நாட்டின் பெயரைக் குறிப்பிடும்போது இந்தியா என்ற பெயருக்குப் பதிலாக பாரத் என்ற பெயரைக் குறிப்பிட ஆரம்பித்திருக்கிறது ஆளும் பா.ஜ.க. அரசு. பிரிட்டிஷ்காரர்கள் உள்ளிட்ட அந்நியர்கள் சூட்டிய பெயர் என்பதால் அதைத் தவிர்ப்பதாகச் அதன் தலைவர்கள் கூறுகிறார்கள். உண்மையில் இந்தப் பெயர் எப்படி வந்தது?
இந்தியா என்ற பெயரின் துவக்கம் என்ன?
இந்தியாவை ஆட்சி செய்துவந்த பிரிட்டிஷ் அரசு, இந்திய சுதந்திர சட்டம் (Indian Independence Act), 1947 என்ற சட்டத்தின் மூலம், இந்தியாவுக்கு சுதந்திரம் அளித்தது. இதன் மூலம் இந்தியா, பாகிஸ்தான் என்ற இரு நாடுகள் பிறந்தன.
முகமது அலி ஜின்னா உள்ளிட்ட முஸ்லீம் லீக் தலைவர்கள் இந்தியாவிலிருந்து பிரிந்து செல்லும் நாட்டிற்கு பாகிஸ்தான் என்பதை எப்போதோ முடிவு செய்துவிட்டனர். ஆனால், இந்தியப் பகுதி இந்தியா என்று அழைக்கப்படும் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
இது குறித்து, ஜான் கீ எழுதிய India A History விரிவாகவே குறிப்பிடுகிறது. “இரு நாடுகளுமே பிரிட்டிஷாரின் கீழிருந்த நாட்டின் பெயரான இந்தியா என்ற பெயரை விரும்பமாட்டார்கள் என ஜின்னா கருதினார். ஆனால், தங்கள் நாட்டிற்கு இந்தியா என்ற பெயரே நீடிக்க வேண்டுமென்ற நேருவின் கோரிக்கைக்கு கடைசி பிரிட்டிஷ் வைசிராயான மௌன்ட்பேட்டன் ஒப்புக்கொண்டிருப்பதை அறிந்த பிறகுதான் ஜின்னா தனது தவறை உணர்ந்தார். அந்தப் பெயரைப் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் துணைக் கண்ட மேலாதிக்கத்தை பாகிஸ்தான் ஏற்காது” என்கிறார் ஜான் கீ.
ஆகவே பாகிஸ்தானின் தலைவர்களைப் பொறுத்தவரை, இந்தியா என்ற பெயரை இந்தியா பயன்படுத்தக்கூடாது என்றுதான் நினைத்தார்கள்.
பிரிட்டிஷார் வைத்ததா இந்தியா என்ற பெயர்?
இந்தியா என்ற இந்தப் பெயரின் தோற்றம் குறித்து, பல ஆய்வுகள் நடந்திருக்கின்றன. வலதுசாரிகளைப் பொறுத்தவரை, இந்தியா என்ற பெயர், பிரிட்டிஷ்காரர்களால் இந்த நிலப்பரப்புக்கு அளிக்கப்பட்ட பெயராகக் கருதுகிறார்கள்.
ஆனால், நீண்ட காலமாகவே இந்தியா என்ற பெயர் இந்த பரந்த நிலப்பரப்பை குறிக்க பயன்பட்டிருக்கிறது. தற்போதைய ஈரான் கி.மு. ஐந்தாம் – ஆறாம் நூற்றாண்டில் அகெமீனியப் பேரரசு என்று அழைக்கப்பட்டது.
அந்தப் பேரரசை மகா டேரியஸ் என்ற மன்னன் ஆண்டபோது, வெட்டப்பட்ட கல்வெட்டுகள் சில கிடைத்தன. இந்தக் கல்வெட்டுகள், டேரியஸின் வெற்றிகள் குறித்துப் பேசும்போது, இந்தியாவையும் அவன் வெற்றிகொண்டதாக குறிப்பிடுகின்றன.
“Proclaims Darius the King: This (is) the empire that I hold, from the Scythians, who (are) beyond Sogdia, to Kush (Nubia), from India to Lydia (and) that Ahuramazdā granted me, who (is) greatest among the gods” என்று அந்தக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் கிரேக்க நாட்டில் சிந்து நதி பாயும் பகுதிகளே உலகின் கிழக்கு எல்லையாகக் குறிப்பிடப்பட்டன. அந்த காலகட்டத்தில் வாழ்ந்த ஹெரொடோட்டஸ், இந்த நிலப்பரப்பைப் பற்றிக் குறிப்பிடும்போது hē Hindikē chōrē என்று அதாவது “சிந்து நிலப்பகுதி” என்று குறிப்பிடுகிறார். ஆனால், இந்தியாவின் நிலப்பரப்பு குறித்து அந்தக் கால கிரேக்கர்களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை.
“இந்தியாவைப் பொறுத்தவரை ஆசியாவில் மனிதர்கள் வசிக்கிறார்கள். அதற்கு அப்பாலுள்ள கிழக்குப் பகுதியில் யாரும் இல்லை. அது எம்மாதிரி நிலப்பரப்பு என யாரும் சொல்ல முடியாது” என்கிறார் ஹெரொடோட்டஸ்.
