆண்டு சாதனை தகர்ப்பு
அது மட்டுமல்லாமல் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் 20 ஆண்டுகால சாதனையையும் ரோஹித் சர்மா தகர்த்துவிட்டார். உலகக் கோப்பைத் தொடரில் அதிக ரன்களை விளாசிய கேப்டன் என்ற வகையில் கங்குலியின் சாதனையை ரோகித் சர்மா தகர்த்தார். 2003 உலகக் கோப்பைத் தொடரில் கங்குலி 11 இன்னிங்ஸில் 465 ரன்கள் சேர்த்திருந்தார். ஆனால் இந்த உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித் சர்மா 9 இன்னிங்ஸில் 503 ரன்கள் சேர்த்து கங்குலியின் 20 ஆண்டுகால சாதனையை தகர்த்தார். இதில் ஒரு சதம், 3 அரைசதங்களும் அடங்கும்.
அரைசதம் கடந்து நிதானமாக ஆடிவந்த ரோஹித் சர்மா 18-வது ஓவரில் விக்கெட்டை இழந்தார். டீ லீட் வீசிய 18வது ஓவரில் லாங் ஆன் திசையில் பரேசியிடம் கேட்ச் கொடுத்து 61 ரன்னில் (2சிக்ஸர்,8பவுண்டரி) ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஸ்ரேயாஸ் அய்யர், கோலியுடன் சேர்ந்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் சேர்த்தது.

பட மூலாதாரம், Getty Images
கோலி அரைசதம்
தொடக்கத்தில் விராட் கோலி நிதானமாக பேட் செய்து ரன்களைச் சேர்த்தார். அதன்பின் கோலி அதிரடியில் இறங்கினார். வேன் பீக்வீசிய 22-வது ஓவரில் கோலி ஒரு சிக்ஸர், பவுண்டரி என 11 ரன்கள் சேர்த்தார். அதன்பின் ஓவருக்கு ஒரு பவுண்டரியை கோலி விளாசினார்.
நிதானமாக ஆடிய கோலி 53 பந்துகளி்ல் ஒருநாள் போட்டியில் 71-வது அரைசதத்தை நிறைவு செய்தார். முதல் 18 பந்துகளில் 7 ரன்கள் சேர்த்திருந்த கோலி அதன்பின் ரன் சேர்க்கும் கியரை மாற்றி, அடுத்த 35 பந்துகளில் 4 3ரன்கள் சேர்த்தார்.
இந்திய அணி 29-வது ஓவரில் 200 ரன்களை எட்டியவுடன் விராட் கோலி தனது விக்கெட்டை இழந்தார். வேன் டெர் மெர்வ் வீசிய சுழற்பந்துவீச்சை கணிக்கத் தவறியதால் க்ளீன் போல்டாகி 51 ரன்னில் கோலி ஆட்டமிழந்தார். விராட் கோலி ஆட்டமிழந்தவுடன் அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் சில நிமிடங்கள் மவுனமாகினர். அதன்பின் கோலிக்கு வழக்கம் போல் கைதட்டி வழியனுப்பினர். 3வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ், கோலி கூட்டணி 71 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
அடுத்துவந்த கேஎல் ராகுல், ஸ்ரேயாஸுடன் சேர்ந்தார். ராகுலுக்கு இது சொந்த மண் என்பதால் களமிறங்கும்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்தது. 30 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் சேர்த்தது.

பட மூலாதாரம், Getty Images
ஸ்ரேயாஸ் – ராகுல் சதம்
மிகுந்த பொறுமையாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் 84 பந்துகளி்ல் சதம் அடித்தார். உலகக் கோப்பைத் தொடரில் ஸ்ரேயாஸ் அடித்த முதல் சதம் இதுவாகும். ஒரு நாள் போட்டியில் ஸ்ரேயாஸ் அடித்த 4வது சதம் இது. அது மட்டுமல்லாமல் நெதர்லாந்து அணிக்கு எதிராக சதம் அடித்த முதல் இந்திய பேட்டரும் ஸ்ரேயாஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
டீ லீட் வீசிய 34-வது ஓவரில் 2 பவுண்டரிகள் விளாசி, ஸ்ரேயாஸ் அய்யர் 48 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதன்பின் ஸ்ரேயாஸும், ராகுலம் ஓவருக்கு ஒரு பவுண்டரி விளாசி ரன்ரேட்டை உயர்த்தினர். 40 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் சேர்த்தது.
41-வது ஓவரிலிருந்து ராகுல், ஸ்ரேயாஸ் அதிரடி ஆட்டத்தைக் கையாண்டனர். வேன் பீக் வீசிய 41-வது ஓவரில் ராகுல் 2 பவுண்டரிகளை விளாசினார். நிதான ஆட்டத்தைக் கையாண்ட ராகுலும், 40 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்திய அணி 42-வது ஓவரில் 300 ரன்களைக் கடந்தது.
அரைசதம் அடித்த பின் ராகுலின் பேட்டிங்கில் அனல் பறந்தது. வேன் மீக்ரன் வீசிய 44-வது ஓவரில் ஸ்குயர்லெக் திசையில் ஒரு சிக்ஸரை ராகுல் விளாசிய நிலையில் லாங்ஆன் திசையில் ஸ்ரேயாஸ் அய்யர் சிக்ஸர் விளாசினார்.
வேன் பீக் வீசிய 47-வது ஓவரில் ராகுல் ஒரு சிக்ஸர், பவுண்டரி என விளாசினார். 49-வது ஓவரை வீசிய வேன் பீக் ஓவரில் ஸ்ரேயாஸ் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 25 ரன்களை வெளுத்துவாங்கினார்.
டீ லீட் வீசிய 50வது ஓவரில் ராகுல் 2 சிக்ஸர்களை விளாசி 62 பந்துகளி்ல் சதம் அடித்து 102 ரன்களில்(4சிக்ஸர், 11பவுண்டரி) ஆட்டமிழந்தார். 4வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ், ராகுல் கூட்டணி 208 ரன்கள் சேர்த்தனர்.
இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 410 ரன்கள் சேர்த்தது. ஸ்ரோயஸ் அய்யர் 128 ரன்களுடனும்(94 பந்துகள், 5 சிக்ஸர், 10பவுண்டரி), சூர்யகுமார் 2 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி 10 ஓவர்களில் மட்டும் இந்திய அணி 126 ரன்கள் சேர்த்தது.

பட மூலாதாரம், Getty Images
புதிய சாதனை படைத்த இந்திய அணி
இதன் மூலம் இந்திய அணி உலகக் கோப்பைத் தொடரில் புதிய சாதனையைப் படைத்தது. ஒரு அணியில் உள்ள டாப்-5 பேட்டர்கள் அரைசதம் அடித்தது இதுதான் முதல்முறையாகும். இதற்கு முன் எந்த அணியில் உள்ள டாப்-5 பேட்டர்களும் அரைசதம் அடித்தது இல்லை.
3 பேர் 279 ரன்கள்
நெதர்லாந்து தரப்பில் பாஸ் டீ லீட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வேன் டெர் மெர் மட்டுமே மிகக்குறைவாக ஓவருக்கு 5 ரன்கள் வீதம் வழங்கினார். மற்ற பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை இந்திய பேட்டர்கள் நொறுக்கி அள்ளினர். அதிலும் வேன் பீக், மீக்ரன், பாஸ் டி லீட் ஆகியோர் ஓவருக்கு 9 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். இந்த 3 பந்துவீச்சாளர்கள் மட்டுமே 279 ரன்களை வாரி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Getty Images
கோலி சாதிப்பாரா?
விராட் கோலி இதுவரை 4 உலகக் கோப்பைத் தொடர்களில் விளையாடியுள்ளார். இதில் மொத்தம் லீக் போட்டிகளில் மட்டும் 29 இன்னிங்ஸ்களில் 1551 ரன்கள் சே்ரத்து 70.5 சராசரி வைத்துள்ளார். இதில் 15 முறை 50 ரன்களுக்கு அதிகமாகவும், 4 சதங்களும் அடங்கும்.
ஆனால், நாக்அவுட் போட்டிகளில் கோலி சொதப்பியுள்ளார். இதுவரை 6 இன்னிங்ஸ்களில் 68 ரன்கள் மட்டுமே சேர்த்து 11 சராசரி மட்டுமே கோலி வைத்துள்ளார். 2015, 2019 ஆகியவற்றில் 3 போட்டிகளில் 5 ரன்கள் மட்டுமே கோலி சேர்த்துள்ளார். இந்த முறை அரையிறுதிப் போட்டிகளி்ல் கோலி தனது வழக்கமான ஃபார்மில் விளையாடுவாரா அல்லது கடந்த காலத்தில் நிலவிய சோகம் தொடருமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்