இதற்குப் பிறகு, இந்தியா என்ற பெயர் பிரபலமாக அடிபடுவது, கி.மு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்கப் பயணியான மெகஸ்தனிஸின் Indica என்ற நூலில்தான். பேரரசர் செல்யூகஸ் நிகாடரின் தூதராக சந்திரகுப்த மௌரியரின் அவைக்கு வருகை தந்த மெகஸ்தனிஸ், இந்தியாவின் நிலப்பரப்பைக் கிட்டத்தட்ட அறிந்திருந்தார். கிழக்கிலும் தெற்கிலும் கடல் சூழ்ந்த பகுதியாகவும் மேற்கில் சிந்து நதி பாய்ந்ததாகவும் அவர் கருதினார். கி.மு. 310வாக்கில் வட இந்தியப் பகுதிகள் சிலவற்றைப் பற்றிய சித்திரத்தை இந்த நூல் தருகிறது. இந்தியத் துணைக் கண்டப் பரப்பை இந்தியா என்றே இந்த நூல் குறிப்பிடுகிறது.
மகா அலெக்ஸாண்டர் இந்திய நிலப்பரப்பை நோக்கிப் படையெடுத்தபோது, சிந்து நதிக்கு அப்பாற்பட்ட பகுதிகளின் பெயர் இந்தியா என்று கிரேக்கத்தில் நிலைபெற்றுவிட்டது. அவருக்குப் பிறகு கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பிந்துசாரர் அல்லது அசோகரின் காலகட்டத்தில் டையோனீசியஸ் இந்தியாவுக்கு வந்தார். அவர் ‘இந்தியா’ குறித்து எழுதியிருப்பதாக பிளினி (Pliny the Elder) குறிப்பிடுகிறார்.
ஆகவே, கிறிஸ்துவின் பிறப்பிற்கு முன்பே சிந்து நதிக்கு அப்பால் உள்ள நிலப்பரப்புகளைக் குறிக்க இந்தியா என்ற சொல் பிறந்துவிட்டது.
இந்தியா என்ற சொல் எப்படி உருவானது?
இதற்கு பரவலாக அளிக்கபடும் ஒரு விளக்கம் இருக்கிறது. அதாவது, ‘சிந்து’ என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு உள்ள பல அர்த்தங்களில் ‘ஆறு’ என்பதும் ஒரு அர்த்தம். இந்த சிந்து என்ற சொல்லின் முதல் ஒலிப்பான S, பெர்ஷிய மொழியில் Hஆக மாறுகிறது. உதாரணமாக, போதை ஏற்றும் பானமான ‘சோம’ பெர்ஷிய மொழியில் ‘ஹோம’ என்று மாறுகிறது. அதைப் போலவே, ‘சிந்து’ என்ற வார்த்தை ‘ஹிந்த்’ ஆக மாறுகிறது. இந்த வார்த்தை மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து கிரேக்கத்திற்குச் செல்லும்போது, இந்த வார்த்தையின் துவக்கத்தில் உள்ள H என்ற ஒலிப்பு நீங்கி, ‘இந்த்’ ஆக மாறி, பிற ஐரோப்பிய மொழிகளுக்கும் பரவியது. ஆகவே, ஏழு நதிகள் பாயும் பிரதேசத்திற்கு அப்பால் உள்ள பகுதி, ‘இந்த்’, ‘இந்தியா’ என்று அழைக்கப்படத் துவங்கியது.
சிந்து என்பது எப்படி கிரேக்கத்திலிருந்து ஐரோப்பிய மொழிகளுக்குச் செல்லும்போது இந்தியா என மாறியதோ, அதேபோல பெர்ஷிய, அரேபிய மொழிகளில் ஹிந்த் என்பதாக நீடித்தது. கிட்டத்தட்ட மூன்றாம் நூற்றாண்டுவாக்கில், ஈரானின் ஷாஷநீத பேரரசர் முதலாம் ஷபூர் கால கல்வெட்டுகளில் ஹிந்துஸ்தான் என்ற வார்த்தை, இடம்பெற்றிருந்ததாக The Foreign Names of the Indian Subcontinent புத்தகத்தில் குறிப்பிடுகிறார் ப்ரதீந்திரநாத் முகர்ஜி.
அதற்குப் பிறகு, இஸ்லாமிய அரசர்கள் இந்திய நிலப்பரப்பை இந்துஸ்தான் என்ற வார்த்தையின் மூலமே குறிப்பிடத்துவங்கினர். பாபர், அக்பர் போன்ற பேரரசர்கள் இந்துஸ்தான் என்ற வார்த்தைகளையே தங்கள் எழுத்துகளில் பயன்படுத்தினர்.
அதே நேரம் ஐரோப்பாவில் கிழக்கில் உள்ள நிலப்பரப்புகளைக் குறிக்க, இந்தியாவில் இருந்து உருவான East Indies என்ற வார்த்தை பயன்பாட்டுக்கு வந்தது. இதன் காரணமாகவே, இந்தியாவுக்கு கடல் வழியைத் தேடிச் சென்ற கொலம்பஸ் மத்திய அமெரிக்கத் தீவுகளை இந்தியா எனக் கருதினார். அங்கிருந்த மக்களுக்கு இன்டீயோஸ் (Los Indios) என்று பெயரிட்டார்.
17ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் கீழ் திசையில் வர்த்தகம் செய்ய விரும்பிய நாடுகள் அனைத்தும் தங்கள் நிறுவனங்களுக்கு “கிழக்கிந்திய” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினர். 17-18ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் இந்தியாவில் வலுவாகக் காலூன்றிய பிறகு, இந்தியத் துணைக்கண்ட நிலப்பரப்பு அனைத்துமே ‘இந்தியா’ என்று அழைக்கப்படுவது பரவலாகிவிட்டது. அதற்குப் பிறகு அந்தப் பெயரைப் பயன்படுத்துவது இயல்பாகவும் மாறிவிட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்